Monday, November 1, 2010

வரைபடம்

குறைந்த பட்ச பயணக்குறிப்புகளோடு ...
புறப்பட்டதொரு வண்ணத்துப்பூச்சி
காற்று நுழையாத பிராந்தியம்
கண்டறிவதாய்...உறுதியும் அவற்றில்
களைப்பின் உச்சத்தில்...
நாணலொன்றின் மெல்லிய நரம்பு பற்றியமர்ந்து
சிலாகித்துப்போவது பற்றியும்..
திரும்பி வரும் திசையுணர
காற்றின் மீது கோடுகள் கிழித்துச்செல்வதும்
வலியறியும் போது றெக்கைகள் கழற்றி...
உதிரும் சருகொன்றின் மீது ஒட்ட வைப்பதாகவும்
வழியில் பெய்ய நேரிடும் மழைத்துளிப்பட்டு
கசிந்துருகும் அபாயம் உள்ளதால்
வர்ணங்களைக்கூட சீசாக்களில் அடைத்துவிடுவது பற்றியும்
இன்ன பிறவும்...
பயண நடுவில் எடுத்துச்செல்ல மறந்து போன குறிப்பு தேடி..
வருகையில்தான் நேர்ந்திருக்கக் கூடுமது.
கோடுகள் கொண்டு வீடமைத்து
றெக்கைகளால் கூடாரம் செய்து...
உள் அமர்ந்து வர்ணங்கள் கொண்டு
வண்ணத்துப்பூச்சியொன்றை குழந்தைகள்
வரைந்துக்கொண்டிருந்தது.

No comments: