Sunday, April 4, 2010

திசைகளை தீர்மானிப்பது காற்று!

சுற்றிலும் வயல்வெளிகள், பச்சை உடை உடுத்தி, தங்களது மகிழ்ச்சியை வழிப்போக்கர்களுக்கெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தது. வெள்ளை கொக்குகளும், நாரைகளும் தரையிரங்கி, காற்றோடு விளையாடி, ரீங்காரமிடும் பயிர்களோடு, கைகோர்த்துவிடும் குதூகலமான பொழுது அது.

நாங்கள் அந்தப் பள்ளிக்கூட வளாகத்திற்குள் நுழையும்போது, புங்கமர கிளைகளில் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்த பத்து, பதினைந்து காக்கைகளோடு,சில குழந்தைகள் ஏதோ, முணுமுனுத்துக்கொண்டிருந்தனர்.

பள்ளிக்கூடமென்றால், நாங்கள் நினைத்துக்கொண்டிருந்த மாதிரி அதாவது கட்டிடகாடுகளுக்குள், காற்று நுழையாமல் கண்ணாடிக்கொண்டு தடைகள் செய்து, பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்களுக்கு, பரீட்சை நடத்தும் பள்ளிக்கூடமாக இல்லை.

இதுவரை நாங்களும், பல பள்ளிக்கூடங்களுக்கும் போயிருக்கிறோம். அங்கெல்லாம், கொளுத்தும் வெயிலிலும், குழந்தைகள் கால்களில் ஷூவும், கழுத்தில் டையும் கட்டிக்கொண்டு, ராணுவ வீரர்களுக்குறிய ஒழுக்கத்தோடு நடக்க, ஆசிரியர்களால் நிர்பந்திக்கப்பட்டிருப்பார்கள். பாவமாக இருக்கும் அங்குள்ள குழந்தைகளை பார்ப்பதற்கே.
ஆனால் பாருங்க, இங்க அப்படிப்பட்ட குழந்தைகள் ஒருத்தரையுமே காணவில்லை. பசியோடிருக்கும் குழந்தைகளின் கால்களுக்கு, எப்பொழுதும் விளையாட்டு என்ற உற்சாகத்தைக்கொட்டி, திருப்திபடுத்திக்கொண்டேயிருக்கும், இப்பள்ளி மைதானம் எங்குமே குழந்தைகள் எந்த வித கட்டுப்பாடும் இன்றி சுதந்திரமாகவே திரிகிறார்கள்.
காலை நேர சூரியன் உமிழும் வெப்பத்தை தனது மொட்டைத்தலையில் வாங்கிக்கொண்டு, கம்பீரமாய் நிற்கிறது, இப்பள்ளி கட்டிடம். குழந்தைகள் கோழி கூடும், மணல்வீடும் கட்டி விளையாட ஏதுவாய், தனது முகப்பில் நிழற்பரப்பி, குழந்தைகளின் நேர்மையினை தினம், தினம் ரசித்து உற்சாகமடைகிறது அப்பள்ளி கட்டிடம். வறுமையால் தான் அழகுப்படாமல் இருப்பது குறித்து எவ்வித வருத்தமும் கொள்வதில்லை அப்பள்ளி கட்டிடம். இங்குள்ள குழந்தைகளின் வளர்ச்சிக்காய் தன்னையும், ஒரு ஊழியக்காரனாய் பொருத்திக்கொண்டு அகம் மகிழ்ந்துக்கொண்டிருந்தது.

நாங்கள் அவ்வாளகத்திற்குள் நுழைந்து வெகுநேரமாயிருந்தது. நேரம், ஆக, ஆக குழந்தைகள் பள்ளிக்கட்டிடத்திற்கு எதிரேயிருந்த கொடிக்கம்பத்திற்கு அருகில் ஒருவர் பின் ஒருவராக போய் நின்றுக்கொண்டேயிருந்தனர். இறுதியில் எறும்புகளின் வரிசைபோன்ற நேர்த்தியில் மிக, அழகாக, ஆறேழு வரிசைகளை உருவாக்கிவிட்டிருந்தனர் குழந்தைகள். அவர்களின் முகத்தில் எந்தவிதமான அச்சமோ, தயக்கமோ, கொஞ்சம் கூட இல்லை. இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், நாங்கள் பல பள்ளிக்கூடங்களில் குழந்தைகள் அச்சத்தோடும்,தயக்கத்தோடும் இருப்பதை கண்டிருக்கிறோம். அதனால்தான் இதை நான் பகிர்ந்துக்கொள்ளவேண்டியதாயிற்று.

அதுவரை குழந்தைகளோடு, குழந்தைகளாய், பாடிதிரிந்துக்கொண்டிருந்த, காக்கைகளும், மைனாக்களும், குழந்தைகள் தங்களைவிட்டு பிரிந்து வகுப்பறைக்குள் செல்ல போகிறார்கள் என்று உணர்ந்திருக்கவேண்டும். புங்கமரக்கிளைகளிலும், மழலை மாறாத வேம்பின் மெல்லிய கிளைகளிலும் இருப்புக்கொள்ளாது, அங்குமிங்கும், அலைந்து கத்திக்கொண்டேயிருந்தன.

குழந்தைகளின் மென்மை காயம்படாமல் இருக்க, அதுவரை தனது வெக்கை நிரம்பிய கதிர்களை மறைத்து வைத்திருந்த சூரியன் கூட, அப்பொழுதுதான் வேண்டா வெறுப்பாக, பூமியின் மீது தனது கரங்களை படரவிட்டது.

கொடிக்கம்பத்தின் அருகில் குழந்தைகள் ஆறேழு வரிசையாக காத்துக்கொண்டிருந்தனர். மொகம் நிறைஞ்ச பரவசத்தோடு, அவர்கள் முன் வந்து சேர்ந்த ஆசிரியைகள், வழிபாட்டுக்கூட்டத்தை நடத்துவதற்கான ஆயத்தங்களோடு நின்றுக்கொண்டிருந்தனர்.
என்ன இது, தமிழ்தாய் வாழ்த்து, உறுதிமொழி வாழ்த்து, நாட்டுப்பண் இவற்றை உள்ளடக்கிய வழிபாட்டுக்கூட்டத்திற்குப்போய் குழந்தைகளை காக்கவைத்துக்கொண்டிருக்கிறார்களே! என்று நாங்களும், பொறுமையிழந்து நெளிய ஆரம்பித்துவிட்டோம்.

என்ன ஆச்சர்யம் பாருங்கள், அங்குள்ள குழந்தைகளில் யாருமே நின்றுக்கொண்டிருப்பது பற்றி வருத்தப்படவேயில்லை. மிகுந்த உற்சாகத்தோடு இருந்த அக்குழந்தைகளின் கண்கள், எதையோ நிரம்ப எதிர்ப்பார்த்து காத்துக்கிடந்தன.

எந்தவொரு உதவியாளர்களையும் கூப்பிடாமல், இரண்டு ஆசிரியைகள் சேர்ந்து ஒரு சிறிய, பாதுகாப்பான பெஞ்ச் ஒன்றைத் தூக்கிவந்து வரிசையாக நின்றுக்கொண்டிருந்த குழந்தைகள் எல்லோரையும் மையப்படுத்தி அவர்கள் முன் வைத்தனர்.
பெஞ்ச் வந்து சேர்ந்ததும், எல்லா குழந்தைகளும், உற்சாகமாய் குரல் எழுப்பினர். கைகளை தட்டி தங்களது மகிழ்ச்சியையும் வெளிபடுத்தினர்.
தாங்கள் ஒவ்வொரு நிமிடமும் சந்தோஷமாய் இருப்பதை, பரந்து விரிந்த வயல்வெளிகளுக்கும், அதனை தங்களது மெல்லிய அலகுகளால் எப்பொழுதும் கோதிவிட்டுக்கொண்டிருக்கும், பறவைகள் கூட்டத்திற்கெல்லாம் கூட தெரியப்படுத்தினர்

குழந்தைகள் இப்பள்ளி வளாகத்தின் உன்னதங்களை காற்றுக்கும் சொல்லநினைத்த, புங்கமர இலைகள், அதனோடு கூடி முனுமுனுக்க, காற்றோ கூடுதல் உற்சாகத்தை கொண்டுவந்து போலிகளற்ற குழந்தைகளிடம் தூவிச்சென்றது.

மொத்தம் நூற்றுப்பத்து குழந்தைகளுக்கு, மொத்தமாக எட்டு ஆசிரியர்கள் இருப்பதாகவும், அவர்களில் ஆறுபேர் பெண் ஆசிரியர்கள், இரண்டு பேர் ஆண்கள் என்று ஏதோவொரு மாலைப்பொழுதில், சாமந்திக்குளக்கரை படிக்கட்டுகளில், ரமணி சொல்ல நான் கேட்டிருக்கிறேன்,

ஆனால் வழிபாட்டுக்கூட்டம் உட்பட, சில கூட்ட நிகழ்வுகளை ஆசிரியைகள்தான் சிரமேந்தி நடத்துவார்கள் என்றும் முன்னறிந்திருப்பதால், எனக்கு ஆண் ஆசிரியர்கள் பற்றிய பிரக்ஞையே இல்லை. சரி என்னதான் நடக்கப்போகுது என்று பார்த்துவிடுவோமே என்ற ஆவலில் நான் உட்பட எனது பள்ளி குழந்தைகளும், வேண்டாவெறுப்பாகத்தான் நின்றுக்கொண்டு , அட நாம்ம பண்ணாததயா, இவங்க செய்ய போறாங்க, என்ற அலட்சியத்தோடு, சாதாரணமாய் பார்த்துக்கொண்டிருந்தோம்.

எந்தவொரு குழந்தையையுமே சிறிதும் கூட களங்கப்படுத்திடாத குரலில் ஆழ்ந்த அன்போடு இயல்பாக பேசத்தொடங்கினார் ரம்யா டீச்சர்.

ஹாய்…. குட்டீஸ் எல்லாரும் காலையில சாப்புட்டீங்களா?

ஆம்….ங்…ங்…ங் சாப்புட்டோம் மிஸ் என்ற குரல்கள் வெவ்வேறு அலைவரிசைகளில் ஒலித்து அடங்கியது.

சரி… குட்டீஸ் நாம்ம வழிபாட்டுகூட்டத்த , ஆரம்பிக்கலாமா?
ஆரம்பிக்கலாம்ம்ம்…மிஸ்

ஓ.கே. இப்ப, உங்கள்ல யாராவது ஒருத்தர் வந்து, இந்த பெஞ்ச்மேல நின்னு எதாவதொரு கதைச்சொல்லுங்க பார்க்கலாம்.

மிஸ்.. நான் சொல்றேன் மிஸ், இல்லை, நான் தான் சொல்லுவேன் மிஸ்,
சரி.. உங்கள்ல யாரு ரொம்ப சின்னபிள்ளையோ, அவங்க வந்து முதல்ல கதைச்சொல்லட்டும்,, அப்பறமா, வேற ஒருத்தர் வந்து பாட்டு பாடலாம்.
பிறகு வேறொருத்தர் வந்து ஏதாவது விடுகதை சொல்லலாம். ஓ.கேவா குட்டீஸ் என்றார் ரம்யா மிஸ்…

இவரது பேச்சுக்கு கட்டுப்பட்ட குழந்தைகள் ஒருமித்த குரலில் ஓ.கே மிஸ், ஓ.கே.மிஸ் என்றனர்.

மிஸ், அஜய் பாலாஜி ஒரு கதை சொல்லப்போறானாம் மிஸ்… என்றனர் குழந்தைகள்.
சரி, அஜய் வாங்க என்று சொல்லும்போதே, ரம்யா மிஸ்கிட்ட எந்தவிதமான கூச்சமோ, தயக்கமோ இல்லாம வந்து நின்னான் அஜய் பாலாஜி என்ற அந்த யு.கே.ஜி வகுப்பு படிக்கும் குழந்தை.

வாங்க, வந்து உங்களுக்கான மேடையில ஏறி கதைசொல்லுங்க, அப்படின்னு சொல்லிக்கிட்டே, அஜய் பாலாஜியை தூக்கி பெஞ்ச் மேல நிக்க வச்சாங்க, பக்கத்துல நின்னுக்கிட்டிருந்த காமாட்சி மிஸ்.

அஜய்.. நீங்க என்ன கதை சொல்லப்போறீங்க என்றார், மூன்றாம் வகுப்பு ஆசிரியை பரமேஸ்வரி.

மிஸ்.. நான் பேய் கதை சொல்லப்போறேன் மிஸ்.

ஹாய், குட்டீஸ் நம்ம அஜய் பாலாஜி, இப்ப பேய் கதை சொல்லப்போறாரு, நம்ம எல்லோரும் கவனமா கேட்போமா? என்றார் ரம்யா மிஸ்.

கேப்போம் மிஸ், என்று உற்சாகமாக சொன்னார்கள் மற்ற குழந்தைகள்.

ஓ.கே, அஜய் நீங்க கதையை சொல்லுங்க, நாங்க எல்லாம் ம்..ம் போடுறோம்.

அஜய் பாலாஜி கதையைச்சொல்ல தொடங்கினார்.

ஒரு நாள் சாயந்தரம் நான் , எங்க வூட்டுல தனியா வெளையாடிட்டிருந்தனா! அப்ப என் தங்கச்சி, சோறு வடிச்சு, கொழம்பு வச்சு பக்கத்து வீட்டு பாப்பாக்கூட வெளையாடிட்டு இருந்துச்சு.
அப்ப ரெண்டு பயங்கரமான பேய், வந்து என் தங்கச்சிய மிரட்டுனுச்சா..
என் தங்கச்சி, ஓடி போயிரு, இங்க நிக்காத, நாங்க வெளையாடுற எடத்துல உனக்கென்ன வேலைன்னு அந்த பேய பாத்து கேட்டுச்சு.
அந்த பேய்க, போகாம, என் தங்கச்சியையும், பக்கத்து வீட்டு பாப்பாவையும் பயமுறுத்திக்கிட்டே இருந்துச்சு.
அப்பறமா! அந்த பேய்ங்க ரெண்டும். வொட்காந்த எடத்துலேயே தூங்கி, தூங்கி விழுந்துக்கிட்டிருந்துச்சு.
இதான் சரியான நேரம், அப்படின்னு, நானும், என் தங்கச்சியும் அந்தப்பேய் ரெண்டையும் புடிச்சு, எங்க வூட்டு திண்ணையில, இருந்த தூண்ல கட்டிப்போட்டுட்டோம், அப்படின்னு அஜய் பாலாஜி கதையைச்சொல்லி முடிச்சான்.

அங்குமிங்கும், இருப்புக்கொள்ளாது, அலைந்துக்கொண்டிருந்த, காக்கைகளும், குருவிகளும், இவர்களிடம் நெருங்கிவந்து, ஒளிந்திருந்து கதைக்கேட்டிருக்கவேண்டும்.

அஜய் பாலாஜியை பாராட்டி ஒலித்த கரவொலியில் திளைத்து பறந்தன அவைகள்.

அஜய் பாலாஜி பெஞ்சை விட்டு கீழே இறங்கிய வேகத்தில், மகாஸ்ரீ, கருப்பையன், சினேகா இந்த மூவர் கூட்டணி பெஞ்சில் ஏறி நின்றுக்கொண்டிருந்தனர்.
பாலாஜி கதை சொல்லிட்டாரு, நீங்க, மூணு பேரும் என்ன செய்யப்போறீங்க என்றார் காமாட்சி மிஸ்.

மிஸ், நாங்க பாட்டுப்பாடப்போறோம் மிஸ் என்றனர் அந்த குழந்தைகள்.

சரி… என்ன பாட்டு, சினிமா பாட்டா என்றார் சிரித்துக்கொண்டே ரம்யா மிஸ்…

இல்ல.. மிஸ்

சரி…பாடுங்க…

பரங்கிக்காயை பறிச்சு.
பொடி, பொடியா சீவி
எண்ணெய் விட்டு தாளிச்சு.
சக்கரையை கலந்து
உனக்கு கொஞ்சம், எனக்கு கொஞ்சம் என ஒவ்வொரு வரியாக அவர்கள் பாட, பாட மற்ற குழந்தைகள் கோரஸாக சேர்ந்து பாடவும், பள்ளி வளாகமே மேதமை பொருந்திய , மிகச்சிறந்த ஒன்றை கேட்ட சந்தோஷத்தில் மெய்சிலிர்த்து நின்றது.

நாங்கள் யாருமே ஆடாம, அசையாம அப்படியே நின்னு மெய்மறந்து போய்ட்டோம்.

இவ்வளவுதான் வழிபாட்டு கூட்டம். குழந்தைகளின் மேன்மைகளை இட்டு நிரப்பி, சூழலை குதூகலமாக்கி, குழந்தைகளை அங்கீகரிப்பதைவிட வேறு என்ன வாய்க்கப்போகிறது. கதைகளாலும், ரகசியங்களாலும் சூசகமாய் விரிந்துக்கிடக்கும் இப்பிரபஞ்சத்தில்.
வழக்கமா, எல்லா பள்ளிக்கூடத்திலயும், நடப்பது போல இல்லாமல், நிறையவேறுபாடுகளோடு இருந்தது, அந்த வழிபாட்டுக்கூட்டம். மாற்றங்களையும், குழந்தைகளின் உலகத்தையும், தெரிந்துக்கொள்ள விரும்பாத எங்களுக்கு. அந்த காலை நேரம் புதுவிதமான அனுபவத்தை நிறையவே அள்ளிக்கொடுத்தது.

(இன்னும் பறக்கும்)