Thursday, November 25, 2010

ஆதி சொற்களின் ஆணிவேர் பற்றி…. மேலெழும்பும் அடையாளங்கள்…..


வீட்டிற்குக் கீழிருக்கும் கங்கு- இலக்குமி குமாரன் ஞானதிரவியம், அன்னம் வெளியீடு, பக்கம் 80, விலை ரூ.45
நாடோடி வாழ்க்கை முறையிலிருந்து அரசால் ஆன சமுதாயமாக பரிணமித்தபோது, ஆதி மனித உணர்வு சமூக அழுத்தங்களுக்கும், நெருக்கடிகளுக்கும் உள்ளானது. இத்தகைய அழுத்தங்கள், மனநோய், காக்காய் வலிப்பு, பிளவுண்ட ஆளுமை ஆகியவற்றுடன் ஒப்பிட்டு நோக்குமளவுக்கு பல்வேறு மனநோய்களாக வெளிப்பட்டன.
உணர்வு சார்ந்த கட்டுப்பாட்டை இழக்க நேரிட வைக்குமிந்த மனநோய்கள், ஒரு கடவுளோ அல்லது ஆவியோ மனிதனின் உடலில் புகுந்து அவளை/ அவனை ஆட்கொண்டுவிட்டது என்ற நம்பிக்கை தோன்றவும் வித்திட்டது. இதனைத்தான் நவீன அறிவியல் மனக்கிளர்ச்சி என்ற நவீன சொல்லாடலில் புழங்குகிறது. இத்தகைய மனக்கிளர்ச்சி என்ற சொல் மனிதர்கள் ஆட்கொள்ளப்படும் போக்கைத்தான் முதலில் குறித்தது.
கடந்துபோன சமூக அமைப்பில் இத்தகைய நோய் ஆட்கொள்ளப்பட்டவரை குணப்படுத்தியவன், மந்திரவாதி, பில்லி சூன்யகாரன் அல்லது யோகி என பல அடையாளங்களால் அங்கீகரிக்கப்பட்டார்கள். நீட்சியடைந்து  வரும் சமூக அமைப்பின் இக்காலத்தருணங்களில் மனிதர்களை ஆட்கொண்டு வழிநடத்தும் தற்கால ஆவிகளாக உலகமயம், தாராளமயம், தனியார்மயம் போன்றவற்றை முன்னிறுத்தலாம்.
இவை உருவாக்கும் சமூக அழுத்தங்களாக தனிமை, கூட்டுழைப்பு துண்டாடப்படுதல், நுகர்வு கலாச்சாரத்தில் ஏற்படும் வாழ்வியல் தேவைகள் பூர்த்தியடையாமை, விரக்தியுனூடாக தற்கொலை அல்லது கொலை என்பனவாக பட்டியல் நீள்கிறது. இவற்றை எதிர்கொள்வதற்கும், எதிர்ப்பதற்குமான மனநிலை மாற்றத்தை உற்பத்தி செய்யும் மருத்துவனொருவன் தற்கால சமூக அமைப்பிற்குத் தேவையெனகொள்ளும் பட்சத்தில், அந்த தளத்திலேயே இக்கவிஞரின் பிரவேசித்தல் நிகழ்கிறது.
எந்திரமயமான நகர வாழ்வில் அங்கங்கே நலிவுற்றுக் கிடக்கும் மனிதநேய உணர்வுகளையும், சூட்சுமம் அல்லாத வெகுளித்தனமான கிராமத்து மண்ணையும், அதன் வாழ்வியல் முன்னிறுத்தும் எளிமையான தேவைகளை பூர்த்தி செய்துகொண்டு நகருகிற மனநிலை சகலமும் வணிகமயமாகிப்போன நகரத்து வீதிகளில் எதிர்கொள்ள  நேரிடுகிற நெருக்கடியை ’மீள்வதும் நீட்சியும்; என்ற கவிதை அலங்கார வார்த்தைகளற்று கூறிச்செல்கிறது.
சிதலை என்றொரு கவிதை மூலம் மெக்காலேயின் பொதி, சுமக்கும் கல்வி பாணியை, சாட்டையாலடித்து தோலுரிப்பதோடு மட்டுமின்றி, மாற்று கல்வி முறை குறித்த அவசியத்தையும், உணர்த்திச்செல்கிறது.
பூர்ஷ்வா மனநிலை கொண்ட ஒரு அமைப்பிலோ, நிறுவனத்திலோ பணிபுரிவதிலுள்ள அவஸ்தைகளையும், சுயமரியாதை உணர்வினை சிதைத்து சிரிக்கும்  அதனிடம் வாழ்வியல் நெருக்கடிகளால் கைகட்டி, சேவகம் புரிய வேண்டியதன் நிலை குறித்தும் புலம்பலோடு பரப்பி வைப்பதில் அலகு என்ற கவிதை முக்கியத்துவம் பெறுகின்றது.
கிராமத்து மண்ணில் பண்டமாற்று முறைகளின் தேவைகளும், கூட்டுழைப்பும் இருந்தது. கொஞ்சம் இருக்கிறது. என்பதற்குச் சாட்சியாய் மணல் நிறத்திலிருக்கும் அப்பாவின் வியர்வைத்துளி. ஆணாதிக்கத்தின் பிடியிலும், முதலாளித்துவத்தின் ஆதிக்கத்திலும் பெண்மனம் சிதைக்கப்பட்டு வன்முறைக்குள்ளாக்கப்படும் அரசியல் குறித்து காலந்தோறும் என்ற கவிதை எடுத்தியம்புகிறது. சங்க இலக்கியத்தின் நீட்சியாய் பனம்படும்பனை என்ற கவிதை, கவிஞரின் மூலமாக மனம்படுபனையாக தன்னை மறுவாசிப்பு செய்து கொள்வது மிக நேர்த்தி.
கவிதைத் தொகுப்பு முழுவதும் தேர்ந்தெடுத்துள்ள பாடுபொருளும், மொழியும் தனது மண்ணுடனும், மக்களுடனும் நீடித்த உறவு கொண்டு சஞ்சரிக்கிறது. வீட்டிற்குக் கீழிருக்கும் கங்கு என்ற கவிஞரின் நான்காவது தொகுப்பான இது. அன்றாட சாதாரண பேச்சு வழக்காலும், சொலவடைகளாலும், பழமொழிகளாலும், தன்
னை நிறைத்துக்கொண்டு பிரயாணம் செய்கிறது. இக்கவிதைகளின் தொன்மம், உள்ளடக்கம் மிகப்பழமையாய் கொள்கிறபோதும், இவற்றில் ஆழ்ந்த ஓர் அரசியல் உள்ளடக்கமும் இருக்கிறது. இது முற்றிலும் புதியது. சிறுகதைத் தளத்தில் கண்மனி குணசேகரனுக்கும், அழகியபெரியவனுக்கும், பெருமாள்முருகனுக்கும் வாய்த்திருக்கிற அரசியல் உள்ளடக்கம் .இக்கவிஞருக்கு கவிதையில் சாத்தியமாயிருக்கிறது.( புத்தகம் பேசுது இதழில் வெளி வந்தது)

No comments: