Thursday, November 25, 2010

மீன்காரத்தெரு





ஆகத் துயரங்கள் நிறைந்த மனங்களோடு….
பிரவேசிக்கும் மீன்காரத் தெரு”
மீன்காரத் தெரு(நாவல்), கீரனூர் ஜாகிர் ராஜா, வெளியிட்டோர்:மருதா, 226(188), பாரதி சாலை, ராயப்பேட்டை, சென்னை-600014 விலை ரூ.60/
நிலபிரப்புத்துவ பண்பாட்டு மதிப்பீடுகளுக்குள்ளும், இறுக்கமான மத ஒழுக்கவியல்களுக்குள்ளும், கட்டுப்பட்டிருக்கும், ஒரு பகுதிசார்ந்த இஸ்லாமிய சமூகத்துள்ளிருந்து கருத்திலும், காட்சியிலும், பாலியல் ஒழுக்க  மதிப்பீடுகளைத் தூக்கியெறியும் வல்லமையை நிறைத்துக்கொண்ட மனிதர்களை முன்வைத்துப் பேசுகிற கலகக்கார மனநிலையை மையமாகக் கொண்ட பிரதானத்தோடு விரிகிறது மீன்காரத் தெரு நாவல்.
இருப்புக்கும், வாழ்வுக்குமான வேற்றுமைகளைப் பதிவு செய்வதில் மிகுந்த கவனம் கொண்டு நாவல் வெளிப்பட்டிருப்பதை, திட்டவட்டமான தத்துவங்களில் அவநம்பிக்கையும், மனித துக்கங்களில் உருகும் மனமும் கொண்ட மனிதர்கள் அதிகமாக நிலை கொண்டிருக்கும், வீச்சமும், வீரியமும் கொண்ட மீன்காரத் தெருவுக்குள் நுழைகையில் நுகரமுடிகிறது.
காலந்தோறும் நீள்கிற தமிழ் இஸ்லாமியம் குறித்த பொதுப்புத்தியை ரமீஜாவும், கருப்பியும், ஜக்கரியாவும், பாத்தக்காவும் குத்திக் கலைத்து கேள்விக்குள்ளாக்குவதன் மூலம் இச்சமூகம் மறு சீரமைத்துக் கொள்வதற்கான திறவுகோலை வெகுயதார்த்தமாக முன்வைக்கிறார் கீரனூர் ஜாகிர் ராஜா. சமூக அமைப்பில் ஒவ்வொரு சாதியுமே தங்களை மேலானதாகக் காட்டிக்கொள்ள பொருளாதாரம், பெண்களின் மீதான பாலியல் வன்முறை போன்ற ரீதியில் வெளிப்படுத்திக்கொள்வதை ரமீஜா மற்றும் ஆமினா பாத்திரங்களின் வழியாக நமக்குக் காட்டுகிறார் நாவலாசிரியர்.
நேர்க்கோட்டுப் பாணியற்ற கலைத்துப்போடும், கதை கூறல் பாணியிலான உத்திகளினூடாக தமக்கான விடுதலை குறித்த பிரக்ஞையற்ற வெகுளியான மனிதர்களின் வாழ்வியலை சாதுர்யமாக பேசுவதே இந்த நாவலின் கெட்டிக்காரத்தனம். கூர்மையான அரசியல் அறமும், கலக மனமும்தான், இனவாத அரசியல் சக்திகளுக்கு எதிராக தெருமக்களைத் தொடர்ந்து குரல் எழுப்ப வைக்கின்றன. இனவாதத்தை எதிர்த்து நிற்கும் வேளையில் சொந்த இனத்தின் சுரண்டலுக்கு எதிராக நைனா தொடர்ந்து குரல் எழுப்புகிறான்.
தமிழ்ச் சமூகத்தின் சராசரி அரசியல் பார்வைகொண்ட காசீமின் செயல்பாடுகளும், நிலப்பிரபுத்துவத்தின் நீட்சியான சலிமீன் அதிகாரத்திற்கு எதிராக குரல் எழுப்பும் நைனாவின் நடவடிக்கைகளும், சில கதைமாந்தர்களுடன்,இணைந்து நுட்பமாகவும், கலைநயத்துடனும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒடுக்கப்பட்ட தலித் முஸ்லிம்களான ஆமினா, ரமீஜா போன்ற எண்ணற்ற  பெண்களின் சதைக்காடுகளை பொருளாதரத்தின் மூலமாக வேட்டையாடி, நிர்மூலமாக்குவது அவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருந்தபோதும், வயிற்றுப் பிழைப்புக்காக இசைகிறபோது நைனாவும், காசிமும் முன்வைக்கிற அரசியல் யதார்த்த வாழ்க்கையில் இடைவெளிவிட்டே நிற்கிறது.
கக்கத்தில் தூக்கிச் சுருட்டி வைத்துக்கொள்ளும் அளவேயுள்ள பாத்தக்காவின் பெட்டிக்கடையை போதை நீங்கி எழுந்த ஜக்கரியாவின் கைகள் துழாவுவது குறித்து பாத்தக்காவுக்கு லட்சியமில்லை இப்போதைக்கு என்கிறபோது, இருவரின் முரணான மனநிலைகளும், நாவலில் துல்லியமாக விழுந்திருக்கிறது.
எல்லா கதாபாத்திரத்தின் வாயிலாக உலகமய மாதலின் தாக்கம் சூட்சுமமற்ற மனிதர்களின் வாழ்வியல் தளங்களைப் பறித்துக்கொண்டதுடன் நில்லாமல் கலாச்சார பண்பாட்டுத் தளங்களையும், சுவீகரித்துக் கொள்கிறது, என்பதை அறிந்துக்கொள்ள முடிகிறது. பொருள் உற்பத்தி உறவுகள், பருண்மையான வர்க்க உற்பத்தி உறவுகளோடு அல்லாமல் சாதீய கண்ணிகளாலும் பிணைக்கப்பட்டிருப்பதை மீன்காரத்தெருவாசிகள் ஒவ்வொருவரிடமிருந்தும் கிரகிக்க முடிகிறது.   

No comments: