Saturday, October 30, 2010

ஊர்ந்துக்கொண்டிருக்கும் வலி

பரிமாறிக் கொள்ளநேர்ந்த பொழுதொன்றில்
உன்னால் தயாரித்தளிக்கப்பட்ட  தேனீர் கோப்பையிலிருந்து
கசிந்துருகியது  எதிர்பார்பற்ற நேசம்
இருத்தலின் பேரமைதி உடைத்து
தேடியபோது வெளிப்பட்டது  இருவருக்குமான  ஒரே வார்த்தை
நமக்கான  இடைவெளிகளினூடே
வந்திறங்கிய பேரிடியொன்றின்  கனம் பொறுக்காது...
வெளியேறின   கால உறைக்குள் கிடந்த  சாத்தியங்களனைத்தும்.
ஆடைகளின்  அழுக்ககற்றி...
புகைபடிந்த பாத்திரம் தேய்த்து
களைத்துப்போன  உனது  விரல்களனைத்தும்
எனை  மேவிக்கொள்ளும்  ஆகச்சிறந்த தருணமது.
துயரங்கள்  ஊர்ந்துபோகும்
உனது காலமறியாது, அவசரம் கூட்டுகிறேன்
சாத்தானின் மனநிலையோடு கணினி இயக்கி
பெருநகரவீதிகளில்...
எனக்கான ஆயுளை நீட்சியடைய செய்ய...
அநேக  கடவுளர்களிடம்  மண்டியிட்டு பிரார்த்திக்கும்
உனைப்பற்றி  அறிய நேர்கையில்
பனிபடர்ந்த  குளிர்நாளொன்றில்
பசிப் பொறுக்காத  நாய் குட்டியாய்...சுருண்டு  அடங்குகிறேன்.
உன்  நினைவணைத்து...

1 comment:

சாய் ராம் said...

அவளது காலமறியாது (காலத்தின் இயற்கையை அறியாது) அவன் அவசரம் கூட்டுகிறான் என்பது சரியான வார்த்தை. ஆண் பெண் என்றோ தோறும் ஓர் தேநீர் மாலை பொழுதில் மனம் ஒப்பி (ஹார்மோன்) பிறகு சிறு சிறு காரணங்களால் இந்த சூழலில் பெரும் அவதிக்குள்ளாவது ஆங்காங்கே பெரும்பாலும் நடந்து கொண்டு தானிருக்கிறது. அதன் நிறம் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாய் இருக்கிறது.