Sunday, July 28, 2013

சூரியன் தனித்தலையும் பகல் நூலை முன்வைத்து


( சூரியன் தனித்தலையும் பகல் கவிதை நூலை முன்வைத்து)
வாழ்வின் நெடியதூரம் செறிவு மிகுந்த துயரத்தை மட்டுமே உடுத்திக்கொண்டு பிரவேசிக்கும் தமிழ்நதிக்கான பொழுதுகளனைத்திலும், ஏமாற்றங்களும், தவிப்புகளும் தாங்கவொணாத வேதனைகளும் புரையோடிக்கிடக்கின்றன. இவை அனைத்தையுமே துல்லியமானதொரு தளத்திலிருந்து பகிர்ந்துக்கொள்வதே சூரியன் தனித்தலையும் பகல்.
பேச்சிலிருந்து கவிதைக்கும், கவிதையினூடாக ஆழ்ந்த மெளனத்திற்கும் சென்று இறுதியில் தூய பிராந்தியத்திற்குப் போய் இயற்கை விதிகளுக்கு ஏற்பாட்ட நிர்மாணிக்கப்பட்ட நிசப்தங்களின் மீதானதொரு உலகத்தைச் சென்றடைகிற தமிழ்நதியின் கவிதைகளை வாசிக்கிறபோது உண்மையின் பொருட்டு பெரும்பாலனவற்றை இழக்க நேரிட்டவர்களின் வேதனையினை உள்வாங்கி ஈரம் கசிந்துருகும் நிலை வாய்க்கிறது.
தமிழ்ச் சூழலின் நவீன கவிதையின் பிதாமகனான பாரதியிடமிருந்த அநேக பிரதிபலிப்புகளில் ஒன்றாகிய வேதாந்த விசாரங்களை விதந்தோதுதலின் மீதேறி, தற்போதைய நவீன கவிதை என்பது விபூதி வீச்சமும், பூக்கள்வாசமும் கொண்ட கலாச்சாரத்தில் ஊறித்திளைத்தவர்களின் விரல்களுக்குள்ளாகவே பயணிக்கிறது. ஆனால் குருதி வீச்சமும், மரண ஓலமும் துப்பாக்கிச் சத்தமும், புலம்பெயர்தலும் அதிகாரவர்க்கத்தால் திட்டமிட்டு இயக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஈழத்தின், கவிதைச் சூழல் தமிழகத்தின் போக்குக்கு எதிர்மறையானது.
ஆரம்ப காலந்தொட்டே சமூக, அரசியல், வடுக்கள் போன்ற சகல கூறுகளையும், பதிசெய்யும் பொழுது அழகியலோடும், நேரடித்தன்மையோடும் பேசக்கூடிய ஒருவிதமான தொன்மத்தை தன்னகத்தே கொண்டு ஈழத்தின் கவிதைத்தளம் பயணித்துக்கொண்டிருக்கிறது. அவற்றிலிருந்து மற்றுமொரு நம்பிக்கை பெறத்தக்க படைப்பினை சூரியன் தனித்தலையும் பகலாகத் தமிழ்நதி தந்திருப்பது என்பதானது, சமகாலச்சூழலில் ஈழத்தின் துயரரேகைகளைத் தவறின்றி புரிந்துக்கொள்ளும் மனநிலையை தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்கிடும்.
மயில் அகவும்/ வன்னியின் விறு கூடொன்றில்/ காதோரக்குழல் விலக்கி/ முத்தமிட்டுத் துயில் கலைக்கும் விடியலின்றி(காற்றில் நடுங்கும் மெழுகுவர்த்தி) என்ற வரிகளின் வழியாக சனநாயத்தின் அடிப்படை ஊற்றுக்கண்களாக இருக்கும் சுதந்திரம், சமத்துவம், மற்றும் சகோதரத்துவத்திற்கு எதிரான ஈழத்தின் சூழலிலிருந்து விலகிச் சென்றாலும், சென்றவிடத்திலுள்ள பாதுகாப்பாற்ற, நிச்சயமற்ற வாழ்க்கை முறையை அடையாளத்தை முன்னிறுத்துவதன் வாயிலாக, இவ்விடத்தில் கவனங்கொள்ளத் தக்கவராகிறார். வாழ்தலும், வாழ்தல் பொருட்டும் அவ்விடங்களில் நிகழ்த்தப்படும், அந்நியப்படுத்தப்படுதல், இவற்றினூடாக வியாபித்துப் படரும் துயரத்தின் பதிவாகவும் அமைந்துவிடுவதோடு, வேர்களை மீட்டுருவாக்கம் செய்வதற்கான அவசியத்தையும், இழையோடச் செய்துவிடுகிறார்.

இவ்வாறான பூகோள ரீதியிலான பாதுகாப்பு உணர்வினை ஏக்கமாக பதிவு செய்திருப்பதன் மூலமாக சனநாயகத்திற்கு எதிரான உளவியல் மேலும், மேலும் அதிகரித்துக்கொண்டேயிருப்பதால், பூமியின் எப்பகுதியிலும் துள்ளி வெளிப்படுகிற கொஞ்சநஞ்ச சனநாயக மதிப்பீடுகள்கூட மெல்ல அழிக்கப்பட்டுவரும், செய்தியையும் மனிதனினி உணர்வு என்பது சமூகவாழ்நிலையில் இருந்தே நிர்ணயிக்கப்படுகிறது என்பதையும் சொல்லிச்செல்கிறார். இத்தொகுப்பானது மேற்குறித்த ஏக்கம் நிரம்பிய அநேக குரல்களின் சாட்சியமாய் வாசிக்கக் கிடைக்கிறது.
கட்டிடக்காட்டின் முடிவில் தொடங்கும்/ ஊசியிலை மரச்செறிவைக் காணுந்தோறும்/ வன்னியில் பனிபெய்த விடியலில்/ மீள விழித்தெழுகிறேன்/ கடல்தாண்டி வருகிறது உளுந்து வாச்னை/ கூடவே பாம்புகளின் நினைவும்(ஞாபக வாசனை) என்ற வரிகளில் இருத்தலும், இருத்தல் நிமித்தமும் சார்ந்து விளைகிற எதிர் எதிர் முரண்பாடுகளை இருவேறு வாழ்வியல் சார்ந்து சிறந்தவற்றை முன்னகர்த்தி நினைவுகளினூடாக தொனிக்கச்செய்கிறார்.
மேலும் முதல் உலகநாட்டு இருப்பும், அதனையொட்டிய பிரயத்தனங்களையும், குறிப்பிட்ட கட்டிடம், ஊசியிலை என்ற அதிகாரவர்க்கத்தின் குறியீடுகளை பயன்படுத்தியுள்ளார். அதனுடைய பரப்பரப்பினையும் இயந்திரகதியான அதனுடைய வாழ்க்கை முறையினையும் பகடிச்செய்வதற்காக உளுந்து, பாம்பு போன்ற உழைக்கும் வர்க்கத்தின் குறியீடுகளைக்கொண்டே பகடி செய்யும், செய்யுத்தி ஆழமானதொரு அரசியலை மிகச்சாதுர்யமாகப் பேசிச் செல்கிறது. இவற்றிலிருந்து விட்டு விடுதலையாகி எல்லோருக்கும் பொதுவானதொரு சூழலுக்குள் பயணிக்கவும் எத்தனிக்கிறார்.
அவலம் சூழ்ந்த மூன்றாம் உலகநாட்டுப் பிரதிநிதிகளான தங்களுடைய நிலமும், நிலம்சார்ந்த நிகழ்வுகளும் வாழ்வியலோடு சேர்ந்து பயணித்து முரண்பாடுகளைக் கொண்டு பேசுவதன் ஊடாக இதற்குள் யுத்தம், சீரமைப்பு, என்ற பெயரில் தங்களது வேரடி மண்ணைச் சிதிலமாக்கிக் கொண்டிருக்கும், முதல் உலகநாட்டு வணிக அரசியல் குறித்தும், படிம குறியீடு சார்ந்தும் இயங்கக்கூடிய இக்கவிதை அதி உன்னதம் பெறுகிறது.
வரலாற்றில் உண்மையான சிறப்புக்குறியவர்கல் வெகுமக்களும், அவர்களின் உற்பத்தி சார்ந்த உறவுகளும்தானேயன்றி, எப்போதும் தவறு செய்யக்கூடியவர்களான தனிப்பட்ட அதிகாரவர்க்கத்தினர் இல்லை. மேலும் ஒடுக்கப்பட்டுக்கொண்டிருப்பவர்கள் மற்றும் தோற்றுப்போனவர்களின் வரலாற்றைக்கூட அதிகாரவர்க்கத்தினரின் விரல்கள்தான் தீர்மானிக்கின்றன.
இதனை எதிர்த்து அவ்வப்போது ஆழமாகப் படர்கிற எதிர்வினைகள் எல்லாம் வெறும் கூச்சல், கலகம், என்ற முதலாளித்துவ சொல்லாடல்களின் மூலம் அதிகார வர்க்கம் நிராகரித்து விடுகிறது. என்ற கவனத்துக்குரிய அரசியல் ஒன்றைக் கீழ்வரும் அவரிகள் முன்வைக்கின்றன. புனைவுகளின் பெருங்கதையாடல்களில்/ தேவதேவதைகள் பேய்களாயினர்/ நமது எல்லோருக்குமான அதிகாரம்/ இதன் வழியாக புரையோடிப்போன வலியினையும், அதற்கு எதிரான மனநிலை வாய்க்கவேண்டும் என்றும் அழ்ந்த துணிச்சலோடு முன்வைக்கிறார்.
இன்றொரு நாள் எனினும் என்று தலைப்பிடப்பட்ட கவிதையில்.
அம்மா!மண்டியிட்டுக் கேட்கிறேன்/ உணவருந்தும் பீங்கானை/ இந்த ஒரு தடவை நான் உடைக்கிறேன்/ சிலீரென்றழும் ஓசையால் உறக்கமும், குழந்தைமையும் கலைக்கப்பட்ட/ அவ்விரவுகளை மீட்டெடுக்க/ என்ற வரிகளின் உள்ளடக்கமானது ஒருவிதமான பிரார்த்தனையுடன் அமைந்திருப்பது என்பது,பெண் தெய்வங்கள், இதுபோன்ற பிரார்த்தனைகளுக்கெல்லாம் கடந்த காலத்திலும் செவிசாய்த்தனர் என்ற குறுங்கதையாடலுக்குரிய நம்பிக்கையாக இன்றும் தொடர்ந்துக்கொண்டிருக்கிறது. இவற்றில் இழையோடுகிற தொன்மம் என்பது அதிகாரசக்திகளிடமிருந்து தங்களுக்கு வரக்கூடிய தாக்குதல்களுக்கு எதிரான தாக்குதலை நடத்தும் செயலை, தங்கள் நம்பிக்கைக்குரிய சிறுதெய்வத்திடமே விட்டுவிலகுதல் என்பது ஈழத்தின் போர்ச்சூழல் விளைவிக்கிற புலம்பெயர்தலில் சிக்கிக்கொண்ட மக்கள் தங்களது பகை சக்திகலை கற்பனையில் மட்டுமே வசப்படுத்தி, நிதர்சனமாக வென்றுவிடும் நம்பிக்கை, அவற்றில் மிளிர்கிறது.
எழுத்து, விடைபெறாத அரங்கம்,, பிள்ளைகள் தூங்கும் பகற்பொழுது, ஒரு நாளும் இரண்டு அறைகளும், மன்னிக்கப்படாதவளின் நாட்குறிப்பு, நீரின் அணைப்பு, இப்படியாக தலைப்புகள் உள்ளடங்கிய தொகுப்பு

Wednesday, July 3, 2013

கேள்விக்குறி குறும்படம்



கேள்வி கேட்பது ரொம்ப ஈஸி, ஆனால் பதில்தான் ரொம்ப கஷ்டம், ஆசிரியர் கேள்வி கேட்குற இடத்திலே இருந்தால் எப்படி கொஞ்சம் கீழ் இறங்கி பதில் சொல்கிற இடத்திற்கும் வந்தால், வகுப்பறைகள் எவ்வளவு இனிமையாக இருக்கும்.

ஆசிரியர்களும் குழந்தைகளாய் மாறிய பொழுது

கரும்பலகையில் சாக்பீஸ் பிடித்தே சோர்ந்துப் போன விரல்கள். பல ஆண்டுகாலமாக பிரம்போடு நட்பு பாராட்டிய கைகள்( சமீபநாட்களாக செயல்வழி கற்றலால் கொஞ்சம் விடுதலை ஆகியிருக்கிறது).

பாடப் புத்தகத்தை தவிர வேறு எதுவும் பார்க்க அனுமதிக்கப்படாத கண்கள். வாரம் ஐந்து நாட்கள் பள்ளிக்கூடம். விடுமுறை நாட்களானால்  குடும்பம். இப்படியாகவே பயணித்து களைத்த கால்கள். இதுதான் சில வருடங்களுக்கு முந்தைய ஆசிரியர்களின் உலகம்.
ஆனால் முந்தைய அரசின் பள்ளிக்கல்வி துறையால், குழந்தைகள் மட்டுமல்ல, ஆசிரியர்களும் மகிழ்வோடு வாழ தலைப்பட்டனர். 

ஆம்! செயல்வழி கற்றலும், அது தந்த மாற்றமும்தான். ஆசிரியர் மற்றும் குழந்தைகள் சமூகத்தை விடியலை நோக்கி பயணிக்க வைத்தது என்றால் அது மிகையானது இல்லை.
வெறும் பாடப்புத்தகமும், வகுப்பறையும், மதிப்பெண்ணும்,மாத்திரம் கல்வி அல்ல. குழந்தைகளை, அவர்களின் தேவைகளை, மையப்படுத்தி இயங்குவதுதான் உண்மையான சமூக அக்கறை நிரம்பிய கல்வி என்ற உறுதிதான் இன்றைய தினம் ஆசிரியர்களின் மனங்களில் களமாடிக்கொண்டிருக்கின்றன.

இப்படியான அழகிய மனங்களோடுதான் சத்திய மங்கலத்தில் இருந்து, மேற்குத் தொடர்ச்சி மலை நோக்கி, புதிதாய் றெக்கைகள் முளைத்த, சின்னஞ்சிறு பறவைகளாய் பறக்கத் தொடங்கியிருந்தனர் ஆசிரியர்கள்.

தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் ஈரோடு மாவட்ட குழுதான். இப்படியான உற்சாகமான ஆசிரியர்களை ஒருங்கிணைத்திருந்தது. மேற்குத்தொடர்ச்சி மலையில் குருவிக்கூடு போல்  அமர்ந்திருக்கும் கெத்தேசால் கிராமத்தில்தான், எல்லா ஆசிரியர்களும் குழுமியிருந்தனர்.
அடர்ந்த வனங்களும், அப்பழுக்கற்ற மனங்களும் இணைந்து உறவாடும் மலைப் பகுதிக்குள் பிரவேசிக்கத் தொடங்கிய அச்சிறுதருணம் தொடங்கி, வெளியேறும் பொழுது வரை யாருடைய மகிழ்வும் எதன் பொருட்டும் களங்கப்படவில்லை என்பதுதான் அந்த மாற்றுக் கல்விக்கான பயிற்சி முகாமிற்கு கிடைத்த வெற்றி.

அரை நூற்றாண்டு காலம் அறிவை முன்னிறுத்தி, கற்பனையை மழுங்கடித்த ஒரு கல்வி முறையை விட்டு விடுதலையாக துள்ளி வெளிப்பட்டனர் ஆசிரியர்கள்.
சுமார் எழுபதிற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் கூடி, மாற்றுக்கல்வியினூடாக, ஒரு மாற்று சமூகத்தை விளைவிப்பதற்கான விதைகளை உற்பத்தி செய்ய தொடங்கினார்கள்.

காலந்தோறும் புத்தக வாசிப்பானது ஆசிரியர்களை பொறுத்தவரை பாடப்புத்தகம் மட்டுமே என்றவாறே  நீடிக்கவே செய்தது. இன்றளவும் நீடிக்கவும் செய்கிறது.
அதுமட்டுமின்றி ஐந்தாண்டுகாலம் ஒரே புத்தகத்தை திரும்ப, திரும்ப வாசித்து தாங்கள் நம்பியதை அப்படியே குழந்தைகள் சமூகத்திற்கு ஒப்புவிக்கும் ஒரு எந்திரமாகவே ஆசிரியர்கள் பழக்கப்படுத்தப்பட்டு, கையாளப்பட்டார்கள்.

பாடப்புத்தகத்தம் தவிர்த்த மற்ற செய்திகளை வகுப்பறைகளில் பகிர்ந்துக்கொள்ளும் ஆர்வம் இயல்பாகவே ஆசிரியர்களுக்கு எப்பொழுதுமே இருந்து வந்திருக்கிறது. ஆனால் அவையெல்லாம் கல்வித்துறையின் உயர் அதிகாரிகளால் நசுக்கப்பட்டும், கிள்ளி எறியப்பட்டும் காயப்படுத்தப்பட்ட தருணங்களே ஆசிரியர்களுக்கு மிக அதிகமாய் வாய்த்திருக்கிறது.
வருகைப்பதிவேடு, பாடக்குறிப்பு புத்தகம், இப்படியே பார்த்தும், எழுதியும் சலித்த அந்த ஆசிரிய மனங்கள், வேறு எதற்கோ ஏங்கி தவித்திருக்க வேண்டும். குழந்தைகளைப் போன்று மேலதிக ஆர்வத்தோடு புத்தகங்களை வாசிக்கத்தொடங்கிய அந்த ஆசிரியர்களின் முகத்தில் மகிழ்ச்சி ரேகைகள் படரத்தொடங்கின.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஈரோடு மாவட்ட குழுதான்  ஆசிரியர்கள் கூடி வாசிப்பதற்கான புத்தகங்களையும், அதற்கான சூழலையும் உருவாக்கி தந்திருந்தது
இந்திய கல்விச்சூழலில் இதுவரை கண்டுக்கொள்ளப்படாத மரங்கள், செடிகள், காட்சிப்படுத்தப்படாத மலைகள், மலைப்பற்றி வாழும் எண்ணற்ற நுண்ணுயிர்கள், சதா இசைத்தப்படி அடர்ந்த வனத்தை சுவாசித்து வாழும் பறவைகள், அதிகாரத்தால் நொறுக்கப்பட்டு, எஞ்சிய வனத்தோடு,தொப்புள் கொடி உறவு கொண்ட சோளகர் மக்கள் என எல்லாவற்றோடும் அந்த வாசிப்பு முகாம் களைக்கட்டத் தொடங்கியது.

எழுபதிற்கும் மேற்பட்ட ஆசிரியர்களை ஆறு குழுக்களாக பிரித்து, கூட்டாக உழைத்து வாசிக்கும் தருணத்தையும், அதனூடாக கிடைக்கப்பெறும் குதூகலத்தையும் கொட்டி நிரப்பத் தொடங்கினார் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் மணி.

பொதுவாக இன்றைய சமூகச்சூழலில் வாசிப்பதும், வாசிப்பதன் பொருட்டு உரை நிகழ்த்துவதும் ஏளனத்துக்குறிய ஒன்றாக சித்தரிக்கப்பட்டு வருவது வருத்தமான ஒன்றுதான். பள்ளி நூலகங்கள் எல்லாம் குழந்தைகளின் கைகள் படாமல் நூலாம் படைகளுக்குள் சிக்கி மரணித்துக்  கொண்டிருக்கின்றன.

மதிப்பெண்ணுக்கு குழந்தைகளை உற்பத்தி செய்யும் முனைப்பில் பெற்றோர்களும், பல பள்ளிகளும் நூலகங்களை கண்டுக்கொள்வதே இல்லை. பல குடும்பங்களில் குழந்தைகள் செய்திதாள்களை வாசிக்கும் சுதந்திரம் கூட மறுக்கப்பட்ட நிலையில்தான் இருக்கின்றனர்.

இன்னொரு பக்கம் இந்திய தொலைக்காட்சிகள் குழந்தைகளடங்கிய ஒரு குடும்பத்தை தன்வசப்படுத்த எல்லாவிதமான வேலைகளையும், சாதுர்யமாக நிறைவேற்றி அதில் வெற்றியும் பெற்று வருகிறது. இதனால் குழந்தைகளுக்கும், புத்தகங்களுக்குமான இடைவெளி நாளுக்குநாள் அதிகரிக்கவே செய்கிறது. இதனை வணிக ஊடகங்கள் திட்டமிட்டு செய்தப்படியே நிதமும் கல்லாக்கட்டுகிறது.

குழந்தைகளுக்கும், புத்தகங்களுக்குமான உறவை வளப்படுத்த வேண்டுமென்றால், முதலில் ஆசிரியர்களும், பெற்றோர்களும் புத்தகங்களுக்குள்ளாக பிரவேசிக்கும் சுகத்தையும், அதன் வாயிலாக கிடைக்கும் அனுபவத்தையும்  உணர்ந்தாக வேண்டும். இப்படியான உணர்தலை, புரிதலைதான் அந்த மூன்று நாள் வாசிப்பு முகாம் ஏற்படுத்தியது.
எழுத்தாளர் கமலாலயனும், ஆசிரியை சுடர் ஒளியும் ஆசிரியர்களின் மனம்பிடித்து புத்தகங்களுக்குள், கூட்டிச்சென்று, நூல்கள் குறித்த அறிமுகத்தையும், அவற்றின் பக்கங்களில் கசிந்துருகும் வாழ்க்கையையும் பகிர்ந்துக்கொண்ட தருணங்கள்,அவ்வளவு எளிதாக கிடைத்துவிடாத ஒன்று.

பாடப்புத்தகம் தவிர்த்த, புத்தக வாசிப்பானது அலாதியான பேரனுபவத்தை விதைப்பது. ஆளில்லா ஊருக்கு அழைத்துச்சென்று, பரவசப்படவைப்பது. காலத்தின் பேரோட்டத்தில் தொலைந்துப்போன நதிகளில் கால் நனைக்க வைத்து, பாழடைந்த மண்டப தூண்களின் மறைவில் ஒளிந்து விளையாட வைப்பது. மனித குல விடுதலைக்காய், நாள்தோறும் உழைத்து, களைத்துவிடாத போராளிகளுடன் உரையாட வைப்பது. வலியினை, துயரத்தை, மகிழ்வை நிறைத்து, பிசைந்து நிலாவைக்காட்டி சோறு திங்க  வைப்பது. இப்படியான பன்முக அனுபவங்களை எல்லாம் அந்த மூன்று நாட்கள், புத்தக வாசிப்பு முகாம் எல்லோருக்கும் இட்டு நிரப்பி வழியனுப்ப தவறவில்லை.

‘முதல் ஆசிரியன்”, “என்னை ஏன் டீச்சர் பெயிலாக்கினீங்க”, “பள்ளிக் கூடத்தேர்தல்”, “வாசித்தாலும், வாசித்தாலும் தீராதப்புத்தகம்” என புத்தகங்களுக்குள் முகம் புதைத்து பயணித்த ஆசிரியர்கள், திரும்பி வந்தபோது,   மனதுக்குப்பிடித்த தோழனோடு உரையாடி களித்த பேரின்பத்தை பெற்றிருந்ததை அறிந்துக்கொள்ள முடிந்தது.
வாய்ப்புகளை உருவாக்கி தந்தால், குழந்தைகள் மாத்திரமல்ல, நாங்களும் விஸ்வரூபம் எடுப்போம் என்று தங்களது படைப்பாற்றல் மூலம் வாசிப்பு முகாமை குளிரவைத்தப்படியே இருந்தனர் ஆசிரியர்கள்.

ஆசிரிய பணி குழந்தைகள் சமூகத்தை ஆரோக்கியமானதாக உருவாக்க கிடைத்த அளப்பரிய பணி. இதை நாங்கள் வாய்ப்புகளை உருவாக்கி நல்லாசிரியர் விருது பெற பயன்படுத்த மாட்டோம். மாறாக ஒரு சமூக மாற்றத்திற்கு தேவையான வீரியமான விதைகளை கண்டறிந்து, வளர்க்கவே கையாளுவோம், என்று  பகிர்தலின் போது, நம்பிக்கையோடு சொல்லிய  ஆசிரியர்களின் முகம் நிறைய மலர்ச்சி
.
மூன்று நாளும்  உணவு, குடி நீர், சுகாதாரம், இருப்பிடம் என எல்லாவற்றையும்  தாயுமானவர்களாக கூடவே இருந்து கவனித்தனர் சோளகர் இளைஞர்கள். அவர்களுடனே பம்பரமாய் சுற்றி சுழன்றபடியே இருந்தனர் அறிவியல் இயக்க நண்பர்கள்.
இன்றைய சூழலில் நாம் குழந்தைகளுக்கும், ஆசிரியர்களுக்கும்  அவர்களுக்கு இயல்பான பிடித்தமான படைப்பூக்கமிக்க, அறிவியல் ரீதியிலான  மதிப்பீடு சார்ந்த கல்வியையோ, அதற்கான சூழலையோ உருவாக்கிக்கொடுத்திருக்கோமா?  இந்த கேள்விக்கான பதில் இன்னும் சூன்யமாகவே நீடிப்பது வருத்தம் தோய்ந்த ஒன்றுதான்.

இன்றைய உலகமயமாக்கல்  சூழலில்  நாம் சார்ந்திருக்கக்கூடிய சமூகம்  விளைவிக்கும் உளவியல் ரீதியான தாக்குதல்களில் இருந்தும். நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒரு குடும்பம் பெறும் அவமானங்களிலிருந்தும்  மீள்வதற்காக இருக்கலாம் அல்லது குடும்ப எதிரிகளுக்குப் பதில் சொல்வதற்காக இருக்கலாம். நம்முடைய குழந்தைகளை அதற்கான கருவிகளாக  மட்டுமே பயன்படுத்துகிறோம். குழந்தைகளை கற்பனை வளம் இல்லாத எந்திரங்களாகவே வளர்த்தெடுக்க விரும்புகிறோம்.

 குழந்தைகளின் அக உலகத்தையும், அவர்களின் இயல்புகளையும் புறந்தள்ளி, சிறு வயதிலேயே ஒரு அமெரிக்க குடிமகனாய் முன்னிட்டு வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகிறோம். இன்றைய  அரிபரியான வாழ்க்கையின் வெற்றிப்படிகட்டுகளில் சக மனித உடல்களை நசுக்கி, போட்டியில் ஜெயிப்பதற்கான மனநிலையையும், அதற்கான பயிற்சியினையும், வன்முறையையும், சுயநலத்தையும் மாத்திரமே மிகச்சிறந்த கல்விச்சூழலாக மாற்றி வைத்திருக்கிறோம். அதையே நம் குழந்தைகள் சமூகத்திற்கு பரிசாகவும் அளித்திருக்கிறோம்.

இப்படியான ஒரு சமூகத்தில் இருந்து, துள்ளி வெளியேறவும், அன்பால் சக மனிதர்களை, இப்பிரபஞ்ச உயிர்களை நேசிப்பதற்கான மனநிலையை உருவாக்கும் ஒரு மாற்று சமூகத்தை வடிவமைப்பதற்கான, அனுபவரீதியான மாற்றுக்கல்வியை விளைவிக்கவும், இந்த ஆசிரியர்களாலும், இது போன்ற தொடர் வாசிப்பு முகாம்களாலும் சாத்தியப்படும் என்பதே உண்மையாக இருக்கிறது.    
                         

Wednesday, September 7, 2011

மூதாயும், அவளது பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும்

வல்வின் ஓரியினது வில்லிலிருந்து துள்ளிவெளியேறி
அச்சிறு அம்பின் மீதமர்ந்தது கிடந்த கொல்லி மலையை தாங்கியிருந்தது 
குருதியுறைந்த மிக நீள வாளொன்று..
வாளுருவி மலையை குடைந்தெடுக்கும் குயுக்தியோடு
மிக நீண்டதொரு வரிசையில் குவிந்திருந்தனர் வணிகர்கள்.
உடலெங்கும் பால்சுரந்து… பெருங்கூட்டமென மரம் வளர்த்து
கிளைகளினூடாய், அடைகாத்து பழமுதிரும் வனமிறைத்து.
விதை தூவி வலசை வரும் பறவைகளை வருடிக்கொடுத்தபடி
உறங்கிபோயிருந்தாள் கொல்லி மலை மூதாய்.
அரப்பளீஸ்வரர் உடல் நனைத்து, உலாவிக்கொண்டிருந்த
வழுக்குப் பாறையில் மேனியை உலர்த்திக்கொண்டிருந்தனர் சித்தர்கள்.
காடலைந்து, மரமேறி, தேனெடுத்து, நிலம்பிளந்து கிழங்கெடுத்து
காய்த்து பழுப்பேறிய விரல்கள், குளிருக்காய், நெருப்பணிந்து
பிளிறும் யானைகளை விரட்டிக்கொண்டிருந்தன.
பழுத்துக்கொட்டும் பலாப்பழ வாசனையோடு.
மழித்து வீசியெறிந்த அன்னாசி முளைத்து கிளைபரப்பி கிடந்தது.
சுமந்து வந்த விதைகளனைத்தையும்
ஒரு குன்றின் மேல் கொட்டிவைத்துவிட்டு.
கண்ணயர்ந்த மூதாயை உசுப்ப மனமின்றி
பெற்றெடுத்த மலையை நீவியபடியே விளையாடி களித்தன
திசைகளறியாத பூர்வகுடி பறவைகள்.
விழுந்துருண்ட  அச்சிறுவிதை
வேரூன்றும் சாத்தியங்களோடு
சருகுகளுக்குள் உடலடக்கிக்கிடந்தது.
வனமதிர பெருயுளிக்கொண்டு, நடமாடிய வணிகர்கள் கண்டு
மறைவிடம் பதுங்கி அழுதுவீங்கின விலங்கினங்கள்.
வணிக வல்லுருக்கள் தன்னுடலுறுப்புகளை கொத்திக்கிழிப்பதற்குள்
பிரசவித்த பிள்ளைகளை காப்பாற்ற துணிந்தாள் மூதாய்
விதை, மரம், பூ, காய், பழம், பறவை…..
விதை, மரம், பூ, காய், பழம், பறவை
எல்லோருக்கும் ஆயுதமணிவித்து
வணிகர்களுக்கெதிராய் போராடச்சொல்லித்தந்தாள்.
வாளுருவி மலையை குடைந்தெடுக்கும் லாவகமறிந்து
மிக நீண்டதொரு வரிசையில் குவிந்தேயிருந்தனர் வணிகர்கள்.
நித்திரையிலாழ்ந்து கொட்டுமருவியின் சாரலில்
உறைந்து போயிருந்தார் அரப்பளீஸ்வரர்.
மூதாயின் வளமுருவி கைப்பைக்குள் அடைத்து
களாவடிச்செல்ல காத்திருந்த வணிகர்களோடு
அரச பரிபாலமும், வனத்தை அழித்தொழிக்கும் ஆயுதமும்.
இறையாண்மைக்கு இரையாக மூதாய் ஒரு போதும் சம்மதிக்கமாட்டாள்.
வியர்வையாய் பெருக்கெடுத்து, கசிந்துருகிய குருதியில்
வளர்த்தெடுத்த வனம் முழுமையும் மூதாயுனுடையது.
வனமழிக்கும் வித்தைகளோடு உள்நுழையும் எவரிடமும்…
அடிமையாய் கிடக்க ஒரு போதும் சம்மதிக்கமாட்டார்கள் மூதாயின் பிள்ளைகள்.


Wednesday, December 1, 2010

அன்னியப்படுத்தாதீர், அவளுக்குள்ளும் நேசிப்புகளிருக்கும்

                                                  

பிரத்யேகமாய்...
வடிவமைக்கப்பட்ட ஒவ்வொன்றிலும்
அவளது அபிப்ராயங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
ஏதோவொரு குடியிருப்பின் நுழைவாயினிலோ
பரிச்சயமான பேருந்து நிறுத்தத்திலோ
பழக்கப்பட்ட முகமாகவும், கேட்டறிந்த குரலாகவும் தானிருக்கிறது.
வொடைந்த தேங்காய் துண்டுகள் பொறுக்கி...
வயிறு நிறைக்க முயலுமவள்
கற்சிலை பெண்ணின் முலையுறிஞ்சி பால்குடிக்கும்
வித்தைகள்  கற்றிருப்பதாய் சொல்லி கொள்கிறாள்.
எண்ணெய் வீச்சம் சுற்றித்திரியும்
வளாகத்தினுள் வந்தடையும், புறாக்களோடுதான்
உளறிக்கொண்டிருப்பதாய்...
ஒப்பந்தம் செய்துக்கொண்டிருப்பாள் போலும்
எதிலும் லயிப்புகளற்றவள்.
சிரிப்பினை மட்டுமே பிரதானமாக கொண்டிருக்கிறாள்.
தனது சதையுறிஞ்சி...
ரணமாக்கிய மனித அருவங்கள்  காணப்பொறுக்காது
நகர்ந்துக்கொண்டே இருக்கிறாள்.
கனமான நிகழ்வுகளேதும்
அவளை காயப்படுத்தியிருக்கலாம்
ஆனால் சாட்சியங்களின் பதிவுகளை
மனிதரல்லாத சகலவற்றினுடனும்  ...
பகிர்ந்துக்கொள்ள முனைப்போடிருக்குமவள்
கடைக்கு முன்னாடி நின்னு வியாபாரத்தை கெடுக்காதே மூழி...என
லாவகமாய் வெந்நீர் ஊற்றும்...டீ, கடை  பையனின்
வக்கிரத்தை உதாசினப்படுத்தி போகிறாள்
தாயின் பரிவோடு

Monday, November 29, 2010

அகன்ற வாயுடைய பூச்சி

எப்படி வந்திருக்க கூடுமது
எப்படியும் வந்திருக்கலாம்
தடயங்கள் ஏதுமின்றி  உள் நுழைந்ததன்
தகவல்கள் அறிந்தோர், யாரேனும்  உளரோ?
யாருமிருந்தாலென்ன?
சுகம் நிரப்பிய பச்சிலைச்சுருட்டி
ஈரமிழக்கவைக்கும்
இலைச்சுருட்டுப் புழுவின் லாவகத்தோடும்
குருத்தின் ருசியறிந்து ஒழுகும் எச்சிலோடு
வயல் முழுதும் குடியமர்ந்த
குருத்துப்பூச்சி மாதிரியும்.
பளிச்சிடும்  மாங்கனியின்
விதைக்குள் உடம்படக்கி சிதைக்கும்
அந்துப்பூச்சியின் லாவகம்  அதுக்கு
வாங்கிய கடனில் பிள்ளைகள் படிப்புறிஞ்ச
வயிறு சுருக்கி...மீந்தவற்றை
பாஸ்பேட்டாகவும், கராட்டேவாகவும் கொட்டித்தீர்த்த பின்னும்
வ(ளர்)ந்துக்கொண்டேயிருக்கிறது.
பிடுங்கித்திண்ணும்  வாழ்வழிக்க..
விட்டத்தில் கயிற்றை தொங்கவிட்டு தலை நுழைத்த போதுதான்
அது பற்றிய தகவலொன்று வந்தது.
விதையாகவும்.
பூச்சியாகவும்
உரமாகவும்
பூச்சிக்கொல்லியாகவும்  தகவமைத்துக்கொண்டு
மூன்றாம் தர உலகத்தின்
முதுகொடித்து ரத்தம் உறிஞ்ச
மேற்கிலிருந்து வந்த அகன்ற வாயுடைய பூச்சிதானாமது.

Sunday, November 28, 2010

அம்பேத்கரும்....பெளத்தமும்... இன்னும் தொடரும் சாதீய கொடுமைகள்.


                                                                   
வர்ணாசிரம கொள்கைகளால் இந்திய நாடு பீடித்திருந்த காலம். சாதீய கொடுமைகளையும், சாதீய தீண்டாமையையும், வன்கொடுமைகளையும் மிகுந்த நுட்பத்தோடு  பிரயோகித்துக்கொண்டிருந்தது பார்ப்பனியம்.  இந்திய நாடு முழுவதும் இந்த தேசத்தின் பூர்வக்குடி மக்களான  தலித்துகள்தான் வர்ணா சிரமத்தால் சொல்ல முடியாத துயரங்களையும், தாங்கவியலாத வேதனைகளையும் அனுபவித்து வந்தனர்.
பொது கிணற்றில் தண்ணீர் எடுக்க முடியாது. நல்ல உடை அணிந்துக் கொள்ளமுடியாது. உயர்சாதிகளால் ஒதுக்கிவைக்கப்பட்ட சேரிகளில்தான் வாழ்க்கை. உரிமைகள் மறுக்கப்படும் போதெல்லாம்,  எதிராக குரல் எழுப்ப முடியாது. கல்வி, உணவு, உரிமை என்று எதிலும் சம அந்தஸ்து கிடையாது.
இந்திய நாடு முழுதும், பல நூற்றாண்டு காலம் இப்படித்தான். அடிமைப்படுத்தப்பட்டு, ஒடுக்கப்பட்டு, சுரண்டப்பட்டு கொண்டிருந்தனர். தாழ்த்தப்பட்ட மக்களும், பழங்குடியினரும்.
எத்தனையோ தலைவர்கள், எத்தனையோ ஆட்சி மாற்றங்கள், ஆனால் எல்லோருக்கும் ஒரே கொள்கை தான் இருந்தது. இந்த கொள்கைக்கு  பின்னால் இந்துத்துவ வர்ணா சிரமம் ஒளிந்திருந்தது.
மத்தியபிரதேச மாநிலம், மோவ் என்கிற கிராமத்தில் பிறந்த, பாபா சாகேப் அம்பேத்கரும்,உயர் சாதிகளால், ஏராளமான கொடுமைகளை அனுபவித்தது இன்றளவும் வரலாற்றின் சோகமான பக்கங்களில் நிரம்பியிருக்கிறது.
அம்பேத்கரின் இளமைப்பருவம். உயர் சாதி இந்துக்களால், பலவித இன்னல்களுக்கும். ஆளானது.
மகாராஷ்டிர மாநிலம், முழுமைக்கும் இருந்து வந்த சாதீய கொடுமைகளின் முகம் வெவ்வேறு வடிவங்களில் அம்பேத்கரை மனம் வருந்தச்செய்தது.
பீமா ராவ் அம்பேத்கர், இளைஞனாக இருந்தபோது, நாவிதர்கள் முடிவெட்ட மறுத்தனர். 
பொதுக்கிணற்றில் தண்ணீர் எடுத்த அம்பேத்கரை, தீண்டதகாதவன் என்று, முதுகு பிய்ந்து போகும் அளவுக்கு அடித்தனர். 
தண்ணீர் கேட்ட அம்பேத்கரை சேறையும், சகதியையும் காட்டி குடிக்கச்சொல்லி அவமானப்படுத்தினர்.
இது மட்டுமா…தாகம் என்று கையேந்திய போதெல்லாம், வாயில் தண்ணீரை ஊற்றி கொடுமைப்படுத்தினார்கள்.
பள்ளியில் படித்து வந்த அம்பேத்கரை தரையிலும், படிகளிலும், கோணி சாக்கின் மீதும் உட்காரச்சொல்லி, இடம் தர மறுத்தனர். உயர் சாதி இந்துக்கள்
இந்துத்துவ வர்ணா சிரமம் எல்லாவித தீண்டாமைகளையும், அம்பேத்கர் மீதும், தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்கள் மீதும் அடக்குமுறைக்கொண்டு திணித்தது. 
மகாராஷ்டிர மாநிலம் பன்சாலா கிராமத்தைச்சேர்ந்த ஓர் பெண்மணி தீக்‌ஷா பூமி பற்றி மனம்திறக்கையில் , இன்று தனக்கு 50 வயது ஆகிறது என்றும். சிறு குழந்தையாக இருக்கும் போதிருந்தே, தீக்‌ஷா பூமிக்கு குடும்பத்தோடு வந்துசெல்வதாகவும் கூறி வியக்கிறார். எங்கள் சமூகம் நிறைய சாதீய கொடுமைகளை அனுபவித்ததாக சொல்லும் இவர். நாங்கள் வாழ்ந்த பகுதியில் பள்ளிக்கூடத்தில் நடந்த கொடுமைகளையும், உயர்சாதி மக்கள் தந்த கொடுமைகளையும் விவரிக்கிறார்
தீக்‌ஷா பூமிக்கு வரும் பல்லாயிரக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் இவரைப்போல் நிறைய சொல்ல இருப்பதை. அவர்களது கண்களில் நிழலாடும் வடுக்களின் மூலம் காண முடிகிறது.
பின்னாளில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்த, அண்ணல் அம்பேத்கர். தனது மக்கள் ஒவ்வொரு நாளும், ஆதிக்க சாதிகளால் பட்டுவரும் அவஸ்தைகளைக் கண்டு மனம் வருந்தினார்.
இந்த நாகலோக்கில் நாகர்கள் என்ற இனக்குழு மக்கள் வாழ்ந்ததாகவும், அச்சிறு இனக்குழுமக்கள் பெளத்த மதத்தை பின்பற்றி வந்ததும், வரலாறாக இருக்கிறது.. 
இந்த நாகர் இனக்குழு மக்களுக்கும் இருந்த உறவே, பின்னாளில் அம்பேத்கரை ஆறு லட்சம் மக்களோடு பெளத்த மதத்தை ஏற்றுக்கொள்ள ஓர் காரணமாகவும் இருந்ததாக சொல்லப்படுகிறது.
நாகலோக், அந்த இடத்தில் 56 அடி உயர புத்தரின் சிலை வெட்டவெளியில் ஆழ்ந்த பேரமைதியை உருவாக்கியப்படியே இருக்கிறது. நாகலோக்கில் டாக்டர் அம்பேத்கர், புத்தரை நோக்கி நடந்து செல்வது போன்ற திருவுருவச்சிலையும் கம்பீரமாக நிற்கிறது. . நாகலோக் இங்கு, நாகர்கள் என்பவர்கள் வாழ்ந்ததும். அவர்கள் பெளத்த மதத்தை  ஏற்றுக்கொண்டதும். காட்சிகளாக விரிந்து படர்கிறது.
பெளத்த மதத்தின் வாழ்வியல் நெறிகளை அனுபவபூர்வமாக கண்டறிந்தார் அண்ணல் அம்பேத்கர்.
இரட்டை மலை சீனிவாசனுக்கும், அம்பேத்கருக்கும் இருந்த நெருக்கமும், கருத்தியல் சார்ந்த ஒற்றுமையும் அம்பேத்கருக்கு, இந்துமதத்தின் கொடுமைகளில் இருந்து மீள பெளத்தம் தீர்வு எனப்படுகிறது.
1929- பூனாவிற்கு சென்றார் அம்பேத்கர். பூனாவில் இருக்கும் பார்வதி கோவிலுக்கு வழிபடச்சென்ற அம்பேத்கரை, இந்துமத சடங்குகளும், அதில் ஊறித்திளைத்த தீண்டாமையும், கோவிலுக்குள் அம்பேத்கரை நுழையவிடவில்லை.
அன்றைய தினம் பெருத்த அவமானத்திற்கும், சாதீய கொடுமையின் உச்சத்தையும் கண்ட  பாபா சாகேப். தான் மதம் மாறப்போவதாக ஒரு கையெழுத்துப்பிரதியை வெளியிட்டார்.
மகாராஷ்டிரா மாநிலம் முழுதுமே பள்ளிகளில் ஓரு வழக்கம் இருந்தது. ஒவ்வொரு வகுப்பறையிலுமே தலித்திய குழந்தைகள் தரையில்தான் அமரவைக்கப்பட்டனர்.
ஆசிரியரின் கைகளில் குழந்தைகளை தண்டிப்பதற்கு இரண்டு விதமான பொருட்களை வைத்திருந்தார்கள்.
தாழ்த்தப்பட்ட குழந்தைகளை தண்டிப்பதற்கு கற்களும், உயர்சாதி குழந்தைகளை தண்டிப்பதற்கு குச்சிகளும் வைத்திருந்தார்கள்.
தாழ்தப்பட்ட குழந்தைகளை குச்சியால் தண்டிக்கும் போது, அவர்களது தீட்டு ஒட்டிக்கொள்ளும் என்பதுதான். அந்த உயர்சாதி, இந்துக்களின் வக்கிரமான எண்ணம்.
எல்லாவற்றையும் நேரடியாகவும், மறைமுகமாகவும் பார்த்து துடித்தார் புரட்சியாளர் அம்பேத்கர்.
இவ்வளவு கொடுமைகளில் இருந்தும் தனது மக்களை, மீட்டு எடுப்பதற்கான  வழிமுறைகள் அனைத்தையும், இரவு, பகலாக சிந்தித்துக்கொண்டே இருந்தார் பாபாசாகேப் .
1935- அமெரிக்க நாட்டில் யவளா மாநாட்டில் கலந்துக்கொண்டார் அம்பேத்கர்.  
               
அதே 1935- அக்டோபர் 13-ல் இயோலாவில் நடந்த மாநாட்டில்  10 ஆயிரம்  பேர் அம்பேத்கர் தலைமையில் கலந்துக்கொண்டணர்.

இந்த கூட்டத்தில்தான்  முதன்முதல் அம்பேத்கர்  தன்னுடைய  மதமாற்றம் குறித்த உள்ளக்கிடக்கையை வெளிப்படையாக பேசினார்
மிகப்பெரிய எதிர்வினைகளையும் அம்பேதகர் சந்திக்கவேண்டியிருந்தது.
நாம் விரும்பும்போது வீட்டையோ, மேலாடையையோ  மாற்றிக்கொள்வது போல மதத்தை மாற்றிக்கொள்ள முடியாது : ஒருவருடைய உடம்பைவிட அவருடைய ஆன்மாவில் மதம் இரண்டறக் கலந்துள்ளது என்று  விமர்சிக்கிறார்  மகாத்மா காந்தி.
ஆனால் தொடரும் தீண்டாமைகளிலிருந்து தலித்திய மக்களை விடுவிக்கும் எந்தவொரு  சமூக ரீதியான  யோசனைகளையும், காந்தியால்  தரமுடியவில்லை.
அம்பேத்கரின் இயோலா மாநாட்டுத் தீர்மானம் வருத்த  வருந்துவதற்குரியது என்றார் டாக்டர் ராஜேந்திர பிரசாத்.
அம்பேத்கரிடம்   மதமாற்றம் குறித்து கேட்கிறார்   இந்து சமய காப்பாளரான  மசுர்கான்  மகராஜ்.
ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள்  தீண்டாமையை  அடியோடு  ஒழித்து விடுவோம்  என்று  சாதி இந்துக்களின்  தலைவர்கள்  வாக்குறுதி தர வேண்டும்  என்று  மகராஜ்ஜிடம்  கேட்கிறார்  புரட்சியாளர்  அம்பேத்கர்.
சாதி இந்துக்களுக்கு கால அவகாசம் தேவை.  அவர்களுக்கு வாய்ப்பளிக்கவேண்டும்,  மதமாற்ற  அறிவிப்பை  தள்ளிப்போடவேண்டும்  என்று  அம்பேத்கரிடம் சொல்கிறார்   மசுர்கான்  மகராஜ்.
ஒடுக்கப்பட்ட , தீண்டப்படாதவர்கள் மதம் மாறிச்சென்றால், தீண்டப்படாத வகுப்பு மக்கள் எண்ணிக்கை குறைந்துவிடும்.
எண்ணிக்கை குறைவது  வர்ணாசிரம  கொள்கைகளை தாங்கிப்படித்த  சாதீய சமூகத்திற்கு  உகந்ததாக அமைந்து விடும்.
ஆதிக்கவாதிகளுக்கு, எண்ணிக்கையில் குறைந்த   தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்கி  ஆள மதமாற்றம்  என்பது அவர்களுக்கு  ஊக்கம் அளிப்பதாக அமைந்துவிடும். 
தீண்டப்படாதவர்கள் அவர்கள் உரிமைக்காவும், கொள்கைகளுக்காகவும்  தொடர்ந்து போராடவேண்டும். இதுவே ஆண்மையாகும், அவர்களுக்கு வழங்கக்கூடிய  அறிவுரை என்றும்  கூறினார் இரட்டை மலை சீனிவாசன்.
1936-ல் ஜனவரி 12, 13, களில் புனாவில் நடந்த மாநாட்டில்   ஆதி திராவிடர்கள்  கடைப்பிடித்த  மதத்தை  மீண்டும் புதுப்பித்தல், வழியாகவே  நாம் தீண்டாமையில் இருந்து விடுபடலாம்  என்கிறார்  என்.சிவராஜ்
இந்துவாக இருந்துகொண்டே  அவர்களுடன் நாமும் சமமாக கல்வி  கற்க முடிகிறது.  அவர்களுக்கான தண்ணீர்  நமக்கும்  வந்துவிட்டது. தொட்டால் தீட்டு என்பதெல்லாம் இந்துக்களிடம்  இப்போது  இல்லை.  என்று சொன்னார்  பீம்ராவ் தாதாசாகிப்.
இந்து மதம் ரொம்பவேதான் கால  அவகாசம் எடுத்துக்கொண்டது.
மதமாற்ற  அறிவிப்பைப்போல  அம்பேத்கரின்  வேறு  எந்தவொறு  செய்தியும் , உலக அளவில்   இந்த அளவிற்கு  கவனத்தை  ஈர்க்கவில்லை  என்கிறார்  அம்பேத்கரின்  வாழ்க்கை   வரலாற்றை  எழுதிய  தனஞ்செய்  கீர்.
தண்ணீர் தருவதும், கல்வி தருவதும் இந்துக்கள் அல்ல. எல்லோருக்கும் பொதுவான  அரசாங்கம்.
ஆனால் இதை எல்லாம்   சட்டமாக்கி செயல்படுத்தும்போது  எதிர்ப்பவர்கள்  சாதி இந்துக்கள்,  என்ற  அறிவார்ந்த முழக்கத்தை  உருவாக்கினார்கள். அம்பேத்கர் வழிவந்த இளைஞர்கள்.
தீண்டாமைகளின் ஒட்டுமொத்த வடிவமாக இருக்கிற. இந்து மதத்தில் தெரிந்தோ, தெரியாமலோ பிறந்துவிட்டதாக சொல்லி வேதனைப்பட்டார் அம்பேத்கர்.
பிறக்கும் பொழுது இந்துவாக பிறந்துவிட்டேன், இறக்கும்பொழுது நான் இந்துவாக இறக்கமாட்டேன் என்று தீர்க்கமாக  கூறுகிறார் அம்பேத்கர்.
21- ஆண்டுகள் கடந்துபோகிறது. தொடர்ந்து  நீடிக்கவே செய்கிறது இந்துத்துவ சாதீய கொடுமைகளின் அட்டூழியம்.
ஆட்சியாளர்களோ, அரசியலமைப்புகளோ, சாதீய தாக்குதலில் இருந்து, இந்திய நாட்டின் பெரும்பாலான உழைக்கும் மக்களான, தலித்துகளையும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களையும் மீட்டெடுக்க தயாராக இல்லை.
தலித்திய மக்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டனர். கடுமையாக நிராகரிக்கப்பட்டனர்.
எல்லா கொடுமைகளில் இருந்தும் ஒடுக்கப்பட்ட மக்களை விடுவிக்கும் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டே இருந்தார் அம்பேத்கர்.    
1956- மே மாதம் 24-ம் தேதி  பம்பாய் நகரத்தில் நடக்கிறது. அம்பேத்கர் தலைமையிலான பிரமாண்ட கூட்டம்.
ஆயிரக்கணக்கான மக்களின் முன்னிலையில் தான் இந்து மதத்தைவிட்டு வெளியேற போவதாக திட்டவட்டமாக அறிவிக்கிறார். புரட்சியாளர் அம்பேத்கர்.
அதேசமயம்   புகழ்பெற்ற நகைச்சுவை கலைஞன்  பதே பாபுராவ், பார்ப்பனீய  சாதீயில் பிறந்தவன்.  அம்பேத்கரின் , அவரது கொள்கையின் மீது  அறிவார்ந்த  பற்றுதல் கொண்டான்.
பார்ப்பனிய  சாதீய கொடுமைகளால்   அம்பேத்கரின்   தாழ்த்தப்பட்ட  இன மக்கள்  ஒவ்வொரு  நாளும்  சித்ரவதைகளை  அனுபவித்து வந்ததும்.  பாபுராவை  நிலை குலைய செய்தது. 
ஒரு நாள்  தான் பிறந்த  பார்ப்பனிய சாதீயை விட்டு  வெளியேறுகிறான்  பதே பாபுராவ்.
உடனே தன்னை மகர் சாதியில் இணைத்துக்கொள்கிறான்.
இது போன்ற நிகழ்வுகள்  மாத்திரமில்லை…..
மராட்டிய மாநிலம்  மகர்களால்   முற்போக்கு  பாதையில், அம்பேத்கரின்  பாதையில்  கொண்டு  செல்லப்பட்டது.
மகாராஷ்டிர மாநிலத்தில்  மகர்கள், தங்கள்  கலைகளை ,அதன் வடிவத்தை  தீண்டாமையின்  சின்னமாக்கி  சிதைத்துவிடவில்லை.
ஆப்பிரிக்க, அமெரிக்க கறுப்பின  மக்களைப் போன்று, தங்களது கலைகளை  சாதீயத்தை  அழிக்கும்  ஆயுதமாக ஏந்த தொடங்கினார்கள்.
பண்ணையார்களையும், ஆட்சியாளர்களையும் ஆடியும், பாடியும்  சந்தோஷப்படுத்திய, தங்களது  தலித்திய  கலைகளை, அவர்களின்  அதிகாரத்திற்கு,  சாதீய  கொடுமைகளுக்கு  எதிராக பயன்படுத்தினார்கள்   ஜல்ஷா என்ற  மகர்  இன கலைஞர்கள்.
                                                                                   
                                                                                                            
ஆட்சியாளர்களையும்,  அதிகாரவர்க்கத்தினரையும்  பார்த்து, தீர்ப்பை  மாத்திச் சொல்லுங்க  என்று  தங்களது  அறிவாயுதத்தை  வீசினார்கள்  ஜல்ஷா கலைஞர்கள்.
1924-ல்  தமோதர்  அரங்கில் நடந்த கூட்டத்தில் அம்பேத்கரின்  பேச்சை  கேட்டார். ஜல்ஷா கலைஞர் கர்தக் பீம்ராவ்.
அன்றுமுதல்  அம்பேத்கரை தனது தலைவராக  ஏற்றுக்கொண்டார்.
1930-ல் நாசிக்கில்  ஜல்ஷா இளைஞர்கள்  சங்கீத  சபாவை நிறுவுகிறார்கள்.
கர்தக் பீம்ராவ்வின்  மதமாற்றம்  என்ற   வீதி நாடகம்  அரங்கேற்றப்படுகிறது.
1931- முதல், 1945 வரை   சாதீய கொடுமைகளுக்கு  எதிராக  ஜல்ஷா  கலைஞர்கள்  378   நாட்டிய  நாடகங்களை  வீதி வீதியாக  அரங்கேற்றினார்கள்.
உங்கள்  கடவுள் முன்னால் புனிதம் இருந்தாலும்…
ஒட்டிக்கொண்டிருக்கிறது  அவர்கள் மீது  சாதியின் தீட்டு.!
எப்போதும் திறந்ததில்லை
எங்களுக்காக திறந்ததில்லை
உங்கள் கோவில் கதவுகள்
புரிகிறதா? தாயே
நீ கடவுளை வணங்கலாம்
பூசைகள் செய்யலாம்
கடும் விரதங்கள் இருக்கலாம்
என்ன செய்தாலும் என்ன?
கருவறையின்  கற்சிலைகள்
காட்டப்போவதில்லை  உன் மீது கருணை!!
இப்படித்தான்  ஜல்ஷா  கலைஞர்களின் மேடைகள், இந்துக்கோட்டையின்  சாதி  அதிகாரத்தை  ஆட்சியை,  ஊர், ஊராகச்  சென்று  களமிறங்கி  தாக்கி  அடித்து  நொறுக்கின.
1952-ல்  அம்பேகரும்,  ஜல்ஷா  கலைஞர்களும்  நேரில்  சந்தித்தார்கள்.
இருபதாம்  நூற்றாண்டில்   இந்துத்துவாவிற்கு  மிகப்பெரும்  சவால்,  சந்தேகமில்லாமல்  அது  அம்பேத்கர்தான்.
டாக்டர்  அம்பேத்கருடன், இணைந்து  பார்ப்பனிய  சாதீய கொடுமைகளுக்கு  எதிராக  தங்களது   வாழ்நாளை  அர்ப்பணித்தவர்கள்…. தந்தை பெரியாரும், டாக்டர்  ராம் மனோகர் லோகியாவும்…
வட இந்தியாவில்  சாதீய கொடுமைகளில் இருந்து  தாழ்த்தப்பட்ட மக்களை  விடுவிக்க  அம்பேத்கர்  இரவு பகலாக போராடினார்.
தென் இந்தியாவில்  தந்தை பெரியார்  வீதி வீதியாய்  சுற்றி  சுழன்று   தாழ்த்தப்பட்டவர்கள்  சாதீய கொடுமையிலிருந்து  வெளியேற  வாழ்நாள் வரை போராடினார்.
                                             
1956-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், இந்திய சட்டமேதை பாபா சாகேப் அம்பேத்கர், தனது துணைவியார் சவீதா அம்பேத்கருடனும், ஆறு லட்சத்து 38 ஆயிரம் பெருந்திரளான உழைக்கும் மக்களுடனும் பெளத்த மதத்திற்கு மாறினார்.
மகாராஷ்டிர மாநிலம், நாக்பூர் நகரத்தில், தனது மக்களோடு, இந்துமதத்தின் சாதீய கொடுமைகளில் இருந்து விடுபடும் நோக்கில், பெளத்த மதத்தை ஏற்றுக்கொண்டார் அம்பேத்கர்.

அம்பேத்கர் பெளத்தத்திற்கு  தீக்‌ஷை  ஏற்றார்.
தீக்‌ஷா பூமி உருவானது.
ஓவ்வொரு ஆண்டும் விஜயதசமியில், தீக்‌ஷா பூமி பல லட்சக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்களோடு காட்சித்தருகிறது.
எங்குப்பார்த்தாலும் மனிதக்கூட்டம், நெடுந்தொலைவில் இருந்தெல்லாம் குடும்பம், குடும்பமாக வந்துக்கொண்டேயிருக்கிறார்கள்.
 கூட்டத்துக்குள் எந்தவிதமான பயமோ, அச்சமோ இன்றி அமைதியாக போய்க்கொண்டு இருக்கிறார்கள்.
.தீக்‌ஷா பூமியின் சகலதிசைகளிலும் அம்பேத்கரும், புத்தரும் ஒன்றாகவும், தனியாகவும் இருக்கும் படங்கள் காணக்கிடைக்கிறது.
ஆங்காங்கே ஒலிபெருக்கிகளில், அம்பேத்கர் பற்றிய பாடல்கள் ஒலித்துக்கொண்டெ இருக்கிறது.
ஜெய் பீம், ஜெய் பீம் என்ற வார்த்தைகளில், எதிர்படும் எல்லோருமே கட்டித்தழுவிக்கொள்கின்றனர்.
இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும், ஏன் உலக நாடுகளில் இருந்தெல்லாம் மக்கள் கூட்டம் தீக்‌ஷா பூமியில் சூழ்ந்துக்கிடக்கிறது.        
அம்பேத்கர் தலை நிமிர்ந்து நிற்கும் இந்த பூமியில், தாங்களும், தலை நிமிர்ந்து வாழவே விரும்புகிறோம் என்கிற ஒரே லட்சியம்தான். பல லட்சக்கணக்கான மக்களிடம் உறுதிபட தெரிகிறது.  
வெறும் உழைக்கும் மக்களால் நிரம்பி வழியும் தீக்‌ஷா பூமிக்கு வந்துபோகும் ஒவ்வொருவரின் முகத்திலும் அம்பேத்கரை உயிருடன் பார்த்தது போன்ற பரவசம்.
நாக்பூரின், தீக்‌ஷா பூமியில் இருந்து 14 கி.மீட்டர் தூரம் பயணித்தால், 30 நிமிடத்திற்குள் சென்று சேரமுடிகிறது சிச்சோலிக்கு.
சுற்றிலும் மலைகளும், பச்சை, பசலேன்ற வயல் வெளிகளும் சூழ்ந்துக்கிடக்கும்  ஓர் மகாராஷ்டிர கிராமம் தான் சிச்சோலி, இங்கு தான் அம்பேதரின்  நினைவுகளை பிரசவிக்கும், பலவும் இருக்கிறது.
பாபா சாகேப், அம்பேத்கர் .இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க பயன்படுத்திய தட்டச்சு எந்திரம்,  
அவரது  கைத்தடி, அவர் அணிந்திருந்த மூக்கு கண்ணாடி, அவரது உடைகள், அவர் எழுதிய ஏராளமான கடிதங்கள், அம்பேத்கர் எழுதப்பயன்படுத்திய பேனாக்கள்.  என அவர் காலத்தில், அவரால் பயன்படுத்தப்பட்ட பல பொருட்களும், அவரது அஸ்தியும்  இருக்கிறது.

இதனை காணவரும் பலரும், கண்ணீர் மல்க பல மணி நேரம் , அவர்பற்றிய நினைவுகளில் சுற்றிச்சுற்றி வருகிறார்கள்.
அம்பேத்கர் பயன்படுத்திய நாற்காலியில் வைக்கப்பட்டிருக்கும், அவரது புகைப்படத்தை தொட்டு வணங்கி திரும்பும் பலரும், அம்பேத்கரையும், அவர் பட்ட கஷ்ட்டங்களையும் நினைத்து ஆழ்ந்த மெளனத்தில் கலைகிறார்கள்.

அதோடு இன்னும் இறுக்கிப்பிடித்திருக்கும் சாதிய தாக்குதலில் இருந்து தங்களை மீட்டெடுக்க, இன்னுமொரு பாபாசாகேப் பிறக்க மாட்டாரா? என்ற பெருத்த ஏக்கத்தோடும், அவ்விடத்தை விட்டு, மீளாத்துயரில் கடக்கிறார்கள்.
எல்லா இடங்களிலும், சாதீய கொடுமைகளாலும்,சமூக அநீதிகளாலும் தினம், தினம் கூனிக்குறுகி வாழ்ந்து வரும் அவலத்தில் இருந்து விடுதலை என்ற குரல் தீர்க்கமாக இருக்கிறது.
சீனா, ஜப்பான், இலங்கை, தாய்லாந்து என்று உலக நாடுகள் பலவற்றிலுமிருந்து வரும் புத்தபிட்குகள் ஒவ்வொருவரும், இவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்திற்கு அமேபத்கர்தான் என்று மேடையில் பேசும் ஒவ்வொரு முறையும், ஜனத்திரள் உற்சாகமிகுதியோடு ஜெய்பீம்,ஜெய்பீம் என்று ஓங்கி குரல் எழுப்பிக்கொண்டே இருக்கிறார்கள்.
பரந்து விரிந்த அந்த 14 ஏக்கர் நிலப்பரப்பும், மனித கூட்டங்கள் சங்கமித்த காட்சியாகவே இருக்கிறது.
வழி நெடுக எங்குபார்த்தாலும் போஜனா போஜனா என்று முகம் நிறைய புன்னகை ஏந்தி அழைக்கிறார்கள்.
தீக்‌ஷா பூமிக்கு வந்துப்போகும் எவரும் பசியோடு இருக்கக்கூடாது என்ற கவலை நாக்பூர் மக்கள் எல்லோரையும் சூழ்ந்துக்கொண்டு இருப்பதை நகரும் பாதை எங்கும் காணமுடிகிறது.
தீக்‌ஷா பூமி நெடுகிலும், உணவு பொருட்களோ, குடி நீரோ எதுவுமே வியாபார பொருளாக இருக்கக்கூடாது. மனமுவந்து பசிபோக்கும் ஒன்றாகவே இருக்கவேண்டும் என்ற அக்கறை எல்லோரிடமும் இருக்கிறது.
நம்மூர்காரர்கள் மட்டுமல்ல, ஜப்பான் நாட்டு பல்கலைக்கழகத்தில் இருந்து வந்திருந்த டாக்டர் கியோகுனி சின்கா அம்பேத்கர் பற்றியும், அவரது பெளத்தம் பற்றியும் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.
அது மாத்திரமல்ல, உலக நாடுகளில் இருக்கும் பெளத்தத்தை விட அம்பேத்கரின் பெளத்தம் முழுக்க ,முழுக்க வித்தியாசமானது
 காலங்காலமாய் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான பெளத்தம் என்றும் . புரிந்துக்கொள்ள முடிந்ததாக சொல்கிறார்.
 சாதீய அடக்குமுறைகள் மிகுந்த இந்தியாவில், அதன் ஒடுக்குமுறையில் இருந்து மீண்டு சுயமரியாதையுடன் வாழ அன்றையகாலகட்டத்தில் அம்பேத்கருக்கு பெளத்தம் மிகுந்த பாதுகாப்பானதாகவும், சுதந்திரமானதாகவும் இருந்திருக்க கூடும்.
இந்த பகுதி தீக்‌ஷா பூமியாக மாறியதன் பின்னணியில், அம்பேத்கரும், அவரது சமூக மக்களும் சாதிய சூழலில் பட்ட வேதனைகளும், துயரங்களும் நிரம்பிக்கிடந்ததை ஆழமாக தெரிந்துக்கொள்ள முடிந்தது என்கிறார்.
இதுவரை மகாத்மா காந்தியும், அன்னை தெரசாவும் மட்டுமே தெரிந்திருந்த ஜப்பான் நாட்டு மக்களுக்கு,சமீபகாலமாக அம்பேத்கரும், அவரது புரட்சியும் பரிச்சயமாயிருக்கிறது என்று சொல்லி பெருமிதமடைகிறார்.
மேலும் அம்பேத்கர் பற்றியும், அவரது செயல்பாடுகள் பற்றியும் ஆவணப்படமாக்கி ஜப்பான் நாட்டு பல்கலைக்கழக மாணவர்களிடத்தில் கொண்டு போய் சேர்க்கப்போவதாக சொல்லும் கியோகுனி சிகாவை நினைக்கும்போது. இன்னும் அம்பேத்கர் பற்றி நினைக்க மறுக்கும் நம் கன்னத்தில் பளார் என்று அறைவதுபோல் இருக்கிறது.
சிச்சோலியில் இருக்கும் அம்பேத்கரின் நினைவு மண்டபத்திற்கு , குன்பி வம்சத்தைச்சேர்ந்த கோபிகா பாய் பாஜூராவ் டாக்கரே என்கிற பெண்.
அம்பேதகருக்காக 14 ஏக்கர் நிலப்பரப்பை தானமாக கொடுத்த சம்பவமும், இன்று எல்லோராலும் நெகிழ்வுடன் நினைவு கூறப்படுகிறது.
1956-ல் ஆறு லட்சம் மக்களை சாதீய கொடுமைகளில் இருந்து விடுவித்த அம்பேத்கரின் போராட்ட குணத்தைக்கண்டு, பிரமித்துப்போனார்  குன்பி  வம்சத்தை சேர்ந்த கோபிகா பாய் பாஜூராவ் டாக்கரே என்கிற  இந்து பெண்மணி.
அதற்கு பரிசாகவே  அந்த நிலத்தை கொடுத்ததாகவும்,அங்குள்ள குறிப்புகள் சொல்லுகின்றன.
இத்தனைக்கும், அம்பேத்கரும், கோபிகாவும் சந்தித்துக்கொண்டதில்லை என்பதும் கடந்த கால சான்றுகள்.
குழந்தைகள் ஜாக்கிரதை என்றோ, திருடர்கள் ஜாக்கிரதை என்றோ, உடமைகள் பத்திரம் என்றோ ஒரு அறிவிப்புக்கூட இல்லாமல் மிகுந்த பேரமைதியுடன் நடக்கிறது.
அம்பேத்கர் பெளத்தத்தை ஏற்றுக்கொண்ட நாளின் நினைவு தின அனுசரிப்பு. ஒரு தள்ளு,முள்ளோ, கலாட்டாவோ இல்லை, காவல்துறை வேலையே இல்லாமல் எட்டி நின்று வேடிக்கைப்பார்க்க மட்டுமே செய்கிறது.
அதிகாரத்தில் இருந்தும், சுரண்டலில் இருந்தும் விடுதலையான மனநிலை மட்டுமே அங்கு கூடும் மக்களின் நினைவுகளிலும், மனதிலும் நிரம்பிக்கிடக்கிறது.
ஆனால்  தீக்‌ஷா பூமியில் இருந்து  திரும்பும்…. ஒவ்வொருவரிடமும்   நீக்கமற  கிடக்கிறது… கடலளவு  சோகம்…
இந்தியாவில்   இன்னும்  சாதீய கொடுமைகளும்,  ஒடுக்கு முறைகளும்   நீடித்துக்கொண்டுதான்  இருக்கிறது… என்பதற்கு,  அங்கு வந்து போகும் மக்கள் சாட்சிகளாகவே  இருக்கிறார்கள்.
மறுக்கப்பட்ட உரிமை, கிடைக்காத  நீதி, இன்னும்  தொடரும்   தீண்டாமை, சாதீய ஒடுக்குமுறை  எல்லாவற்றிலும்  இருந்து விடுதலை… இதுதான்.


அம்பேத்கரின்   அஸ்தியை  வணங்கிச்செல்லும், மக்களின்  ஆத்மார்த்தமான  பிரார்த்தனை.
இன்னும்,  இந்த தேசம் முழுவதும்  தாழ்த்தப்பட்ட  பழங்குடியின , மிகவும்  பிற்படுத்தப்பட்ட  மக்களுக்கு  எதிரான  வன்கொடுமைகள்… தினம், தினம்  நடந்துகொண்டுதானிருக்கிறது.
இதற்கு  நாம்   வாழும்  சமூகமே  ஆகப்பெரும்  சாட்சி..
கீழ் வெண்மனியில்   44 தலித்துகளை  உயிரோடு… கொழுத்தி, தங்களது  சாதிவெறியை  தணித்துக்கொண்டது  அதிகார வர்க்கம்.
பறவைகளையும், விலங்குகளையும்  வேட்டையாடுவதில் கூட, ஒழுங்கையும் நேர்மையினையும்  கடைப்பிடிப்பவர்கள்  பழங்குடியின மக்கள்.
1992-ம்  ஆண்டு  சூன் மாதம், தர்மபுரி மாவட்டம், வாச்சாத்தி  பழங்குடியின மக்கள் மீது… ஆட்சி, அதிகாரமும், சாதீய பார்ப்பனியமும்  தங்களது  சாதீய வெறியை  காட்டியது.
சக மனிதர்களாலேயே   சிதைக்கப்பட்டு,  ஒடுக்கப்பட்டனர்  வாச்சாத்தி  மக்கள்.
இவ்வளவு  ஆண்டுகளுக்குப்பிறகும்,  நீதி  கிடைத்தபாடில்லை   அம்மக்களுக்கு…
திருச்சி  மாவட்டம். திண்ணியத்தில்    தலித்  இளைஞரின்  வாயில்  மலத்தை  திணித்தது.  ஈவிரக்கமில்லாத   சாதீயம்.
மேலப்பாளையம்,  மேலவளவு, பாப்பாபட்டி,  கீரிப்பட்டி,  இப்படி…. நீதி  மறுக்கப்பட்டு, 
சாதீய, கொடுமைகளால்   சிக்கித்தவிக்கும்   கிராமங்கள்  ஏராளம்.
திருச்சி மாவட்டம்…  குரங்குப்பேட்டை  கிராமம்.
மரத்தில் இருந்து , விழுந்த  நாவல் பழத்தை  எடுத்துச் சாப்பிட்ட குற்றத்திற்காக… பத்து வயது தலித் சிறுவன் கருணாகரனுக்கு… ஆதிக்க சாதி கொடுத்த தண்டனை  நெஞ்சை  உலுக்குகிறது.
கழுத்தில்  கயிற்றைக்கட்டி, மாட்டை வைத்து  இழுத்துச்செல்ல  நிர்பந்திக்கப்பட்டிருக்கிறான்   கருணாகரன் .
இரு  சக்கர வண்டிகளை  தலித்துகள்  எங்கள் தெருபக்கம், ஓட்டக்கூடாது  என்கின்றனர்.
மதுரை  மாவட்டம்  திருமங்கலத்திற்கு அருகில் உள்ள  வில்லூர்  கிராமத்தின்  சாதி இந்துக்கள்.     
இப்படி  அனுதினமும், ஆயிரமாயிரம்  தலித்திய  குழந்தைகளும், பெண்களும் , ஆண்களும்  அதிகார  சாதீய  கொடுமைகளுக்கு  பலியாகிக்கொண்டுதான்  இருக்கிறார்கள்.
2006 முதல்  2008 வரை ,  இந்தியா  முழுவதும்  தலித்துகளுக்கு  எதிரான தாக்குதலில்  35,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2008-ல் 30, 913 வழக்குகள்  பதிவாகியிருக்கின்றன.
உத்திரபிரதேசத்தில்  மட்டும், தலித்துகளுக்கு  எதிரான  தாக்குதலில் 7,960 வழக்குகள்  பதிவாகியிருக்கின்றன.
தீண்டத்தகாத  மக்களை வெறுத்து   சமூகத்திலிருந்து  வெறுத்து  ஒதுக்குவது, மரண தண்டனையை  விட கொடியது   என்றார்.  புரட்சியாளர்  அம்பேத்கர்.
மக்கள் எல்லோரும் ஒரே சாதி என்கிறது  வள்ளுவனின்  குறள்…
மரண தண்டனைக்கு , எதிராக குரல் கொடுப்போர்களோ..!,  கடவுளர்களுக்காக  குரல் கொடுப்போர்களே!.. நடிகர், நடிகைகளுக்காக குரல் கொடுப்போர்களே!... தலித்திய  விடுதலைக்காவும்  குரல் கொடுங்களேன்!... பண்பாட்டு  தளத்திலிருந்தும்,  அரசியல்  தளத்தில் இருந்தும்… விடுதலை   ஆவோம்…