Friday, June 11, 2010

துயரங்களின் நீட்சி( சூரியன் தனித்தலையும் பகல் கவிதை நூலை முன்வைத்து)


துயரங்களின் நீட்சி( சூரியன் தனித்தலையும் பகல் கவிதை நூலை முன்வைத்து)
வாழ்வின் நெடியதூரம் செறிவு மிகுந்த துயரத்தை மட்டுமே உடுத்திக்கொண்டு பிரவேசிக்கும் தமிழ்நதிக்கான பொழுதுகளனைத்திலும், ஏமாற்றங்களும், தவிப்புகளும் தாங்கவொணாத வேதனைகளும் புரையோடிக்கிடக்கின்றன. இவை அனைத்தையுமே துல்லியமானதொரு தளத்திலிருந்து பகிர்ந்துக்கொள்வதே சூரியன் தனித்தலையும் பகல்.

பேச்சிலிருந்து கவிதைக்கும், கவிதையினூடாக ஆழ்ந்த மெளனத்திற்கும் சென்று இறுதியில் தூய பிராந்தியத்திற்குப் போய் இயற்கை விதிகளுக்கு ஏற்பாட்ட நிர்மாணிக்கப்பட்ட நிசப்தங்களின் மீதானதொரு உலகத்தைச் சென்றடைகிற தமிழ்நதியின் கவிதைகளை வாசிக்கிறபோது உண்மையின் பொருட்டு பெரும்பாலனவற்றை இழக்க நேரிட்டவர்களின் வேதனையினை உள்வாங்கி ஈரம் கசிந்துருகும் நிலை வாய்க்கிறது.

தமிழ்ச் சூழலின் நவீன கவிதையின் பிதாமகனான பாரதியிடமிருந்த அநேக பிரதிபலிப்புகளில் ஒன்றாகிய வேதாந்த விசாரங்களை விதந்தோதுதலின் மீதேறி, தற்போதைய நவீன கவிதை என்பது விபூதி வீச்சமும், பூக்கள்வாசமும் கொண்ட கலாச்சாரத்தில் ஊறித்திளைத்தவர்களின் விரல்களுக்குள்ளாகவே பயணிக்கிறது. ஆனால் குருதி வீச்சமும், மரண ஓலமும் துப்பாக்கிச் சத்தமும், புலம்பெயர்தலும் அதிகாரவர்க்கத்தால் திட்டமிட்டு இயக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஈழத்தின், கவிதைச் சூழல் தமிழகத்தின் போக்குக்கு எதிர்மறையானது.

ஆரம்ப காலந்தொட்டே சமூக, அரசியல், வடுக்கள் போன்ற சகல கூறுகளையும், பதிசெய்யும் பொழுது அழகியலோடும், நேரடித்தன்மையோடும் பேசக்கூடிய ஒருவிதமான தொன்மத்தை தன்னகத்தே கொண்டு ஈழத்தின் கவிதைத்தளம் பயணித்துக்கொண்டிருக்கிறது. அவற்றிலிருந்து மற்றுமொரு நம்பிக்கை பெறத்தக்க படைப்பினை சூரியன் தனித்தலையும் பகலாகத் தமிழ்நதி தந்திருப்பது என்பதானது, சமகாலச்சூழலில் ஈழத்தின் துயரரேகைகளைத் தவறின்றி புரிந்துக்கொள்ளும் மனநிலையை தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்கிடும்.

மயில் அகவும்/ வன்னியின் விறு கூடொன்றில்/ காதோரக்குழல் விலக்கி/ முத்தமிட்டுத் துயில் கலைக்கும் விடியலின்றி(காற்றில் நடுங்கும் மெழுகுவர்த்தி) என்ற வரிகளின் வழியாக சனநாயத்தின் அடிப்படை ஊற்றுக்கண்களாக இருக்கும் சுதந்திரம், சமத்துவம், மற்றும் சகோதரத்துவத்திற்கு எதிரான ஈழத்தின் சூழலிலிருந்து விலகிச் சென்றாலும், சென்றவிடத்திலுள்ள பாதுகாப்பாற்ற, நிச்சயமற்ற வாழ்க்கை முறையை அடையாளத்தை முன்னிறுத்துவதன் வாயிலாக, இவ்விடத்தில் கவனங்கொள்ளத் தக்கவராகிறார். வாழ்தலும், வாழ்தல் பொருட்டும் அவ்விடங்களில் நிகழ்த்தப்படும், அந்நியப்படுத்தப்படுதல், இவற்றினூடாக வியாபித்துப் படரும் துயரத்தின் பதிவாகவும் அமைந்துவிடுவதோடு, வேர்களை மீட்டுருவாக்கம் செய்வதற்கான அவசியத்தையும், இழையோடச் செய்துவிடுகிறார்.


 

இவ்வாறான பூகோள ரீதியிலான பாதுகாப்பு உணர்வினை ஏக்கமாக பதிவு செய்திருப்பதன் மூலமாக சனநாயகத்திற்கு எதிரான உளவியல் மேலும், மேலும் அதிகரித்துக்கொண்டேயிருப்பதால், பூமியின் எப்பகுதியிலும் துள்ளி வெளிப்படுகிற கொஞ்சநஞ்ச சனநாயக மதிப்பீடுகள்கூட மெல்ல அழிக்கப்பட்டுவரும், செய்தியையும் மனிதனினி உணர்வு என்பது சமூகவாழ்நிலையில் இருந்தே நிர்ணயிக்கப்படுகிறது என்பதையும் சொல்லிச்செல்கிறார். இத்தொகுப்பானது மேற்குறித்த ஏக்கம் நிரம்பிய அநேக குரல்களின் சாட்சியமாய் வாசிக்கக் கிடைக்கிறது.

கட்டிடக்காட்டின் முடிவில் தொடங்கும்/ ஊசியிலை மரச்செறிவைக் காணுந்தோறும்/ வன்னியில் பனிபெய்த விடியலில்/ மீள விழித்தெழுகிறேன்/ கடல்தாண்டி வருகிறது உளுந்து வாச்னை/ கூடவே பாம்புகளின் நினைவும்(ஞாபக வாசனை) என்ற வரிகளில் இருத்தலும், இருத்தல் நிமித்தமும் சார்ந்து விளைகிற எதிர் எதிர் முரண்பாடுகளை இருவேறு வாழ்வியல் சார்ந்து சிறந்தவற்றை முன்னகர்த்தி நினைவுகளினூடாக தொனிக்கச்செய்கிறார்.

மேலும் முதல் உலகநாட்டு இருப்பும், அதனையொட்டிய பிரயத்தனங்களையும், குறிப்பிட்ட கட்டிடம், ஊசியிலை என்ற அதிகாரவர்க்கத்தின் குறியீடுகளை பயன்படுத்தியுள்ளார். அதனுடைய பரப்பரப்பினையும் இயந்திரகதியான அதனுடைய வாழ்க்கை முறையினையும் பகடிச்செய்வதற்காக உளுந்து, பாம்பு போன்ற உழைக்கும் வர்க்கத்தின் குறியீடுகளைக்கொண்டே பகடி செய்யும், செய்யுத்தி ஆழமானதொரு அரசியலை மிகச்சாதுர்யமாகப் பேசிச் செல்கிறது. இவற்றிலிருந்து விட்டு விடுதலையாகி எல்லோருக்கும் பொதுவானதொரு சூழலுக்குள் பயணிக்கவும் எத்தனிக்கிறார்.

அவலம் சூழ்ந்த மூன்றாம் உலகநாட்டுப் பிரதிநிதிகளான தங்களுடைய நிலமும், நிலம்சார்ந்த நிகழ்வுகளும் வாழ்வியலோடு சேர்ந்து பயணித்து முரண்பாடுகளைக் கொண்டு பேசுவதன் ஊடாக இதற்குள் யுத்தம், சீரமைப்பு, என்ற பெயரில் தங்களது வேரடி மண்ணைச் சிதிலமாக்கிக் கொண்டிருக்கும், முதல் உலகநாட்டு வணிக அரசியல் குறித்தும், படிம குறியீடு சார்ந்தும் இயங்கக்கூடிய இக்கவிதை அதி உன்னதம் பெறுகிறது.

வரலாற்றில் உண்மையான சிறப்புக்குறியவர்கல் வெகுமக்களும், அவர்களின் உற்பத்தி சார்ந்த உறவுகளும்தானேயன்றி, எப்போதும் தவறு செய்யக்கூடியவர்களான தனிப்பட்ட அதிகாரவர்க்கத்தினர் இல்லை. மேலும் ஒடுக்கப்பட்டுக்கொண்டிருப்பவர்கள் மற்றும் தோற்றுப்போனவர்களின் வரலாற்றைக்கூட அதிகாரவர்க்கத்தினரின் விரல்கள்தான் தீர்மானிக்கின்றன.

இதனை எதிர்த்து அவ்வப்போது ஆழமாகப் படர்கிற எதிர்வினைகள் எல்லாம் வெறும் கூச்சல், கலகம், என்ற முதலாளித்துவ சொல்லாடல்களின் மூலம் அதிகார வர்க்கம் நிராகரித்து விடுகிறது. என்ற கவனத்துக்குரிய அரசியல் ஒன்றைக் கீழ்வரும் அவரிகள் முன்வைக்கின்றன. புனைவுகளின் பெருங்கதையாடல்களில்/ தேவதேவதைகள் பேய்களாயினர்/ நமது எல்லோருக்குமான அதிகாரம்/ இதன் வழியாக புரையோடிப்போன வலியினையும், அதற்கு எதிரான மனநிலை வாய்க்கவேண்டும் என்றும் அழ்ந்த துணிச்சலோடு முன்வைக்கிறார்.

இன்றொரு நாள் எனினும் என்று தலைப்பிடப்பட்ட கவிதையில்.

அம்மா!மண்டியிட்டுக் கேட்கிறேன்/ உணவருந்தும் பீங்கானை/ இந்த ஒரு தடவை நான் உடைக்கிறேன்/ சிலீரென்றழும் ஓசையால் உறக்கமும், குழந்தைமையும் கலைக்கப்பட்ட/ அவ்விரவுகளை மீட்டெடுக்க/ என்ற வரிகளின் உள்ளடக்கமானது ஒருவிதமான பிரார்த்தனையுடன் அமைந்திருப்பது என்பது,பெண் தெய்வங்கள், இதுபோன்ற பிரார்த்தனைகளுக்கெல்லாம் கடந்த காலத்திலும் செவிசாய்த்தனர் என்ற குறுங்கதையாடலுக்குரிய நம்பிக்கையாக இன்றும் தொடர்ந்துக்கொண்டிருக்கிறது. இவற்றில் இழையோடுகிற தொன்மம் என்பது அதிகாரசக்திகளிடமிருந்து தங்களுக்கு வரக்கூடிய தாக்குதல்களுக்கு எதிரான தாக்குதலை நடத்தும் செயலை, தங்கள் நம்பிக்கைக்குரிய சிறுதெய்வத்திடமே விட்டுவிலகுதல் என்பது ஈழத்தின் போர்ச்சூழல் விளைவிக்கிற புலம்பெயர்தலில் சிக்கிக்கொண்ட மக்கள் தங்களது பகை சக்திகலை கற்பனையில் மட்டுமே வசப்படுத்தி, நிதர்சனமாக வென்றுவிடும் நம்பிக்கை, அவற்றில் மிளிர்கிறது.

எழுத்து, விடைபெறாத அரங்கம்,, பிள்ளைகள் தூங்கும் பகற்பொழுது, ஒரு நாளும் இரண்டு அறைகளும், மன்னிக்கப்படாதவளின் நாட்குறிப்பு, நீரின் அணைப்பு, இப்படியாக தலைப்புகள் உள்ளடங்கிய தொகுப்பு.


 






நூல் மதிப்புரை:


நூல்
மதிப்புரை:

தமிழ்ச்
சூழலுக்கு
முன்மாதி
ஆசிரியர்:

நமது கல்வியின் உள்கட்டமைப்பு என்பது, நம் சமூகத்தில் நீடிக்கிற ஏற்றத்தாழ்வுகளை ஏற்றுக் கொள்கிற மனிதர்களை திட்டமிட்டு உற்பத்தி செய்கிற ஏற்பாடுகளோடுதான் இருக்கிறது.கீழ்மட்ட(அப்படி உருவாக்கப்பட்ட) குழந்தைகள், நசுங்கிய அலுமினிய தட்டோடும், கிழிந்த சட்டைகளோடும், ஒழுகிய மூக்கோடும், பள்ளிக்குள் நுழைகிறபோது, அங்கிருக்கக்கூடிய பாடத்திட்டங்களையும், தேர்வு முறைகளையும், இவற்றை குழந்தைகளிடம் திணிக்க பிரயத்தனப்படும், ஆசிரியர்களையும், பார்த்து பீதியடைந்து பள்ளியை விட்டு இடைநிற்கும் அவலம் நீடித்துக்கொண்டுதானிக்கிறது.

இப்படியான குழந்தைகளை இதர குழந்தைகளோடு சமமாக வைத்து கல்வி கற்பிக்க வேண்டும் என்ற பார்வை கொஞ்சம் வளர்ச்சியடைந்திருப்பது குறித்து நாம் மகிழ்ச்சிக் கொள்ளலாம். ஆனால் முதல் தலைமுறையாக பள்ளிக்குச் செல்லக்கூடிய குழந்தைகள் எல்லாவற்றையும், அடிப்படையில் இருந்தே கற்கத் தொடங்க வேண்டியிருக்கிறது.

படிப்பதற்கு புத்தகங்களோ, பத்திரிகைகளோ, கேட்பதற்கு ரேடியோவோ, பார்ப்பதற்கு தொலைக்காட்சியோ, இல்லாத சூழலிருந்தும்,( இப்பொழுது அநேக வீடுகளில் தொலைக்காட்சி இலவசமாக வந்துவிட்டது ஒருபுறம்) தங்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகளை நேர்செய்வதற்கான புரிதலும், நம்பிக்கையுமற்ற பெற்றோர்களிடமிருந்தும், எதிர்பார்க்க முடியாத அன்பினையும், ஆதரவினையும், பள்ளிக்கூடம் தருவதுதான் ஆரோக்கியமான குழந்தைகள் சமூகத்தை உருவாக்க ஏதுவானது. ஆனால் அவ்வாறு பள்ளிகள் தருவதில்லை. என்பதை தன்னம்பிக்கையற்ற, போராட்ட குணமற்ற சமூகத்தை நாம் தொடர்ந்து உற்பத்தி செய்து வருவதிலிருந்தே கண்டு கொள்ள முடியும்.

இந்தச் சூழல் தொடர்ந்து நீடிக்கிற பட்சத்தில், எந்தவிதமான அடிப்படை வசதிகளற்ற கிராமப்புற குழந்தைகள்; அறிவுத் தனத்திலும் போட்டிகளத்திலும் நகர மற்றும் தலைநகர குழந்தைகளோடு தங்களை சமப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பினை நமது பாடத்திட்டங்களும், தேர்வு முறைகளும் இதுவரை உருவாக்கத் தவறிவிட்டன.

அடிமட்டத்து குழந்தைகளை மேல்மட்டத்து குழந்தைகளோடு ஒன்றிணைப்பதற்கான கல்வி குறித்து விடுதலையடைந்த இந்த அரை நூற்றாண்டு காலம் கடந்த பின்னரும் கூட விவாதிப்பதற்கான, சூழல் இன்றும் தீவிரமடையவில்லை.

ஆனால் நீண்ட காலத்திற்கு முன்பே, சோவியத் நாட்டின் சோதரக் குடியரசுகளில் ஒன்றாகிய கீர்கிஸியாவில் கிராமப்புற குழந்தைகளை, தலைநகர குழந்தைகளின் நிலைக்கு கொண்டு செல்வதற்கான, கல்வி குறித்த திட்டமிடலும், அதனைச் செயலூக்கம் பெறச் செய்வதற்கான அக்கறையும், இருந்திருக்கிறது. அதன் வாயிலாக சோவியத் ஆட்சி அங்கு நிலைநின்றிருக்கிறது. இத்தகைய அனுபவத்தைத்தான் சிங்கிஸ் ஐத்மாத்தவ் தனது முதல் ஆசிரியர் என்ற குறுநாவலின் மூலம் பதிவு செய்திருக்கிறார்.

படிப்போ, பள்ளிக்கூடமோ எதுக்கு எங்களுக்கு என்ற அறியாமையில் மூழ்கிக் கிடந்த மக்களை கொண்ட அந்த குர்க்குரீ கிராமத்தில்தான் இந்த ஆகச்சிறந்த வேலை நடைபெறுகிறது. தனியொரு மனிதனாக நின்று, அக்கிராமத்தின் முதல் ஆசிரியராகவும், முதல் கம்யூனிஸ்டாகவும் தன்னை வடிவமைத்துக் கொண்ட துய்ஷேன் சிங்கிஸ் ஐத்மாத்தவின் படைப்பில் நிதர்சனமாகி விடுகிறார். வாசிக்கிறபோது நம்மையும் ஆட்கொண்டு விடுவது பிரமிக்கவைக்கிறது.

இதற்கெல்லாம் அவருக்கு உந்துசக்தியாக இருந்தது எதுவாக இருக்கமுடியும்? சமூக அக்கறையும், தொலைநோக்கு பார்வையும் கொண்ட இடதுசாரி நிலைபாடுதான், புரட்சிக்குப் பின்பான சோவியத் சமூகத்தில், அக்கிராமத்தின் நிலப்பிரப்புக்கள் காலிசெய்துவிட்டுப் போன குதிரைக் கொட்டடிகள் கூடப் பள்ளிக்கூடங்களாக உருமாற்றம் அடைய வேண்டிய, அவசியமும், அவசரமும் இருப்பதை தனது கட்சியினூடாக, துய்ஷேனுக்கு தெளிவாக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் அத்தகைய மண் பள்ளிக்கூடத்திலிருந்து, மாஸ்கோ வரைச் சென்று கல்வியில் அறிஞராக பரிணமித்த அல்தினாய் போன்ற சிறுமிகளை அவரால் உருவாக்க முடிந்திருக்கிறது.

இயற்கையை பராமரிப்பதும், பாதுகாப்பதும்கூட கல்வியின் ஓர் அங்கம்தான் என்ற புரிதலை, தனது குழந்தை அல்தினாயோடு, துய்ஷேன் சேர்ந்து நட்டு வளர்த்த பாப்ளர் மரங்களின் வாயிலாக உணரமுடிகிறது.

ஒரு சமூக மாற்றத்தை உருவாக்கவும், நாடு போற்றும் அல்தினாய் என்ற கல்வியியல் அறிஞரை உருவாக்கவும், துய்ஷேனுக்கு குச்சிகளோ பாடப்புத்தகங்களோ, தேர்வு முறைகளோ தேவைப்படவில்லை. ஆனால் இன்ரு இவையெல்லாம் இருந்தும்கூட கெட்டித்தட்டிப்போன சமூக அமைப்பே நீடிக்கிறது.

இவ்வாறான தருணத்தில்தான் சிங்கிஸ் ஐத்மாத்தவின் துய்ஷேன் , முதல் ஆசிரியராக தமிழில். பூ. சோமசுந்தரம் மூலம் நமக்கு தேவையாயிருக்கிறார். இவரை உள்வாங்கிக் கொள்வதன் மூலம் திடகாத்திரமான கல்விச் சூழலை ஏற்படுத்துவதற்கான மனநிலை வாய்க்கப் பெறுவது உறுதி.

தந்தை, தாய், இல்லாத அனாதைச் சிறுமியான அல்தினாய் ஆகச்சிறந்த துயரங்களோடும், துடிப்போடுமிருந்தாள். அவளுக்குள் அமிழ்ந்து கிடந்த சாத்தியங்களை, தனது அணுகுமுறையின் மூலம், அவளுக்குள் நம்பிக்கையை விதைத்து வெளிக்கொண்டு வந்ததன் மூலம் அசாத்தியமான வேலையை அவரால் எளிமையாக நிறைவேற்ற முடிந்தது.

நமது காலத்திலும், இந்த முதல் ஆசிரியர் மாதிரியான நன்பர்களும், பள்ளிக்கூடங்களும் இருப்பதை நாம் அறிந்துக்கொள்வது கூடுதல் பலத்தை நமக்களிக்கும்