Tuesday, February 2, 2010

புத்தகம் பேசுது இதழில் வெளியான நூல் மதிப்புரை

 

மார்ச் 2009
அறம் அணுகுண்டாய் மாறிய கதை
- ஈஸ்வர சந்தானமூர்த்தி

நூல் அறிமுகம்

பயங்கரவாதம் : ஓர் உளவியல் பார்வை

. செல்லபாண்டியன்
பக். 122, விலை: ரூ.80/
கார்முகில் பதிப்பகம், மதுரை2


      குஜராத் மாநிலம் கோத்ராவில் தொடர் வண்டி நிலையத்தில் பிப்ரவரி 27, 2002 அன்று சபர்மதி விரைவு வண்டியினுடைய எஸ்_6 பெட்டி எரிந்து போனது. அல்லது எரிக்கப்பட்டது. குஜராத்தைச் சேர்ந்த இஸ்லாமிய தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்தான் 60 லிட்டர் பெட்ரோலை வெளியே இருந்து எஸ்_6 பெட்டிக்குள் ஊற்றிக் கொளுத்தினார்கள் என்பது இந்துத்துவம் என்ற சொல்லிற்குள் புதைந்து கிடக்கின்ற மதவெறிக்கும்பல்களும், காவிநிற சாயம் பூசிய குஜராத் மதவெறி போலீசாராலும் கண்டறியப்பட்ட சிதம்பர ரகசியமாக அன்றும், இன்றும் முதலாளித்துவ மதவாத ஊடகங்களின் கரம்பிடித்து சாமானிய புத்திக்குள் திணிக்கப்பட்டு வந்தது. இன்றும் வருகிறது.


பொதுவாக இந்தியாவின் ஏதாவதொரு பகுதியில் குண்டு வெடித்தால், பேருந்து நிலையத்தில் குடை தைக்கும் முஸ்லிம் நபரை சந்தேகிக்க பழகிப் போன நமது பொதுப்புத்திக்கு அதனுடைய உண்மை நிலவரம் குறித்து அறிந்துகொள்கிற துணிவும், நேரமும் மிகக்குறைவுதான். இத்தகைய குறைபாட்டிற்கு கூட நாம் காரணமில்லை என்று கூறுகிற பட்சத்தில் அடிமைகால இந்திய மனநிலை தொடங்கி, இன்றுவரையிலும் தீவிரவாதம் குறித்தும், தீவிரவாதிகள் குறித்தும் நமக்குள் விதைக்கப்பட் டிருக்கும் சிந்தனையும் செயல்பாடும் ஒரு காரணமாக சொல்ல முடியும்.


நம்மை சீரழித்தது போதாது என்று இனிவரும் சமூக அமைப்பைக்கூட முதலாளித்துவ மனநிலை யோடும், எஜமானிய விசுவாசத்தோடும் தக்கவைத்துக் கொள்ள ஏதுவாக தமிழ் ஊடகங்களும் இருக் கின்றன. தமிழ் திரைப்பட தாதாக்களான அர்ஜூன், விஜயகாந்த், சரத்குமார் போன்றவர்கள் எல்லாம், வில்லன்களுக்கு இஸ்லாமிய பெயரிட்டு, தீவிரவாதத்துக்கும், இஸ்லாமியத்திற்குமான தொடர்பினை உறுதிப்படுத்துகிற வித்தையை நிகழ்த்து வதோடு... தங்களுடைய இந்துத்துவ சார்பு மனநிலையையும் கோர்த்து நமது பாழாய்ப்போன சராசரி மூளைக்குள் அமரவைத்து விடுகிறார்கள். அதோடு வசூல் வேட்டையில் பட்டையைக்கிளப்பி, போலி தேசபக்தி கோசத்தோடு, தனிக்கட்சி துவக்கி விடுகிறார்கள். நாமும் கடன் வாங்கி அவர்களுக்கு கட்அவுட் வைத்தே காலத்தை கடத்துகிறோம்.


இஸ்லாமிய பயங்கரவாதம் குறித்தும், இந்துத்துவ தீவிரவாதம் பற்றியும் நமது சராசரி பார்வைக்குள் விதைக்கப்பட்டிருக்கும் கருத்தியல், இரண்டின், பின்புலம், வளரும் சூழல், புவியியல் சார்ந்து அதன் ரீதியான தொடர்பு இவற்றை அதனதன் அடிப்படை சார்ந்தும், உளவியல் நோக்கிலும் ஆராய்கிறது இந்நூல். மேலும் பல்வேறு இந்தியச் சூழல்களில் நிகழ்ந்தேறிய இந்துத்துவாவின் வெறுப்பு, இஸ்லாமிய எதிர்ப்பு இரண்டின் காரண காரிய தொடர்புகளை, விரிசல்களை உலகளாவிய ப்ராய்டு மற்றும் க்ரெடன் போன்றவர்களின் பார்வையோடு இணைத்து தமிழக மற்றும் இந்தியச் சூழலை பேச எத்தனித்திருப்பது கூடுதல் சிறப்பம்சம்.


அச்சுறுத்தல் என்பது, மேலிருந்து ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் மூலமாகச் செலுத்தப்படு கிறது. எந்த அளவிற்கு யாகோபின்கள் சாதாரண மக்களால் புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருந் தார்களோ அதேபோல் நவீன பயங்கரவாதிகளின் புதிரான பலமும், இதுவரை அறிந்திராத யுக்திகளும், அனுமானிக்க முடியாத நிலமையும், பலரையும் குழப்பமான நிலைக்குச் செலுத்தியுள்ளது என்ற வரிகளைக் கொண்டு குஜராத் படுகொலைகளின் உளவியலை கூற முற்படுகிற ஆசிரியரின் வாதம் வரலாற்றினை பின்னோக்கி சென்று துலாவிப் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது.


புராணச் செய்திகளில் இருந்து 18ஆம் நூற்றாண்டின் இறுதி வரையிலான திருஅரங்கம் கோயில் வரலாற்றைக் கூறும் இந்நூலில், இஸ்லாமிய படையெடுப்பு குறித்து இடம்பெற்றுள்ள பகுதியை மிகைப்படுத்தி, இப்படையெடுப்பின்போது 12,000 வைணவர்கள் கொல்லப்பட்டார்கள் என்றுதான் தனது கற்றதும் பெற்றதும் பகுதியில் சுஜாதா எழுதினார். இஸ்லாமிய எதிர்ப்புணர்வை வளர்ப்பதுதான், அவரது மேட்டிமை கலாசாரத்தின் திட்டமிட்ட, ஆனால் காலம் காலமான போக்கு... அதே நேரத்தில்கோவில் ஒழுகு நூலில் இடம்பெற்றுள்ள வரலாற்றுச் செய்திகள் குறித்து சுஜாதா எதுவும் கூறவில்லை. அதாவது கி.பி. 1477 ஆம் ஆண்டில்ஒரிசா நாட்டு இளவரசனாகிய குமாறம்பிரா என்பவனது தமிழ் நாட்டுப் படையெடுப்பு நிகழ்ந்தது. இப்படையெடுப்பு குறித்து வைஷ்ணவ ஸ்ரீ தமது கோயில் ஒழுகு பதிப்பில் பின்வருமாறு எழுதியுள்ளார்.


கோயில்களில் உள்ள ஆபரணங்களையும், விக்ரகங்களையும் அபகரித்தான். இந்துக் கோயில்களை இடித்துத் தள்ளினான். இவனுடைய செயல் முகம்மது கஜினியினுடைய செயலைவிட மோசமானதாக வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடப்படுகிறது. ஒரு இந்து மன்னனே இந்துக் கோயில்களை இடித்த இந்தச் சம்பவம் கல்வெட்டுகளில்ஒட்டர்கள் கலப்பை என்று வர்ணிக்கப்படுகிறது. கூர நாராயண ஜீயர் என்பவர் வைணவ விரோதிகளை திருவானைக் காவலில் சைவர்களை ஒழித்தது குறித்தும்கோவில் ஒழுகு நூல் கூறுகிறது. இது யாருடைய அறம் என்று அப்பொழுது சுஜாதா உணர்த்த தவறியதில் வியப்பொன்றும் இருப்பதற்கில்லை. ஏனெனில் வரலாற்றில் இஸ்லாமியர் மட்டுமே கொடுங்கோலர் என்று சித்திரித்து, வந்தார்கள் வென்றார்கள் என்னும் தலைப்பில் மதன் எழுதிய நூலுக்கு முன்னுரை வழங்கிப் பாராட்டியுள்ள ஸ்ரீரங்கத்து அவாளுக்கு இவ்வுண்மைகள் புரிந்திருக்க வாய்ப்பில்லைதான். இந்தக் கடந்தகால மறைக்கப்பட்ட வரலாறுகளை மறுவாசிப்பு செய்ய... இப்புத்தகத்தில் ஆசிரியர் கையாண்டுள்ள... குஜராத் படுகொலை தொடர்பான நரேந்திரமோடி, அத்வானி, அடல்பிகாரி வாஜ்பேயி போன்றோரின் பார்வையினை, நாம் சுஜாதாவின் பார்வையிலிருந்து அவதானித்துக் கொள்ள உதவுகிறார்.



மேலும் புனிதவாதம் என்கிற சாக்கில் இந்துமதம் என்றும் புனிதம் என்கிற இந்துத்துவா அரசியலையும் எண்ணப்போக்கையும் கருத்தியலாக உருவாக்கும் முயற்சியே தொடர்வது இந்துத்துவா அரசியலின் குணாம்சமாக இருந்து வருகிறது, என்று சேதுக்கால்வாய் பிரச்சனையோடு.. தொடர்படுத்தி நமக்கு அதன் ஆக்டோபாஸ் கரங்கள் பரந்து விரிந்த பகுதிகளைபீலா க்ரன்பர்கரின் உளவியல் கொண்டு . செல்லபாண்டியன் நமக்கு வெளிச்சமிடுகிறார்.


இந்த எதிர்ப்புகளை கண்டு பயந்து விடுமா... என்ன? பார்ப்பனியம்... யதிராஜர்’, உடையவர்’ என்று வைணவர்கள் போற்றும் இராமானுஜரைக் கொல்ல முயன்றதே வைணவப் பார்ப்பனர்கள்தானே... அதன் சூழ்ச்சியே பார்ப்பனியம் என்பதைஇந்துத்துவா என்ற சொல்லுக்குள் பதுங்கிக் கொண்டு ஏனைய சாதிகளையும் உண்டு செறித்து, தொடர்ந்து சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதுதான். இதற்குதான் பார்ப்பனியம் தனது புனிதத்தையும், தத்துவத்தையும் பிரசவித்து வருகிறது. மேலும் இப்புத்தகத்தின் ஆசிரியர் கூறுவது போல், வன்முறை மற்றும் குரூரத்தை குழந்தை களிடத்தில் விதைக்க... வரலாறுகளை திரித்து, ஒரு திரிபு வரலாற்றையே... உண்மை என ஒப்பும்படியாக போதிக்கிறது. இதற்கு தனது அத்துணை ஆதிக்க தன்மையினையும் துணை கொண்டே செய்கிறது.


நிராகரிப்புகள், வலி, வேதனை, பாதுகாப்பாற்ற தன்மை.... இது எப்பொழுது யாருக்கு நேர்ந்தாலும்... இதனை உருவாக்குபவருக்கு எதிரான மனநிலையை தான் எதிர்கொள்வர் கையாள நேரிடும்... என்பதை உளவியல் கொண்டு பேசுகிற இந்நூலின் மூலம்... இஸ்லாமிய பயங்கரவாதம் செழித்தோங்கி வளர்வதற்கு காரணமாக... நாம் இந்துத்துவாவின் ஆதிக்க, அடக்குமுறைகளை புரிந்துக்கொள்ள முடிகிறது...


இன்னொரு விசயத்தையும் இந்நூல் நமக்கு உணர்த்த தவறவில்லை. அது அமெரிக்கா, நவீன அறிவியலையும், தொழில்நுட்பத்தையும், பயன்படுத்திக் கொண்டு அதே வேளை, தனது நாட்டு மக்களிடையே அறிவியலுக்கு எதிரான கருத்துகளையும் பரப்பி வருகிறது. உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி குறித்த டார்வினிய மரபினரது அறிவியல் கருத்துகளுக்கு எதிராக உலகத்தின் தோற்றம் பற்றிய விவிலியக் கருத்துகளை உயர்த்திப் பிடிக்கிறது.

இக்கருத்துகள் அமெரிக்கக் கல்வி நிலையங்களில் புகுத்தப்படுவதை ஜார்ஜ் புஷ் வழித்தோன்றல்களும் ஊக்குவிக்க கிளம்பிவிட்டன.


முஸ்லிம் நாடுகளுக்கு எதிரான தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவான பொது மக்கள் கருத்தை உருவாக்குவதற்காகவே கிறித்துவ மத அடிப்படைவாதம் ஊக்குவிக்கப்படுகிறது. கூடவே இஸ்ரேலிய ஜியோசரிதத்தையும் வளர்த்து வருகிறது. அதேவேளை பிற்போக்குதனமான முஸ்லிம் நாடுகளிலுள்ள, இஸ்லாமிய அரசுகளுடன் அதாவது மத அடிப்படைவாதச் சக்திகளுடன் ஒட்டிக் கொள்கிறது. இது தேவையில்லை என்று உணர்கிற பட்சத்தில் பயங்கரவாத நாடுகள் என பிரகடனம் செய்து தாக்குதல்களை மேற்கொள்கிறது.


அமெரிக்க வாழ் இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை மற்றும் வங்கி கணக்குகளை முடக்குகின்ற அமெரிக்க தீவிரவாதம், இந்து தீவிரவாதத்திற்கு நிதி வழங்கி வாழ வைக்கும் அமெரிக்க வாழ் இந்துத்துவ சக்திகளை கண்டு கொள்வதேயில்லை. அங்கு ராமாயணமும், மகாபாரதமும் பாடங்களாக கற்பிக்கப்படுகிறது. இந்துத்துவத்திற்கு தனது வளர்ச்சியை ஆதிக்கத்தை கேள்வி கேட்கிற எல்லோருமே தீவிரவாதிகள்தான். ஆனால் இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு ஏகாதிபத்தியத்தை உள்வாங்கிய பார்ப்பனியமும், விவலியத்தை கையிலேந்திய அமெரிக்க தீவிரவாதமும் தான் எதிரிகள் என்பதை ஆழமாகவும், மிகுந்த நுட்பத்துடனும் உணர்த்தி செல்கிறது இப்புத்தகம்.