Thursday, November 25, 2010

மண்டேலா எனும் மாமனிதர்

-->




இன்று தென்னாப்பிரிக்க பள்ளிகளில் வரலாற்று பாடத்தை, வெள்ளையர்கள் தென்னாப்பிரிக்காவுக்கு வந்திறங்கியபோது அங்கு மனிதர்களே  இல்லை என்ற வாக்கியத்தின் மூலம்தான் சொல்லித்தர ஆரம்பிக்கின்றனர்.
ஆனால் உண்மையோ வேறு மாதிரி இருக்கிறது. பல்வேறு பழங்குடிகளையும் சேர்ந்த ஆப்பிரிக்க மக்கள் பல நூறு ஆண்டுகளாய் அங்கு வாழ்ந்து வருகிறார்கள் என்று புதைப்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கோசா பழங்குடி இனத்தை சேர்ந்த அந்த சிறுவனுக்கும், இப்படித்தான் தென்னாப்பிரிக்க வரலாறு சொல்லித்தரப்பட்டது.
வகுப்பறையில் சகமாணவர்களுடன் அமர்ந்து இந்த பொய்க்கதைகளை கேட்டுக்கொண்டு இருக்க விரும்பாத சிறுவன், ஜன்னல் வழியாக மேகக்கூட்டங்களையும்,வானத்தையும் பார்த்துக்கொண்டிருந்தான்.இதனால் ஆசிரியர்களின் தண்டனைக்கு ஆளானான். மாலையில் பள்ளிக்கூட மணி அடித்ததும், சுதந்திரமாய் பறந்து தனது பாட்டி எங்கு இருக்கிறாள். என்று தேடி ஓடுவான். அவளிடம் கதை கேட்காமல் ஒரு நாள் கூட அவனால் இருக்கவே முடியாது. கதைகள் என்றால்  ஏதோ கற்பனை கதைகள் அல்ல. தனது முன்னோர்களை அதாவது கோசா பழங்குடி இனத்து மக்களை, டச்சுக்காரர்களும், வெள்ளையர்களும், எப்படியெல்லாம் அடிமைப்படுத்தினார்கள். அவர்களிடம் எப்படிப்பட்ட துன்பத்தை அனுபவித்தனர் என்ற உண்மை கதைகளை கேட்கத்தான். அவனது காதுகளும், மனதும் ஏங்கிகிடந்தது.
இந்த சிறுவன் தான், 1918-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் டிரான்ஸ்காய்  பகுதியில் கோசா பழங்குடியினரின் தெம்பூ என்ற அரச குடும்பத்தில்  நெல்சன் ரோலிஹாலா மண்டேலாவாக பிறந்து. உலகம் முழுவதும் நெல்சன் மண்டேலா என அறியப்பட்ட அந்த மாபெரும் போராளி.
ஃபோர்ட் ஹரே கல்லூரியில் மண்டேலா படித்துக்கொண்டிருந்தபோது கல்லூரி நிர்வாகத்தின் அராஜகத்தை கண்டித்து மாணவர்கள் வகுப்புகள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாணவர்கள் தண்டிக்கப்பட்டனர். இதில் மண்டேலா அந்த கல்லூரியைவிட்டே வெளியேற்றப்பட்டார். அவர் பிறப்பதற்கு முன் டச்சுக்காரர்களோடு, ஜெர்மானியர்களும் , பிரெஞ்சுக்காரர்களும் கூட்டு சேர்ந்துகொண்டு தங்களை பூவர்கள் அதாவது விவசாயிகள் என்று அழைத்துக்கொண்டனர்.
இவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? நாட்டின் உட்புறம் சென்று அங்கு ஏற்கெனவே வசித்து வந்த பழங்குடி இனமக்களைத் தாக்கி, அவர்களுடைய சொத்துக்களை பறித்துக்கொண்டு, அந்த மக்களை அடிமைப்படுத்தினர். தங்களது நிலத்தையும், சுதந்திரத்தையும் காப்பாற்றிக்கொள்ள அந்த பழங்குடி இனமக்கள், அந்த பூவர்களோடு கடுமையாக போர் புரிந்தனர்.
1906-ல் பம்பாட்டா என்ற இடத்தில் நடந்த இந்த போரில் ஏராளமான பழங்குடியின மக்கள், சுதந்திரத்துக்காக தங்களது உயிரையும் விட்டனர். இந்த சம்பவத்தை 1941-ஆம் ஆண்டு மண்டேலா தனது நண்பர்களுடன் நாம் இப்படித்தான் அடிமைப்படுத்தப்பட்டு கிடக்கிறோம். என்று பேசி முடித்த போது, அங்கு புதிய போராட்டாக் குழு ஒன்று மண்டேலாவின் தலைமையில் உதயமாகத் தொடங்கியது.
இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற காலம் அது. வெள்ளையர்கள் ஆப்பிரிக்கர்களை மண்புழுக்களைவிட கேவலமாக கருதினர். ஆப்பிரிக்க ஏழைகள் பசியோடும், பட்டினியோடும் சேரிப்பகுதிகளில் அடைந்து கிடந்தனர். இதை நேரடியாக பார்த்த மண்டேலாவுக்கு இனி மேலும் இந்த இனவெறி அரசாங்கத்திற்கு எதிராக அடிமைப்பட்டு கிடக்க முடியாது.இதனை எதிர்த்து மக்களை ஒன்று திரட்டவேண்டும் என்ற முடிவுடன் தென்னாப்பிரிக்க காங்கிரஸ் இயக்கத்தை தனது நண்பர்களோடு இணைந்து உருவாக்கினார். இந்த நேரத்தில் மண்டேலாவின் உணர்வுகளை சரியான வழியில் செலுத்தி அதை மக்கள் சக்தியாக மாற்ற அவருக்கு ஒரு நண்பர் கிடைத்தார், அவர்தான் வால்டர் சிசுலு. இந்த நண்பரின் அறிமுகம்தான் உலக மக்கள் தங்கள் வாழும் தெருக்களுக்கும், நெல்சன் மண்டேலா என்று பெயர் வைத்து கொண்டாட திருப்பு முனையாக அமைந்தது.

No comments: