Wednesday, September 7, 2011

மூதாயும், அவளது பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும்

வல்வின் ஓரியினது வில்லிலிருந்து துள்ளிவெளியேறி
அச்சிறு அம்பின் மீதமர்ந்தது கிடந்த கொல்லி மலையை தாங்கியிருந்தது 
குருதியுறைந்த மிக நீள வாளொன்று..
வாளுருவி மலையை குடைந்தெடுக்கும் குயுக்தியோடு
மிக நீண்டதொரு வரிசையில் குவிந்திருந்தனர் வணிகர்கள்.
உடலெங்கும் பால்சுரந்து… பெருங்கூட்டமென மரம் வளர்த்து
கிளைகளினூடாய், அடைகாத்து பழமுதிரும் வனமிறைத்து.
விதை தூவி வலசை வரும் பறவைகளை வருடிக்கொடுத்தபடி
உறங்கிபோயிருந்தாள் கொல்லி மலை மூதாய்.
அரப்பளீஸ்வரர் உடல் நனைத்து, உலாவிக்கொண்டிருந்த
வழுக்குப் பாறையில் மேனியை உலர்த்திக்கொண்டிருந்தனர் சித்தர்கள்.
காடலைந்து, மரமேறி, தேனெடுத்து, நிலம்பிளந்து கிழங்கெடுத்து
காய்த்து பழுப்பேறிய விரல்கள், குளிருக்காய், நெருப்பணிந்து
பிளிறும் யானைகளை விரட்டிக்கொண்டிருந்தன.
பழுத்துக்கொட்டும் பலாப்பழ வாசனையோடு.
மழித்து வீசியெறிந்த அன்னாசி முளைத்து கிளைபரப்பி கிடந்தது.
சுமந்து வந்த விதைகளனைத்தையும்
ஒரு குன்றின் மேல் கொட்டிவைத்துவிட்டு.
கண்ணயர்ந்த மூதாயை உசுப்ப மனமின்றி
பெற்றெடுத்த மலையை நீவியபடியே விளையாடி களித்தன
திசைகளறியாத பூர்வகுடி பறவைகள்.
விழுந்துருண்ட  அச்சிறுவிதை
வேரூன்றும் சாத்தியங்களோடு
சருகுகளுக்குள் உடலடக்கிக்கிடந்தது.
வனமதிர பெருயுளிக்கொண்டு, நடமாடிய வணிகர்கள் கண்டு
மறைவிடம் பதுங்கி அழுதுவீங்கின விலங்கினங்கள்.
வணிக வல்லுருக்கள் தன்னுடலுறுப்புகளை கொத்திக்கிழிப்பதற்குள்
பிரசவித்த பிள்ளைகளை காப்பாற்ற துணிந்தாள் மூதாய்
விதை, மரம், பூ, காய், பழம், பறவை…..
விதை, மரம், பூ, காய், பழம், பறவை
எல்லோருக்கும் ஆயுதமணிவித்து
வணிகர்களுக்கெதிராய் போராடச்சொல்லித்தந்தாள்.
வாளுருவி மலையை குடைந்தெடுக்கும் லாவகமறிந்து
மிக நீண்டதொரு வரிசையில் குவிந்தேயிருந்தனர் வணிகர்கள்.
நித்திரையிலாழ்ந்து கொட்டுமருவியின் சாரலில்
உறைந்து போயிருந்தார் அரப்பளீஸ்வரர்.
மூதாயின் வளமுருவி கைப்பைக்குள் அடைத்து
களாவடிச்செல்ல காத்திருந்த வணிகர்களோடு
அரச பரிபாலமும், வனத்தை அழித்தொழிக்கும் ஆயுதமும்.
இறையாண்மைக்கு இரையாக மூதாய் ஒரு போதும் சம்மதிக்கமாட்டாள்.
வியர்வையாய் பெருக்கெடுத்து, கசிந்துருகிய குருதியில்
வளர்த்தெடுத்த வனம் முழுமையும் மூதாயுனுடையது.
வனமழிக்கும் வித்தைகளோடு உள்நுழையும் எவரிடமும்…
அடிமையாய் கிடக்க ஒரு போதும் சம்மதிக்கமாட்டார்கள் மூதாயின் பிள்ளைகள்.