Monday, November 29, 2010

அகன்ற வாயுடைய பூச்சி

எப்படி வந்திருக்க கூடுமது
எப்படியும் வந்திருக்கலாம்
தடயங்கள் ஏதுமின்றி  உள் நுழைந்ததன்
தகவல்கள் அறிந்தோர், யாரேனும்  உளரோ?
யாருமிருந்தாலென்ன?
சுகம் நிரப்பிய பச்சிலைச்சுருட்டி
ஈரமிழக்கவைக்கும்
இலைச்சுருட்டுப் புழுவின் லாவகத்தோடும்
குருத்தின் ருசியறிந்து ஒழுகும் எச்சிலோடு
வயல் முழுதும் குடியமர்ந்த
குருத்துப்பூச்சி மாதிரியும்.
பளிச்சிடும்  மாங்கனியின்
விதைக்குள் உடம்படக்கி சிதைக்கும்
அந்துப்பூச்சியின் லாவகம்  அதுக்கு
வாங்கிய கடனில் பிள்ளைகள் படிப்புறிஞ்ச
வயிறு சுருக்கி...மீந்தவற்றை
பாஸ்பேட்டாகவும், கராட்டேவாகவும் கொட்டித்தீர்த்த பின்னும்
வ(ளர்)ந்துக்கொண்டேயிருக்கிறது.
பிடுங்கித்திண்ணும்  வாழ்வழிக்க..
விட்டத்தில் கயிற்றை தொங்கவிட்டு தலை நுழைத்த போதுதான்
அது பற்றிய தகவலொன்று வந்தது.
விதையாகவும்.
பூச்சியாகவும்
உரமாகவும்
பூச்சிக்கொல்லியாகவும்  தகவமைத்துக்கொண்டு
மூன்றாம் தர உலகத்தின்
முதுகொடித்து ரத்தம் உறிஞ்ச
மேற்கிலிருந்து வந்த அகன்ற வாயுடைய பூச்சிதானாமது.

Sunday, November 28, 2010

அம்பேத்கரும்....பெளத்தமும்... இன்னும் தொடரும் சாதீய கொடுமைகள்.


                                                                   
வர்ணாசிரம கொள்கைகளால் இந்திய நாடு பீடித்திருந்த காலம். சாதீய கொடுமைகளையும், சாதீய தீண்டாமையையும், வன்கொடுமைகளையும் மிகுந்த நுட்பத்தோடு  பிரயோகித்துக்கொண்டிருந்தது பார்ப்பனியம்.  இந்திய நாடு முழுவதும் இந்த தேசத்தின் பூர்வக்குடி மக்களான  தலித்துகள்தான் வர்ணா சிரமத்தால் சொல்ல முடியாத துயரங்களையும், தாங்கவியலாத வேதனைகளையும் அனுபவித்து வந்தனர்.
பொது கிணற்றில் தண்ணீர் எடுக்க முடியாது. நல்ல உடை அணிந்துக் கொள்ளமுடியாது. உயர்சாதிகளால் ஒதுக்கிவைக்கப்பட்ட சேரிகளில்தான் வாழ்க்கை. உரிமைகள் மறுக்கப்படும் போதெல்லாம்,  எதிராக குரல் எழுப்ப முடியாது. கல்வி, உணவு, உரிமை என்று எதிலும் சம அந்தஸ்து கிடையாது.
இந்திய நாடு முழுதும், பல நூற்றாண்டு காலம் இப்படித்தான். அடிமைப்படுத்தப்பட்டு, ஒடுக்கப்பட்டு, சுரண்டப்பட்டு கொண்டிருந்தனர். தாழ்த்தப்பட்ட மக்களும், பழங்குடியினரும்.
எத்தனையோ தலைவர்கள், எத்தனையோ ஆட்சி மாற்றங்கள், ஆனால் எல்லோருக்கும் ஒரே கொள்கை தான் இருந்தது. இந்த கொள்கைக்கு  பின்னால் இந்துத்துவ வர்ணா சிரமம் ஒளிந்திருந்தது.
மத்தியபிரதேச மாநிலம், மோவ் என்கிற கிராமத்தில் பிறந்த, பாபா சாகேப் அம்பேத்கரும்,உயர் சாதிகளால், ஏராளமான கொடுமைகளை அனுபவித்தது இன்றளவும் வரலாற்றின் சோகமான பக்கங்களில் நிரம்பியிருக்கிறது.
அம்பேத்கரின் இளமைப்பருவம். உயர் சாதி இந்துக்களால், பலவித இன்னல்களுக்கும். ஆளானது.
மகாராஷ்டிர மாநிலம், முழுமைக்கும் இருந்து வந்த சாதீய கொடுமைகளின் முகம் வெவ்வேறு வடிவங்களில் அம்பேத்கரை மனம் வருந்தச்செய்தது.
பீமா ராவ் அம்பேத்கர், இளைஞனாக இருந்தபோது, நாவிதர்கள் முடிவெட்ட மறுத்தனர். 
பொதுக்கிணற்றில் தண்ணீர் எடுத்த அம்பேத்கரை, தீண்டதகாதவன் என்று, முதுகு பிய்ந்து போகும் அளவுக்கு அடித்தனர். 
தண்ணீர் கேட்ட அம்பேத்கரை சேறையும், சகதியையும் காட்டி குடிக்கச்சொல்லி அவமானப்படுத்தினர்.
இது மட்டுமா…தாகம் என்று கையேந்திய போதெல்லாம், வாயில் தண்ணீரை ஊற்றி கொடுமைப்படுத்தினார்கள்.
பள்ளியில் படித்து வந்த அம்பேத்கரை தரையிலும், படிகளிலும், கோணி சாக்கின் மீதும் உட்காரச்சொல்லி, இடம் தர மறுத்தனர். உயர் சாதி இந்துக்கள்
இந்துத்துவ வர்ணா சிரமம் எல்லாவித தீண்டாமைகளையும், அம்பேத்கர் மீதும், தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்கள் மீதும் அடக்குமுறைக்கொண்டு திணித்தது. 
மகாராஷ்டிர மாநிலம் பன்சாலா கிராமத்தைச்சேர்ந்த ஓர் பெண்மணி தீக்‌ஷா பூமி பற்றி மனம்திறக்கையில் , இன்று தனக்கு 50 வயது ஆகிறது என்றும். சிறு குழந்தையாக இருக்கும் போதிருந்தே, தீக்‌ஷா பூமிக்கு குடும்பத்தோடு வந்துசெல்வதாகவும் கூறி வியக்கிறார். எங்கள் சமூகம் நிறைய சாதீய கொடுமைகளை அனுபவித்ததாக சொல்லும் இவர். நாங்கள் வாழ்ந்த பகுதியில் பள்ளிக்கூடத்தில் நடந்த கொடுமைகளையும், உயர்சாதி மக்கள் தந்த கொடுமைகளையும் விவரிக்கிறார்
தீக்‌ஷா பூமிக்கு வரும் பல்லாயிரக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் இவரைப்போல் நிறைய சொல்ல இருப்பதை. அவர்களது கண்களில் நிழலாடும் வடுக்களின் மூலம் காண முடிகிறது.
பின்னாளில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்த, அண்ணல் அம்பேத்கர். தனது மக்கள் ஒவ்வொரு நாளும், ஆதிக்க சாதிகளால் பட்டுவரும் அவஸ்தைகளைக் கண்டு மனம் வருந்தினார்.
இந்த நாகலோக்கில் நாகர்கள் என்ற இனக்குழு மக்கள் வாழ்ந்ததாகவும், அச்சிறு இனக்குழுமக்கள் பெளத்த மதத்தை பின்பற்றி வந்ததும், வரலாறாக இருக்கிறது.. 
இந்த நாகர் இனக்குழு மக்களுக்கும் இருந்த உறவே, பின்னாளில் அம்பேத்கரை ஆறு லட்சம் மக்களோடு பெளத்த மதத்தை ஏற்றுக்கொள்ள ஓர் காரணமாகவும் இருந்ததாக சொல்லப்படுகிறது.
நாகலோக், அந்த இடத்தில் 56 அடி உயர புத்தரின் சிலை வெட்டவெளியில் ஆழ்ந்த பேரமைதியை உருவாக்கியப்படியே இருக்கிறது. நாகலோக்கில் டாக்டர் அம்பேத்கர், புத்தரை நோக்கி நடந்து செல்வது போன்ற திருவுருவச்சிலையும் கம்பீரமாக நிற்கிறது. . நாகலோக் இங்கு, நாகர்கள் என்பவர்கள் வாழ்ந்ததும். அவர்கள் பெளத்த மதத்தை  ஏற்றுக்கொண்டதும். காட்சிகளாக விரிந்து படர்கிறது.
பெளத்த மதத்தின் வாழ்வியல் நெறிகளை அனுபவபூர்வமாக கண்டறிந்தார் அண்ணல் அம்பேத்கர்.
இரட்டை மலை சீனிவாசனுக்கும், அம்பேத்கருக்கும் இருந்த நெருக்கமும், கருத்தியல் சார்ந்த ஒற்றுமையும் அம்பேத்கருக்கு, இந்துமதத்தின் கொடுமைகளில் இருந்து மீள பெளத்தம் தீர்வு எனப்படுகிறது.
1929- பூனாவிற்கு சென்றார் அம்பேத்கர். பூனாவில் இருக்கும் பார்வதி கோவிலுக்கு வழிபடச்சென்ற அம்பேத்கரை, இந்துமத சடங்குகளும், அதில் ஊறித்திளைத்த தீண்டாமையும், கோவிலுக்குள் அம்பேத்கரை நுழையவிடவில்லை.
அன்றைய தினம் பெருத்த அவமானத்திற்கும், சாதீய கொடுமையின் உச்சத்தையும் கண்ட  பாபா சாகேப். தான் மதம் மாறப்போவதாக ஒரு கையெழுத்துப்பிரதியை வெளியிட்டார்.
மகாராஷ்டிரா மாநிலம் முழுதுமே பள்ளிகளில் ஓரு வழக்கம் இருந்தது. ஒவ்வொரு வகுப்பறையிலுமே தலித்திய குழந்தைகள் தரையில்தான் அமரவைக்கப்பட்டனர்.
ஆசிரியரின் கைகளில் குழந்தைகளை தண்டிப்பதற்கு இரண்டு விதமான பொருட்களை வைத்திருந்தார்கள்.
தாழ்த்தப்பட்ட குழந்தைகளை தண்டிப்பதற்கு கற்களும், உயர்சாதி குழந்தைகளை தண்டிப்பதற்கு குச்சிகளும் வைத்திருந்தார்கள்.
தாழ்தப்பட்ட குழந்தைகளை குச்சியால் தண்டிக்கும் போது, அவர்களது தீட்டு ஒட்டிக்கொள்ளும் என்பதுதான். அந்த உயர்சாதி, இந்துக்களின் வக்கிரமான எண்ணம்.
எல்லாவற்றையும் நேரடியாகவும், மறைமுகமாகவும் பார்த்து துடித்தார் புரட்சியாளர் அம்பேத்கர்.
இவ்வளவு கொடுமைகளில் இருந்தும் தனது மக்களை, மீட்டு எடுப்பதற்கான  வழிமுறைகள் அனைத்தையும், இரவு, பகலாக சிந்தித்துக்கொண்டே இருந்தார் பாபாசாகேப் .
1935- அமெரிக்க நாட்டில் யவளா மாநாட்டில் கலந்துக்கொண்டார் அம்பேத்கர்.  
               
அதே 1935- அக்டோபர் 13-ல் இயோலாவில் நடந்த மாநாட்டில்  10 ஆயிரம்  பேர் அம்பேத்கர் தலைமையில் கலந்துக்கொண்டணர்.

இந்த கூட்டத்தில்தான்  முதன்முதல் அம்பேத்கர்  தன்னுடைய  மதமாற்றம் குறித்த உள்ளக்கிடக்கையை வெளிப்படையாக பேசினார்
மிகப்பெரிய எதிர்வினைகளையும் அம்பேதகர் சந்திக்கவேண்டியிருந்தது.
நாம் விரும்பும்போது வீட்டையோ, மேலாடையையோ  மாற்றிக்கொள்வது போல மதத்தை மாற்றிக்கொள்ள முடியாது : ஒருவருடைய உடம்பைவிட அவருடைய ஆன்மாவில் மதம் இரண்டறக் கலந்துள்ளது என்று  விமர்சிக்கிறார்  மகாத்மா காந்தி.
ஆனால் தொடரும் தீண்டாமைகளிலிருந்து தலித்திய மக்களை விடுவிக்கும் எந்தவொரு  சமூக ரீதியான  யோசனைகளையும், காந்தியால்  தரமுடியவில்லை.
அம்பேத்கரின் இயோலா மாநாட்டுத் தீர்மானம் வருத்த  வருந்துவதற்குரியது என்றார் டாக்டர் ராஜேந்திர பிரசாத்.
அம்பேத்கரிடம்   மதமாற்றம் குறித்து கேட்கிறார்   இந்து சமய காப்பாளரான  மசுர்கான்  மகராஜ்.
ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள்  தீண்டாமையை  அடியோடு  ஒழித்து விடுவோம்  என்று  சாதி இந்துக்களின்  தலைவர்கள்  வாக்குறுதி தர வேண்டும்  என்று  மகராஜ்ஜிடம்  கேட்கிறார்  புரட்சியாளர்  அம்பேத்கர்.
சாதி இந்துக்களுக்கு கால அவகாசம் தேவை.  அவர்களுக்கு வாய்ப்பளிக்கவேண்டும்,  மதமாற்ற  அறிவிப்பை  தள்ளிப்போடவேண்டும்  என்று  அம்பேத்கரிடம் சொல்கிறார்   மசுர்கான்  மகராஜ்.
ஒடுக்கப்பட்ட , தீண்டப்படாதவர்கள் மதம் மாறிச்சென்றால், தீண்டப்படாத வகுப்பு மக்கள் எண்ணிக்கை குறைந்துவிடும்.
எண்ணிக்கை குறைவது  வர்ணாசிரம  கொள்கைகளை தாங்கிப்படித்த  சாதீய சமூகத்திற்கு  உகந்ததாக அமைந்து விடும்.
ஆதிக்கவாதிகளுக்கு, எண்ணிக்கையில் குறைந்த   தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்கி  ஆள மதமாற்றம்  என்பது அவர்களுக்கு  ஊக்கம் அளிப்பதாக அமைந்துவிடும். 
தீண்டப்படாதவர்கள் அவர்கள் உரிமைக்காவும், கொள்கைகளுக்காகவும்  தொடர்ந்து போராடவேண்டும். இதுவே ஆண்மையாகும், அவர்களுக்கு வழங்கக்கூடிய  அறிவுரை என்றும்  கூறினார் இரட்டை மலை சீனிவாசன்.
1936-ல் ஜனவரி 12, 13, களில் புனாவில் நடந்த மாநாட்டில்   ஆதி திராவிடர்கள்  கடைப்பிடித்த  மதத்தை  மீண்டும் புதுப்பித்தல், வழியாகவே  நாம் தீண்டாமையில் இருந்து விடுபடலாம்  என்கிறார்  என்.சிவராஜ்
இந்துவாக இருந்துகொண்டே  அவர்களுடன் நாமும் சமமாக கல்வி  கற்க முடிகிறது.  அவர்களுக்கான தண்ணீர்  நமக்கும்  வந்துவிட்டது. தொட்டால் தீட்டு என்பதெல்லாம் இந்துக்களிடம்  இப்போது  இல்லை.  என்று சொன்னார்  பீம்ராவ் தாதாசாகிப்.
இந்து மதம் ரொம்பவேதான் கால  அவகாசம் எடுத்துக்கொண்டது.
மதமாற்ற  அறிவிப்பைப்போல  அம்பேத்கரின்  வேறு  எந்தவொறு  செய்தியும் , உலக அளவில்   இந்த அளவிற்கு  கவனத்தை  ஈர்க்கவில்லை  என்கிறார்  அம்பேத்கரின்  வாழ்க்கை   வரலாற்றை  எழுதிய  தனஞ்செய்  கீர்.
தண்ணீர் தருவதும், கல்வி தருவதும் இந்துக்கள் அல்ல. எல்லோருக்கும் பொதுவான  அரசாங்கம்.
ஆனால் இதை எல்லாம்   சட்டமாக்கி செயல்படுத்தும்போது  எதிர்ப்பவர்கள்  சாதி இந்துக்கள்,  என்ற  அறிவார்ந்த முழக்கத்தை  உருவாக்கினார்கள். அம்பேத்கர் வழிவந்த இளைஞர்கள்.
தீண்டாமைகளின் ஒட்டுமொத்த வடிவமாக இருக்கிற. இந்து மதத்தில் தெரிந்தோ, தெரியாமலோ பிறந்துவிட்டதாக சொல்லி வேதனைப்பட்டார் அம்பேத்கர்.
பிறக்கும் பொழுது இந்துவாக பிறந்துவிட்டேன், இறக்கும்பொழுது நான் இந்துவாக இறக்கமாட்டேன் என்று தீர்க்கமாக  கூறுகிறார் அம்பேத்கர்.
21- ஆண்டுகள் கடந்துபோகிறது. தொடர்ந்து  நீடிக்கவே செய்கிறது இந்துத்துவ சாதீய கொடுமைகளின் அட்டூழியம்.
ஆட்சியாளர்களோ, அரசியலமைப்புகளோ, சாதீய தாக்குதலில் இருந்து, இந்திய நாட்டின் பெரும்பாலான உழைக்கும் மக்களான, தலித்துகளையும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களையும் மீட்டெடுக்க தயாராக இல்லை.
தலித்திய மக்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டனர். கடுமையாக நிராகரிக்கப்பட்டனர்.
எல்லா கொடுமைகளில் இருந்தும் ஒடுக்கப்பட்ட மக்களை விடுவிக்கும் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டே இருந்தார் அம்பேத்கர்.    
1956- மே மாதம் 24-ம் தேதி  பம்பாய் நகரத்தில் நடக்கிறது. அம்பேத்கர் தலைமையிலான பிரமாண்ட கூட்டம்.
ஆயிரக்கணக்கான மக்களின் முன்னிலையில் தான் இந்து மதத்தைவிட்டு வெளியேற போவதாக திட்டவட்டமாக அறிவிக்கிறார். புரட்சியாளர் அம்பேத்கர்.
அதேசமயம்   புகழ்பெற்ற நகைச்சுவை கலைஞன்  பதே பாபுராவ், பார்ப்பனீய  சாதீயில் பிறந்தவன்.  அம்பேத்கரின் , அவரது கொள்கையின் மீது  அறிவார்ந்த  பற்றுதல் கொண்டான்.
பார்ப்பனிய  சாதீய கொடுமைகளால்   அம்பேத்கரின்   தாழ்த்தப்பட்ட  இன மக்கள்  ஒவ்வொரு  நாளும்  சித்ரவதைகளை  அனுபவித்து வந்ததும்.  பாபுராவை  நிலை குலைய செய்தது. 
ஒரு நாள்  தான் பிறந்த  பார்ப்பனிய சாதீயை விட்டு  வெளியேறுகிறான்  பதே பாபுராவ்.
உடனே தன்னை மகர் சாதியில் இணைத்துக்கொள்கிறான்.
இது போன்ற நிகழ்வுகள்  மாத்திரமில்லை…..
மராட்டிய மாநிலம்  மகர்களால்   முற்போக்கு  பாதையில், அம்பேத்கரின்  பாதையில்  கொண்டு  செல்லப்பட்டது.
மகாராஷ்டிர மாநிலத்தில்  மகர்கள், தங்கள்  கலைகளை ,அதன் வடிவத்தை  தீண்டாமையின்  சின்னமாக்கி  சிதைத்துவிடவில்லை.
ஆப்பிரிக்க, அமெரிக்க கறுப்பின  மக்களைப் போன்று, தங்களது கலைகளை  சாதீயத்தை  அழிக்கும்  ஆயுதமாக ஏந்த தொடங்கினார்கள்.
பண்ணையார்களையும், ஆட்சியாளர்களையும் ஆடியும், பாடியும்  சந்தோஷப்படுத்திய, தங்களது  தலித்திய  கலைகளை, அவர்களின்  அதிகாரத்திற்கு,  சாதீய  கொடுமைகளுக்கு  எதிராக பயன்படுத்தினார்கள்   ஜல்ஷா என்ற  மகர்  இன கலைஞர்கள்.
                                                                                   
                                                                                                            
ஆட்சியாளர்களையும்,  அதிகாரவர்க்கத்தினரையும்  பார்த்து, தீர்ப்பை  மாத்திச் சொல்லுங்க  என்று  தங்களது  அறிவாயுதத்தை  வீசினார்கள்  ஜல்ஷா கலைஞர்கள்.
1924-ல்  தமோதர்  அரங்கில் நடந்த கூட்டத்தில் அம்பேத்கரின்  பேச்சை  கேட்டார். ஜல்ஷா கலைஞர் கர்தக் பீம்ராவ்.
அன்றுமுதல்  அம்பேத்கரை தனது தலைவராக  ஏற்றுக்கொண்டார்.
1930-ல் நாசிக்கில்  ஜல்ஷா இளைஞர்கள்  சங்கீத  சபாவை நிறுவுகிறார்கள்.
கர்தக் பீம்ராவ்வின்  மதமாற்றம்  என்ற   வீதி நாடகம்  அரங்கேற்றப்படுகிறது.
1931- முதல், 1945 வரை   சாதீய கொடுமைகளுக்கு  எதிராக  ஜல்ஷா  கலைஞர்கள்  378   நாட்டிய  நாடகங்களை  வீதி வீதியாக  அரங்கேற்றினார்கள்.
உங்கள்  கடவுள் முன்னால் புனிதம் இருந்தாலும்…
ஒட்டிக்கொண்டிருக்கிறது  அவர்கள் மீது  சாதியின் தீட்டு.!
எப்போதும் திறந்ததில்லை
எங்களுக்காக திறந்ததில்லை
உங்கள் கோவில் கதவுகள்
புரிகிறதா? தாயே
நீ கடவுளை வணங்கலாம்
பூசைகள் செய்யலாம்
கடும் விரதங்கள் இருக்கலாம்
என்ன செய்தாலும் என்ன?
கருவறையின்  கற்சிலைகள்
காட்டப்போவதில்லை  உன் மீது கருணை!!
இப்படித்தான்  ஜல்ஷா  கலைஞர்களின் மேடைகள், இந்துக்கோட்டையின்  சாதி  அதிகாரத்தை  ஆட்சியை,  ஊர், ஊராகச்  சென்று  களமிறங்கி  தாக்கி  அடித்து  நொறுக்கின.
1952-ல்  அம்பேகரும்,  ஜல்ஷா  கலைஞர்களும்  நேரில்  சந்தித்தார்கள்.
இருபதாம்  நூற்றாண்டில்   இந்துத்துவாவிற்கு  மிகப்பெரும்  சவால்,  சந்தேகமில்லாமல்  அது  அம்பேத்கர்தான்.
டாக்டர்  அம்பேத்கருடன், இணைந்து  பார்ப்பனிய  சாதீய கொடுமைகளுக்கு  எதிராக  தங்களது   வாழ்நாளை  அர்ப்பணித்தவர்கள்…. தந்தை பெரியாரும், டாக்டர்  ராம் மனோகர் லோகியாவும்…
வட இந்தியாவில்  சாதீய கொடுமைகளில் இருந்து  தாழ்த்தப்பட்ட மக்களை  விடுவிக்க  அம்பேத்கர்  இரவு பகலாக போராடினார்.
தென் இந்தியாவில்  தந்தை பெரியார்  வீதி வீதியாய்  சுற்றி  சுழன்று   தாழ்த்தப்பட்டவர்கள்  சாதீய கொடுமையிலிருந்து  வெளியேற  வாழ்நாள் வரை போராடினார்.
                                             
1956-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், இந்திய சட்டமேதை பாபா சாகேப் அம்பேத்கர், தனது துணைவியார் சவீதா அம்பேத்கருடனும், ஆறு லட்சத்து 38 ஆயிரம் பெருந்திரளான உழைக்கும் மக்களுடனும் பெளத்த மதத்திற்கு மாறினார்.
மகாராஷ்டிர மாநிலம், நாக்பூர் நகரத்தில், தனது மக்களோடு, இந்துமதத்தின் சாதீய கொடுமைகளில் இருந்து விடுபடும் நோக்கில், பெளத்த மதத்தை ஏற்றுக்கொண்டார் அம்பேத்கர்.

அம்பேத்கர் பெளத்தத்திற்கு  தீக்‌ஷை  ஏற்றார்.
தீக்‌ஷா பூமி உருவானது.
ஓவ்வொரு ஆண்டும் விஜயதசமியில், தீக்‌ஷா பூமி பல லட்சக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்களோடு காட்சித்தருகிறது.
எங்குப்பார்த்தாலும் மனிதக்கூட்டம், நெடுந்தொலைவில் இருந்தெல்லாம் குடும்பம், குடும்பமாக வந்துக்கொண்டேயிருக்கிறார்கள்.
 கூட்டத்துக்குள் எந்தவிதமான பயமோ, அச்சமோ இன்றி அமைதியாக போய்க்கொண்டு இருக்கிறார்கள்.
.தீக்‌ஷா பூமியின் சகலதிசைகளிலும் அம்பேத்கரும், புத்தரும் ஒன்றாகவும், தனியாகவும் இருக்கும் படங்கள் காணக்கிடைக்கிறது.
ஆங்காங்கே ஒலிபெருக்கிகளில், அம்பேத்கர் பற்றிய பாடல்கள் ஒலித்துக்கொண்டெ இருக்கிறது.
ஜெய் பீம், ஜெய் பீம் என்ற வார்த்தைகளில், எதிர்படும் எல்லோருமே கட்டித்தழுவிக்கொள்கின்றனர்.
இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும், ஏன் உலக நாடுகளில் இருந்தெல்லாம் மக்கள் கூட்டம் தீக்‌ஷா பூமியில் சூழ்ந்துக்கிடக்கிறது.        
அம்பேத்கர் தலை நிமிர்ந்து நிற்கும் இந்த பூமியில், தாங்களும், தலை நிமிர்ந்து வாழவே விரும்புகிறோம் என்கிற ஒரே லட்சியம்தான். பல லட்சக்கணக்கான மக்களிடம் உறுதிபட தெரிகிறது.  
வெறும் உழைக்கும் மக்களால் நிரம்பி வழியும் தீக்‌ஷா பூமிக்கு வந்துபோகும் ஒவ்வொருவரின் முகத்திலும் அம்பேத்கரை உயிருடன் பார்த்தது போன்ற பரவசம்.
நாக்பூரின், தீக்‌ஷா பூமியில் இருந்து 14 கி.மீட்டர் தூரம் பயணித்தால், 30 நிமிடத்திற்குள் சென்று சேரமுடிகிறது சிச்சோலிக்கு.
சுற்றிலும் மலைகளும், பச்சை, பசலேன்ற வயல் வெளிகளும் சூழ்ந்துக்கிடக்கும்  ஓர் மகாராஷ்டிர கிராமம் தான் சிச்சோலி, இங்கு தான் அம்பேதரின்  நினைவுகளை பிரசவிக்கும், பலவும் இருக்கிறது.
பாபா சாகேப், அம்பேத்கர் .இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க பயன்படுத்திய தட்டச்சு எந்திரம்,  
அவரது  கைத்தடி, அவர் அணிந்திருந்த மூக்கு கண்ணாடி, அவரது உடைகள், அவர் எழுதிய ஏராளமான கடிதங்கள், அம்பேத்கர் எழுதப்பயன்படுத்திய பேனாக்கள்.  என அவர் காலத்தில், அவரால் பயன்படுத்தப்பட்ட பல பொருட்களும், அவரது அஸ்தியும்  இருக்கிறது.

இதனை காணவரும் பலரும், கண்ணீர் மல்க பல மணி நேரம் , அவர்பற்றிய நினைவுகளில் சுற்றிச்சுற்றி வருகிறார்கள்.
அம்பேத்கர் பயன்படுத்திய நாற்காலியில் வைக்கப்பட்டிருக்கும், அவரது புகைப்படத்தை தொட்டு வணங்கி திரும்பும் பலரும், அம்பேத்கரையும், அவர் பட்ட கஷ்ட்டங்களையும் நினைத்து ஆழ்ந்த மெளனத்தில் கலைகிறார்கள்.

அதோடு இன்னும் இறுக்கிப்பிடித்திருக்கும் சாதிய தாக்குதலில் இருந்து தங்களை மீட்டெடுக்க, இன்னுமொரு பாபாசாகேப் பிறக்க மாட்டாரா? என்ற பெருத்த ஏக்கத்தோடும், அவ்விடத்தை விட்டு, மீளாத்துயரில் கடக்கிறார்கள்.
எல்லா இடங்களிலும், சாதீய கொடுமைகளாலும்,சமூக அநீதிகளாலும் தினம், தினம் கூனிக்குறுகி வாழ்ந்து வரும் அவலத்தில் இருந்து விடுதலை என்ற குரல் தீர்க்கமாக இருக்கிறது.
சீனா, ஜப்பான், இலங்கை, தாய்லாந்து என்று உலக நாடுகள் பலவற்றிலுமிருந்து வரும் புத்தபிட்குகள் ஒவ்வொருவரும், இவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்திற்கு அமேபத்கர்தான் என்று மேடையில் பேசும் ஒவ்வொரு முறையும், ஜனத்திரள் உற்சாகமிகுதியோடு ஜெய்பீம்,ஜெய்பீம் என்று ஓங்கி குரல் எழுப்பிக்கொண்டே இருக்கிறார்கள்.
பரந்து விரிந்த அந்த 14 ஏக்கர் நிலப்பரப்பும், மனித கூட்டங்கள் சங்கமித்த காட்சியாகவே இருக்கிறது.
வழி நெடுக எங்குபார்த்தாலும் போஜனா போஜனா என்று முகம் நிறைய புன்னகை ஏந்தி அழைக்கிறார்கள்.
தீக்‌ஷா பூமிக்கு வந்துப்போகும் எவரும் பசியோடு இருக்கக்கூடாது என்ற கவலை நாக்பூர் மக்கள் எல்லோரையும் சூழ்ந்துக்கொண்டு இருப்பதை நகரும் பாதை எங்கும் காணமுடிகிறது.
தீக்‌ஷா பூமி நெடுகிலும், உணவு பொருட்களோ, குடி நீரோ எதுவுமே வியாபார பொருளாக இருக்கக்கூடாது. மனமுவந்து பசிபோக்கும் ஒன்றாகவே இருக்கவேண்டும் என்ற அக்கறை எல்லோரிடமும் இருக்கிறது.
நம்மூர்காரர்கள் மட்டுமல்ல, ஜப்பான் நாட்டு பல்கலைக்கழகத்தில் இருந்து வந்திருந்த டாக்டர் கியோகுனி சின்கா அம்பேத்கர் பற்றியும், அவரது பெளத்தம் பற்றியும் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.
அது மாத்திரமல்ல, உலக நாடுகளில் இருக்கும் பெளத்தத்தை விட அம்பேத்கரின் பெளத்தம் முழுக்க ,முழுக்க வித்தியாசமானது
 காலங்காலமாய் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான பெளத்தம் என்றும் . புரிந்துக்கொள்ள முடிந்ததாக சொல்கிறார்.
 சாதீய அடக்குமுறைகள் மிகுந்த இந்தியாவில், அதன் ஒடுக்குமுறையில் இருந்து மீண்டு சுயமரியாதையுடன் வாழ அன்றையகாலகட்டத்தில் அம்பேத்கருக்கு பெளத்தம் மிகுந்த பாதுகாப்பானதாகவும், சுதந்திரமானதாகவும் இருந்திருக்க கூடும்.
இந்த பகுதி தீக்‌ஷா பூமியாக மாறியதன் பின்னணியில், அம்பேத்கரும், அவரது சமூக மக்களும் சாதிய சூழலில் பட்ட வேதனைகளும், துயரங்களும் நிரம்பிக்கிடந்ததை ஆழமாக தெரிந்துக்கொள்ள முடிந்தது என்கிறார்.
இதுவரை மகாத்மா காந்தியும், அன்னை தெரசாவும் மட்டுமே தெரிந்திருந்த ஜப்பான் நாட்டு மக்களுக்கு,சமீபகாலமாக அம்பேத்கரும், அவரது புரட்சியும் பரிச்சயமாயிருக்கிறது என்று சொல்லி பெருமிதமடைகிறார்.
மேலும் அம்பேத்கர் பற்றியும், அவரது செயல்பாடுகள் பற்றியும் ஆவணப்படமாக்கி ஜப்பான் நாட்டு பல்கலைக்கழக மாணவர்களிடத்தில் கொண்டு போய் சேர்க்கப்போவதாக சொல்லும் கியோகுனி சிகாவை நினைக்கும்போது. இன்னும் அம்பேத்கர் பற்றி நினைக்க மறுக்கும் நம் கன்னத்தில் பளார் என்று அறைவதுபோல் இருக்கிறது.
சிச்சோலியில் இருக்கும் அம்பேத்கரின் நினைவு மண்டபத்திற்கு , குன்பி வம்சத்தைச்சேர்ந்த கோபிகா பாய் பாஜூராவ் டாக்கரே என்கிற பெண்.
அம்பேதகருக்காக 14 ஏக்கர் நிலப்பரப்பை தானமாக கொடுத்த சம்பவமும், இன்று எல்லோராலும் நெகிழ்வுடன் நினைவு கூறப்படுகிறது.
1956-ல் ஆறு லட்சம் மக்களை சாதீய கொடுமைகளில் இருந்து விடுவித்த அம்பேத்கரின் போராட்ட குணத்தைக்கண்டு, பிரமித்துப்போனார்  குன்பி  வம்சத்தை சேர்ந்த கோபிகா பாய் பாஜூராவ் டாக்கரே என்கிற  இந்து பெண்மணி.
அதற்கு பரிசாகவே  அந்த நிலத்தை கொடுத்ததாகவும்,அங்குள்ள குறிப்புகள் சொல்லுகின்றன.
இத்தனைக்கும், அம்பேத்கரும், கோபிகாவும் சந்தித்துக்கொண்டதில்லை என்பதும் கடந்த கால சான்றுகள்.
குழந்தைகள் ஜாக்கிரதை என்றோ, திருடர்கள் ஜாக்கிரதை என்றோ, உடமைகள் பத்திரம் என்றோ ஒரு அறிவிப்புக்கூட இல்லாமல் மிகுந்த பேரமைதியுடன் நடக்கிறது.
அம்பேத்கர் பெளத்தத்தை ஏற்றுக்கொண்ட நாளின் நினைவு தின அனுசரிப்பு. ஒரு தள்ளு,முள்ளோ, கலாட்டாவோ இல்லை, காவல்துறை வேலையே இல்லாமல் எட்டி நின்று வேடிக்கைப்பார்க்க மட்டுமே செய்கிறது.
அதிகாரத்தில் இருந்தும், சுரண்டலில் இருந்தும் விடுதலையான மனநிலை மட்டுமே அங்கு கூடும் மக்களின் நினைவுகளிலும், மனதிலும் நிரம்பிக்கிடக்கிறது.
ஆனால்  தீக்‌ஷா பூமியில் இருந்து  திரும்பும்…. ஒவ்வொருவரிடமும்   நீக்கமற  கிடக்கிறது… கடலளவு  சோகம்…
இந்தியாவில்   இன்னும்  சாதீய கொடுமைகளும்,  ஒடுக்கு முறைகளும்   நீடித்துக்கொண்டுதான்  இருக்கிறது… என்பதற்கு,  அங்கு வந்து போகும் மக்கள் சாட்சிகளாகவே  இருக்கிறார்கள்.
மறுக்கப்பட்ட உரிமை, கிடைக்காத  நீதி, இன்னும்  தொடரும்   தீண்டாமை, சாதீய ஒடுக்குமுறை  எல்லாவற்றிலும்  இருந்து விடுதலை… இதுதான்.


அம்பேத்கரின்   அஸ்தியை  வணங்கிச்செல்லும், மக்களின்  ஆத்மார்த்தமான  பிரார்த்தனை.
இன்னும்,  இந்த தேசம் முழுவதும்  தாழ்த்தப்பட்ட  பழங்குடியின , மிகவும்  பிற்படுத்தப்பட்ட  மக்களுக்கு  எதிரான  வன்கொடுமைகள்… தினம், தினம்  நடந்துகொண்டுதானிருக்கிறது.
இதற்கு  நாம்   வாழும்  சமூகமே  ஆகப்பெரும்  சாட்சி..
கீழ் வெண்மனியில்   44 தலித்துகளை  உயிரோடு… கொழுத்தி, தங்களது  சாதிவெறியை  தணித்துக்கொண்டது  அதிகார வர்க்கம்.
பறவைகளையும், விலங்குகளையும்  வேட்டையாடுவதில் கூட, ஒழுங்கையும் நேர்மையினையும்  கடைப்பிடிப்பவர்கள்  பழங்குடியின மக்கள்.
1992-ம்  ஆண்டு  சூன் மாதம், தர்மபுரி மாவட்டம், வாச்சாத்தி  பழங்குடியின மக்கள் மீது… ஆட்சி, அதிகாரமும், சாதீய பார்ப்பனியமும்  தங்களது  சாதீய வெறியை  காட்டியது.
சக மனிதர்களாலேயே   சிதைக்கப்பட்டு,  ஒடுக்கப்பட்டனர்  வாச்சாத்தி  மக்கள்.
இவ்வளவு  ஆண்டுகளுக்குப்பிறகும்,  நீதி  கிடைத்தபாடில்லை   அம்மக்களுக்கு…
திருச்சி  மாவட்டம். திண்ணியத்தில்    தலித்  இளைஞரின்  வாயில்  மலத்தை  திணித்தது.  ஈவிரக்கமில்லாத   சாதீயம்.
மேலப்பாளையம்,  மேலவளவு, பாப்பாபட்டி,  கீரிப்பட்டி,  இப்படி…. நீதி  மறுக்கப்பட்டு, 
சாதீய, கொடுமைகளால்   சிக்கித்தவிக்கும்   கிராமங்கள்  ஏராளம்.
திருச்சி மாவட்டம்…  குரங்குப்பேட்டை  கிராமம்.
மரத்தில் இருந்து , விழுந்த  நாவல் பழத்தை  எடுத்துச் சாப்பிட்ட குற்றத்திற்காக… பத்து வயது தலித் சிறுவன் கருணாகரனுக்கு… ஆதிக்க சாதி கொடுத்த தண்டனை  நெஞ்சை  உலுக்குகிறது.
கழுத்தில்  கயிற்றைக்கட்டி, மாட்டை வைத்து  இழுத்துச்செல்ல  நிர்பந்திக்கப்பட்டிருக்கிறான்   கருணாகரன் .
இரு  சக்கர வண்டிகளை  தலித்துகள்  எங்கள் தெருபக்கம், ஓட்டக்கூடாது  என்கின்றனர்.
மதுரை  மாவட்டம்  திருமங்கலத்திற்கு அருகில் உள்ள  வில்லூர்  கிராமத்தின்  சாதி இந்துக்கள்.     
இப்படி  அனுதினமும், ஆயிரமாயிரம்  தலித்திய  குழந்தைகளும், பெண்களும் , ஆண்களும்  அதிகார  சாதீய  கொடுமைகளுக்கு  பலியாகிக்கொண்டுதான்  இருக்கிறார்கள்.
2006 முதல்  2008 வரை ,  இந்தியா  முழுவதும்  தலித்துகளுக்கு  எதிரான தாக்குதலில்  35,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2008-ல் 30, 913 வழக்குகள்  பதிவாகியிருக்கின்றன.
உத்திரபிரதேசத்தில்  மட்டும், தலித்துகளுக்கு  எதிரான  தாக்குதலில் 7,960 வழக்குகள்  பதிவாகியிருக்கின்றன.
தீண்டத்தகாத  மக்களை வெறுத்து   சமூகத்திலிருந்து  வெறுத்து  ஒதுக்குவது, மரண தண்டனையை  விட கொடியது   என்றார்.  புரட்சியாளர்  அம்பேத்கர்.
மக்கள் எல்லோரும் ஒரே சாதி என்கிறது  வள்ளுவனின்  குறள்…
மரண தண்டனைக்கு , எதிராக குரல் கொடுப்போர்களோ..!,  கடவுளர்களுக்காக  குரல் கொடுப்போர்களே!.. நடிகர், நடிகைகளுக்காக குரல் கொடுப்போர்களே!... தலித்திய  விடுதலைக்காவும்  குரல் கொடுங்களேன்!... பண்பாட்டு  தளத்திலிருந்தும்,  அரசியல்  தளத்தில் இருந்தும்… விடுதலை   ஆவோம்…







Thursday, November 25, 2010

மண்டேலா எனும் மாமனிதர்

-->




இன்று தென்னாப்பிரிக்க பள்ளிகளில் வரலாற்று பாடத்தை, வெள்ளையர்கள் தென்னாப்பிரிக்காவுக்கு வந்திறங்கியபோது அங்கு மனிதர்களே  இல்லை என்ற வாக்கியத்தின் மூலம்தான் சொல்லித்தர ஆரம்பிக்கின்றனர்.
ஆனால் உண்மையோ வேறு மாதிரி இருக்கிறது. பல்வேறு பழங்குடிகளையும் சேர்ந்த ஆப்பிரிக்க மக்கள் பல நூறு ஆண்டுகளாய் அங்கு வாழ்ந்து வருகிறார்கள் என்று புதைப்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கோசா பழங்குடி இனத்தை சேர்ந்த அந்த சிறுவனுக்கும், இப்படித்தான் தென்னாப்பிரிக்க வரலாறு சொல்லித்தரப்பட்டது.
வகுப்பறையில் சகமாணவர்களுடன் அமர்ந்து இந்த பொய்க்கதைகளை கேட்டுக்கொண்டு இருக்க விரும்பாத சிறுவன், ஜன்னல் வழியாக மேகக்கூட்டங்களையும்,வானத்தையும் பார்த்துக்கொண்டிருந்தான்.இதனால் ஆசிரியர்களின் தண்டனைக்கு ஆளானான். மாலையில் பள்ளிக்கூட மணி அடித்ததும், சுதந்திரமாய் பறந்து தனது பாட்டி எங்கு இருக்கிறாள். என்று தேடி ஓடுவான். அவளிடம் கதை கேட்காமல் ஒரு நாள் கூட அவனால் இருக்கவே முடியாது. கதைகள் என்றால்  ஏதோ கற்பனை கதைகள் அல்ல. தனது முன்னோர்களை அதாவது கோசா பழங்குடி இனத்து மக்களை, டச்சுக்காரர்களும், வெள்ளையர்களும், எப்படியெல்லாம் அடிமைப்படுத்தினார்கள். அவர்களிடம் எப்படிப்பட்ட துன்பத்தை அனுபவித்தனர் என்ற உண்மை கதைகளை கேட்கத்தான். அவனது காதுகளும், மனதும் ஏங்கிகிடந்தது.
இந்த சிறுவன் தான், 1918-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் டிரான்ஸ்காய்  பகுதியில் கோசா பழங்குடியினரின் தெம்பூ என்ற அரச குடும்பத்தில்  நெல்சன் ரோலிஹாலா மண்டேலாவாக பிறந்து. உலகம் முழுவதும் நெல்சன் மண்டேலா என அறியப்பட்ட அந்த மாபெரும் போராளி.
ஃபோர்ட் ஹரே கல்லூரியில் மண்டேலா படித்துக்கொண்டிருந்தபோது கல்லூரி நிர்வாகத்தின் அராஜகத்தை கண்டித்து மாணவர்கள் வகுப்புகள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாணவர்கள் தண்டிக்கப்பட்டனர். இதில் மண்டேலா அந்த கல்லூரியைவிட்டே வெளியேற்றப்பட்டார். அவர் பிறப்பதற்கு முன் டச்சுக்காரர்களோடு, ஜெர்மானியர்களும் , பிரெஞ்சுக்காரர்களும் கூட்டு சேர்ந்துகொண்டு தங்களை பூவர்கள் அதாவது விவசாயிகள் என்று அழைத்துக்கொண்டனர்.
இவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? நாட்டின் உட்புறம் சென்று அங்கு ஏற்கெனவே வசித்து வந்த பழங்குடி இனமக்களைத் தாக்கி, அவர்களுடைய சொத்துக்களை பறித்துக்கொண்டு, அந்த மக்களை அடிமைப்படுத்தினர். தங்களது நிலத்தையும், சுதந்திரத்தையும் காப்பாற்றிக்கொள்ள அந்த பழங்குடி இனமக்கள், அந்த பூவர்களோடு கடுமையாக போர் புரிந்தனர்.
1906-ல் பம்பாட்டா என்ற இடத்தில் நடந்த இந்த போரில் ஏராளமான பழங்குடியின மக்கள், சுதந்திரத்துக்காக தங்களது உயிரையும் விட்டனர். இந்த சம்பவத்தை 1941-ஆம் ஆண்டு மண்டேலா தனது நண்பர்களுடன் நாம் இப்படித்தான் அடிமைப்படுத்தப்பட்டு கிடக்கிறோம். என்று பேசி முடித்த போது, அங்கு புதிய போராட்டாக் குழு ஒன்று மண்டேலாவின் தலைமையில் உதயமாகத் தொடங்கியது.
இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற காலம் அது. வெள்ளையர்கள் ஆப்பிரிக்கர்களை மண்புழுக்களைவிட கேவலமாக கருதினர். ஆப்பிரிக்க ஏழைகள் பசியோடும், பட்டினியோடும் சேரிப்பகுதிகளில் அடைந்து கிடந்தனர். இதை நேரடியாக பார்த்த மண்டேலாவுக்கு இனி மேலும் இந்த இனவெறி அரசாங்கத்திற்கு எதிராக அடிமைப்பட்டு கிடக்க முடியாது.இதனை எதிர்த்து மக்களை ஒன்று திரட்டவேண்டும் என்ற முடிவுடன் தென்னாப்பிரிக்க காங்கிரஸ் இயக்கத்தை தனது நண்பர்களோடு இணைந்து உருவாக்கினார். இந்த நேரத்தில் மண்டேலாவின் உணர்வுகளை சரியான வழியில் செலுத்தி அதை மக்கள் சக்தியாக மாற்ற அவருக்கு ஒரு நண்பர் கிடைத்தார், அவர்தான் வால்டர் சிசுலு. இந்த நண்பரின் அறிமுகம்தான் உலக மக்கள் தங்கள் வாழும் தெருக்களுக்கும், நெல்சன் மண்டேலா என்று பெயர் வைத்து கொண்டாட திருப்பு முனையாக அமைந்தது.

மீன்காரத்தெரு





ஆகத் துயரங்கள் நிறைந்த மனங்களோடு….
பிரவேசிக்கும் மீன்காரத் தெரு”
மீன்காரத் தெரு(நாவல்), கீரனூர் ஜாகிர் ராஜா, வெளியிட்டோர்:மருதா, 226(188), பாரதி சாலை, ராயப்பேட்டை, சென்னை-600014 விலை ரூ.60/
நிலபிரப்புத்துவ பண்பாட்டு மதிப்பீடுகளுக்குள்ளும், இறுக்கமான மத ஒழுக்கவியல்களுக்குள்ளும், கட்டுப்பட்டிருக்கும், ஒரு பகுதிசார்ந்த இஸ்லாமிய சமூகத்துள்ளிருந்து கருத்திலும், காட்சியிலும், பாலியல் ஒழுக்க  மதிப்பீடுகளைத் தூக்கியெறியும் வல்லமையை நிறைத்துக்கொண்ட மனிதர்களை முன்வைத்துப் பேசுகிற கலகக்கார மனநிலையை மையமாகக் கொண்ட பிரதானத்தோடு விரிகிறது மீன்காரத் தெரு நாவல்.
இருப்புக்கும், வாழ்வுக்குமான வேற்றுமைகளைப் பதிவு செய்வதில் மிகுந்த கவனம் கொண்டு நாவல் வெளிப்பட்டிருப்பதை, திட்டவட்டமான தத்துவங்களில் அவநம்பிக்கையும், மனித துக்கங்களில் உருகும் மனமும் கொண்ட மனிதர்கள் அதிகமாக நிலை கொண்டிருக்கும், வீச்சமும், வீரியமும் கொண்ட மீன்காரத் தெருவுக்குள் நுழைகையில் நுகரமுடிகிறது.
காலந்தோறும் நீள்கிற தமிழ் இஸ்லாமியம் குறித்த பொதுப்புத்தியை ரமீஜாவும், கருப்பியும், ஜக்கரியாவும், பாத்தக்காவும் குத்திக் கலைத்து கேள்விக்குள்ளாக்குவதன் மூலம் இச்சமூகம் மறு சீரமைத்துக் கொள்வதற்கான திறவுகோலை வெகுயதார்த்தமாக முன்வைக்கிறார் கீரனூர் ஜாகிர் ராஜா. சமூக அமைப்பில் ஒவ்வொரு சாதியுமே தங்களை மேலானதாகக் காட்டிக்கொள்ள பொருளாதாரம், பெண்களின் மீதான பாலியல் வன்முறை போன்ற ரீதியில் வெளிப்படுத்திக்கொள்வதை ரமீஜா மற்றும் ஆமினா பாத்திரங்களின் வழியாக நமக்குக் காட்டுகிறார் நாவலாசிரியர்.
நேர்க்கோட்டுப் பாணியற்ற கலைத்துப்போடும், கதை கூறல் பாணியிலான உத்திகளினூடாக தமக்கான விடுதலை குறித்த பிரக்ஞையற்ற வெகுளியான மனிதர்களின் வாழ்வியலை சாதுர்யமாக பேசுவதே இந்த நாவலின் கெட்டிக்காரத்தனம். கூர்மையான அரசியல் அறமும், கலக மனமும்தான், இனவாத அரசியல் சக்திகளுக்கு எதிராக தெருமக்களைத் தொடர்ந்து குரல் எழுப்ப வைக்கின்றன. இனவாதத்தை எதிர்த்து நிற்கும் வேளையில் சொந்த இனத்தின் சுரண்டலுக்கு எதிராக நைனா தொடர்ந்து குரல் எழுப்புகிறான்.
தமிழ்ச் சமூகத்தின் சராசரி அரசியல் பார்வைகொண்ட காசீமின் செயல்பாடுகளும், நிலப்பிரபுத்துவத்தின் நீட்சியான சலிமீன் அதிகாரத்திற்கு எதிராக குரல் எழுப்பும் நைனாவின் நடவடிக்கைகளும், சில கதைமாந்தர்களுடன்,இணைந்து நுட்பமாகவும், கலைநயத்துடனும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒடுக்கப்பட்ட தலித் முஸ்லிம்களான ஆமினா, ரமீஜா போன்ற எண்ணற்ற  பெண்களின் சதைக்காடுகளை பொருளாதரத்தின் மூலமாக வேட்டையாடி, நிர்மூலமாக்குவது அவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருந்தபோதும், வயிற்றுப் பிழைப்புக்காக இசைகிறபோது நைனாவும், காசிமும் முன்வைக்கிற அரசியல் யதார்த்த வாழ்க்கையில் இடைவெளிவிட்டே நிற்கிறது.
கக்கத்தில் தூக்கிச் சுருட்டி வைத்துக்கொள்ளும் அளவேயுள்ள பாத்தக்காவின் பெட்டிக்கடையை போதை நீங்கி எழுந்த ஜக்கரியாவின் கைகள் துழாவுவது குறித்து பாத்தக்காவுக்கு லட்சியமில்லை இப்போதைக்கு என்கிறபோது, இருவரின் முரணான மனநிலைகளும், நாவலில் துல்லியமாக விழுந்திருக்கிறது.
எல்லா கதாபாத்திரத்தின் வாயிலாக உலகமய மாதலின் தாக்கம் சூட்சுமமற்ற மனிதர்களின் வாழ்வியல் தளங்களைப் பறித்துக்கொண்டதுடன் நில்லாமல் கலாச்சார பண்பாட்டுத் தளங்களையும், சுவீகரித்துக் கொள்கிறது, என்பதை அறிந்துக்கொள்ள முடிகிறது. பொருள் உற்பத்தி உறவுகள், பருண்மையான வர்க்க உற்பத்தி உறவுகளோடு அல்லாமல் சாதீய கண்ணிகளாலும் பிணைக்கப்பட்டிருப்பதை மீன்காரத்தெருவாசிகள் ஒவ்வொருவரிடமிருந்தும் கிரகிக்க முடிகிறது.   




பழுத்துதிர்ந்த இலையொன்றின்…
இறுதி சொட்டு ஈரத்தை
பருகி கனத்த பூமி
தனது கருப்பையில் நிறைத்தது இன்னொரு தலைமுறைக்காக…
யாருமற்ற வெளியில்…
விழுந்துருண்ட கையடக்க காற்றினை
உள்ளிழுத்து வேர் முடிச்சுகளில் தாங்கியது.
பூமி பற்றி மேலெழ தவித்த செடி…
ஈரம் பருகி…
காற்றருந்தி உயிர்க்க தொடங்கிய ஒன்று
sநிலம் பிளந்து…
துள்ளி வெளியேறிய அச்சிறு தருணத்தில்
குருதி பாய்ந்து…சிதிலமாகி கிடந்த
சதைக்குவியல்களில்
ஒரு இனமழித்த களிப்பில் வீற்றிருந்தது கழுகொன்று.
இவையெல்லாம் போக…
அங்கொன்றும், இங்கொன்றுமாய்
இறைந்து கிடந்த துப்பாக்கி குண்டுகளைக் கொண்டு
பளிங்கு விளையாட துவங்கியிருந்தது.
கை, கால் முளைத்த அச்சிற்றுயிர்.

ஆதி சொற்களின் ஆணிவேர் பற்றி…. மேலெழும்பும் அடையாளங்கள்…..


வீட்டிற்குக் கீழிருக்கும் கங்கு- இலக்குமி குமாரன் ஞானதிரவியம், அன்னம் வெளியீடு, பக்கம் 80, விலை ரூ.45
நாடோடி வாழ்க்கை முறையிலிருந்து அரசால் ஆன சமுதாயமாக பரிணமித்தபோது, ஆதி மனித உணர்வு சமூக அழுத்தங்களுக்கும், நெருக்கடிகளுக்கும் உள்ளானது. இத்தகைய அழுத்தங்கள், மனநோய், காக்காய் வலிப்பு, பிளவுண்ட ஆளுமை ஆகியவற்றுடன் ஒப்பிட்டு நோக்குமளவுக்கு பல்வேறு மனநோய்களாக வெளிப்பட்டன.
உணர்வு சார்ந்த கட்டுப்பாட்டை இழக்க நேரிட வைக்குமிந்த மனநோய்கள், ஒரு கடவுளோ அல்லது ஆவியோ மனிதனின் உடலில் புகுந்து அவளை/ அவனை ஆட்கொண்டுவிட்டது என்ற நம்பிக்கை தோன்றவும் வித்திட்டது. இதனைத்தான் நவீன அறிவியல் மனக்கிளர்ச்சி என்ற நவீன சொல்லாடலில் புழங்குகிறது. இத்தகைய மனக்கிளர்ச்சி என்ற சொல் மனிதர்கள் ஆட்கொள்ளப்படும் போக்கைத்தான் முதலில் குறித்தது.
கடந்துபோன சமூக அமைப்பில் இத்தகைய நோய் ஆட்கொள்ளப்பட்டவரை குணப்படுத்தியவன், மந்திரவாதி, பில்லி சூன்யகாரன் அல்லது யோகி என பல அடையாளங்களால் அங்கீகரிக்கப்பட்டார்கள். நீட்சியடைந்து  வரும் சமூக அமைப்பின் இக்காலத்தருணங்களில் மனிதர்களை ஆட்கொண்டு வழிநடத்தும் தற்கால ஆவிகளாக உலகமயம், தாராளமயம், தனியார்மயம் போன்றவற்றை முன்னிறுத்தலாம்.
இவை உருவாக்கும் சமூக அழுத்தங்களாக தனிமை, கூட்டுழைப்பு துண்டாடப்படுதல், நுகர்வு கலாச்சாரத்தில் ஏற்படும் வாழ்வியல் தேவைகள் பூர்த்தியடையாமை, விரக்தியுனூடாக தற்கொலை அல்லது கொலை என்பனவாக பட்டியல் நீள்கிறது. இவற்றை எதிர்கொள்வதற்கும், எதிர்ப்பதற்குமான மனநிலை மாற்றத்தை உற்பத்தி செய்யும் மருத்துவனொருவன் தற்கால சமூக அமைப்பிற்குத் தேவையெனகொள்ளும் பட்சத்தில், அந்த தளத்திலேயே இக்கவிஞரின் பிரவேசித்தல் நிகழ்கிறது.
எந்திரமயமான நகர வாழ்வில் அங்கங்கே நலிவுற்றுக் கிடக்கும் மனிதநேய உணர்வுகளையும், சூட்சுமம் அல்லாத வெகுளித்தனமான கிராமத்து மண்ணையும், அதன் வாழ்வியல் முன்னிறுத்தும் எளிமையான தேவைகளை பூர்த்தி செய்துகொண்டு நகருகிற மனநிலை சகலமும் வணிகமயமாகிப்போன நகரத்து வீதிகளில் எதிர்கொள்ள  நேரிடுகிற நெருக்கடியை ’மீள்வதும் நீட்சியும்; என்ற கவிதை அலங்கார வார்த்தைகளற்று கூறிச்செல்கிறது.
சிதலை என்றொரு கவிதை மூலம் மெக்காலேயின் பொதி, சுமக்கும் கல்வி பாணியை, சாட்டையாலடித்து தோலுரிப்பதோடு மட்டுமின்றி, மாற்று கல்வி முறை குறித்த அவசியத்தையும், உணர்த்திச்செல்கிறது.
பூர்ஷ்வா மனநிலை கொண்ட ஒரு அமைப்பிலோ, நிறுவனத்திலோ பணிபுரிவதிலுள்ள அவஸ்தைகளையும், சுயமரியாதை உணர்வினை சிதைத்து சிரிக்கும்  அதனிடம் வாழ்வியல் நெருக்கடிகளால் கைகட்டி, சேவகம் புரிய வேண்டியதன் நிலை குறித்தும் புலம்பலோடு பரப்பி வைப்பதில் அலகு என்ற கவிதை முக்கியத்துவம் பெறுகின்றது.
கிராமத்து மண்ணில் பண்டமாற்று முறைகளின் தேவைகளும், கூட்டுழைப்பும் இருந்தது. கொஞ்சம் இருக்கிறது. என்பதற்குச் சாட்சியாய் மணல் நிறத்திலிருக்கும் அப்பாவின் வியர்வைத்துளி. ஆணாதிக்கத்தின் பிடியிலும், முதலாளித்துவத்தின் ஆதிக்கத்திலும் பெண்மனம் சிதைக்கப்பட்டு வன்முறைக்குள்ளாக்கப்படும் அரசியல் குறித்து காலந்தோறும் என்ற கவிதை எடுத்தியம்புகிறது. சங்க இலக்கியத்தின் நீட்சியாய் பனம்படும்பனை என்ற கவிதை, கவிஞரின் மூலமாக மனம்படுபனையாக தன்னை மறுவாசிப்பு செய்து கொள்வது மிக நேர்த்தி.
கவிதைத் தொகுப்பு முழுவதும் தேர்ந்தெடுத்துள்ள பாடுபொருளும், மொழியும் தனது மண்ணுடனும், மக்களுடனும் நீடித்த உறவு கொண்டு சஞ்சரிக்கிறது. வீட்டிற்குக் கீழிருக்கும் கங்கு என்ற கவிஞரின் நான்காவது தொகுப்பான இது. அன்றாட சாதாரண பேச்சு வழக்காலும், சொலவடைகளாலும், பழமொழிகளாலும், தன்
னை நிறைத்துக்கொண்டு பிரயாணம் செய்கிறது. இக்கவிதைகளின் தொன்மம், உள்ளடக்கம் மிகப்பழமையாய் கொள்கிறபோதும், இவற்றில் ஆழ்ந்த ஓர் அரசியல் உள்ளடக்கமும் இருக்கிறது. இது முற்றிலும் புதியது. சிறுகதைத் தளத்தில் கண்மனி குணசேகரனுக்கும், அழகியபெரியவனுக்கும், பெருமாள்முருகனுக்கும் வாய்த்திருக்கிற அரசியல் உள்ளடக்கம் .இக்கவிஞருக்கு கவிதையில் சாத்தியமாயிருக்கிறது.( புத்தகம் பேசுது இதழில் வெளி வந்தது)

Monday, November 1, 2010

வரைபடம்

குறைந்த பட்ச பயணக்குறிப்புகளோடு ...
புறப்பட்டதொரு வண்ணத்துப்பூச்சி
காற்று நுழையாத பிராந்தியம்
கண்டறிவதாய்...உறுதியும் அவற்றில்
களைப்பின் உச்சத்தில்...
நாணலொன்றின் மெல்லிய நரம்பு பற்றியமர்ந்து
சிலாகித்துப்போவது பற்றியும்..
திரும்பி வரும் திசையுணர
காற்றின் மீது கோடுகள் கிழித்துச்செல்வதும்
வலியறியும் போது றெக்கைகள் கழற்றி...
உதிரும் சருகொன்றின் மீது ஒட்ட வைப்பதாகவும்
வழியில் பெய்ய நேரிடும் மழைத்துளிப்பட்டு
கசிந்துருகும் அபாயம் உள்ளதால்
வர்ணங்களைக்கூட சீசாக்களில் அடைத்துவிடுவது பற்றியும்
இன்ன பிறவும்...
பயண நடுவில் எடுத்துச்செல்ல மறந்து போன குறிப்பு தேடி..
வருகையில்தான் நேர்ந்திருக்கக் கூடுமது.
கோடுகள் கொண்டு வீடமைத்து
றெக்கைகளால் கூடாரம் செய்து...
உள் அமர்ந்து வர்ணங்கள் கொண்டு
வண்ணத்துப்பூச்சியொன்றை குழந்தைகள்
வரைந்துக்கொண்டிருந்தது.