Thursday, October 28, 2010

என் துயரம் உனக்கு, பெரும் துயரம் பூமிக்கு


கூனிக்குறுகி சிறுகத்தரித்த மனங்களோடு....
சிலாகித்துப் பறக்கும் அன்புகள்.
அரைஞான் கயிற்றைப் பிடித்துக்கொண்டு
அதுதான் வழி என பின்தொடரும் கறைபடிந்த நினைவுகள்.
ஆல்கஹால் தலைக்கேறி... உணர்ச்சி பிழம்பெடுத்து
பிதற்றும்  நாழிகை நண்பர்கள்.
விழிகளில் பொய்தவழ, வியாபித்து செழிக்கும் அழுகிய சொற்களோடு
செய் நன்றிக்காய்...செலவழிக்கச்சொல்லும்  குரூரங்கள்.
நேர்மை விட்டொழித்து...
நியாயம் அடகு வைத்து...
குருதி பருக துடிக்கும் வாய் வார்த்தைகள் நம்பிக்கையற்ற பெருவெளியில்
அங்கோவொரு தவிட்டு சிட்டுக்குருவி...
எப்பொழுதோ..என் தானியக்குதிருடைத்து
கொத்தி பருக நேர்ந்த நொடிகள் நினைத்து..
என்னை மீட்டெடுக்கும்  இசைக்குறிப்புகளோடு வந்திருக்கிறது.
நேசமிழந்த...என்  வெந்நிறம் சுமந்த சாம்பல் நிறக்குருவி
சன்னல் திறந்திருக்கிறது....
ஒரே ஒரு சத்தம் சன்னமாய் ஒலிக்கிறது...
பெருகி வரும் ஒலி, பெரும் ஓலமாய்..
என் துயரம்  பிதற்றலில், குருவியின் துயரம் பேரண்ட வெளியில்
சிறு சீசாவில் சிக்கித்தவிக்கிறது என் நேசம்.
பூமியின் சிறுத்துகளில் கூட வெடித்து சிதறுகிறது  சாம்பல் நிற குருவியின்
குரலுடைத்து வெளியேறும்  ஆதிச்சொற்கள்

1 comment:

சாய் ராம் said...

கவிதை நன்றாக இருக்கிறது.

சாம்பல் நிற குருவியின் துயரம் பிரபஞ்சத்திற்கு முக்கியமாக இருக்கலாம். ஆனால் நம் துயரத்தை நாம் தானே சுமக்கிறோம். இருந்தாலும் குற்றவுணர்ச்சியில் இருந்து தப்பிக்க முடிவதில்லை என்பது ஒரு முரண்நகை.