Friday, August 6, 2010

வண்ணத்துப்பூச்சியின் நிறங்களால் ஆனவன்

நிறுக்கல் ஆற்றினோ நன்று மண்தில்ல
ஞாயிறு காயும் வெவ் அறை மருங்கில்
கை   இல் ஊமன் கண்ணின் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன்று இந்நோய் நோன்றுகொனதற்கு அரிதே
                                       -வெள்ளிவீதியார்

தூக்கத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த கண்கள் இருட்டை முழுதுமாய், பதிவு செய்துவிடும் முனைப்பில் தீவிரம் கொண்டிருந்தது. நடந்து முடிந்தவைகள் எல்லாம் சோவென்று பெய்த பலத்த மழையில் அடித்துச்செல்லப்பட்ட தானியச்சிதறல்களாய் பரப்புகள் தாண்டிபோய் பதுங்கிக்கொண்டு ரணங்களை பிரசவித்துக்கொண்டிருந்தது.

ஏன்  இவனுக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்கிறது. என்று கவலைப்படும் ஆத்தா மட்டும் ஒவ்வொரு கோவிலாய் ஏறி இறங்கினாள். ஜோதிடர்களை எல்லாம் தேடிப்போய் அவனுடைய ஜாதகத்தை காட்டினாள். ஆனாலும் அவன் அப்படியேதானிருக்கிறான். முன்னோக்கி அவனை இழுத்துச்செல்லும் காலத்தின் கால்களில் மட்டும் துயர ரேகைகள் படிந்தேயிருக்கிறது.

இப்பொழுதெல்லாம் மனித முகங்கள் மோதிக்கொள்ளும் எந்தவொரு இடத்திலும்  அவனைப்பார்ப்பதே அரிதாகிவிட்டது. அநேக பொழுதுகள் இலங்கை வானம்பாடி தூக்கி வரும் பி.பி.ஸ்ரீனிவாசின் குரல்களில் நனைவதற்காய், ஆறேழு நிமிடங்கள், அறைக்குள் அடைகாத்துக்கொண்டிருப்பான். அதன் பிறகு குதூகலத்தோடு வெளிபறந்து மனிதர்களல்லாத சகலவற்றினுடனும்  சஞ்சரிக்கத்தொடங்கிவிடுவான்.

சமீபகாலமாய், ஊருக்குள் அவனைப்பற்றிய ரகசிய குறிப்புகள் அடங்கிய பேச்சுகள்  மனித அலைவரிசையில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. அவன் சித்த பிரமை கொண்டிருப்பதாகவும், தனக்குத்தானே உளறிக்கொண்டிருக்கிறான் என்றும் அடிக்கடி கூறப்பட்டது.

அன்றொரு நாள், நெடுங்குளத்து ஏரியில் உள்ள கருவேல மரங்களிடம், அதனுடைய  பால்யம் குறித்த, பலவற்றையும் அவன் பகிர்ந்துக்கொண்டிருந்தான். என நிறைய பாவனைகளோடு ஊரில் உலாவிக்கொண்டிருக்கும் ஒருவர், மிக உறுதியாக மனிதர்கள் கூடுமிடங்களில் எல்லாம் சொல்லிச்செல்கிறார்.

சலங்கைக்கட்டிய பூதம்போல், தென்னம்மட்டைகள் காற்றின் தாளகதிக்கு ஏற்ப நாட்டிய மாடிக்கொண்டிருந்தது. பெற்றெடுத்த வாரிசு ஒன்று சாமந்திக்குளக்கரை நாவல் மரக்கிளையில் தூக்கிலிட்டுக்கொண்ட துக்கம் தாளாத மூதாட்டி ஒருத்தி  ஒப்பாரி வைத்து அதனை நீண்ட இரவின் நிசப்தங்களினூடாக சீராக ஓடவைத்துக்கொண்டிருந்தாள். யார் வீட்டிலோ பசிபொறுக்காத , பச்சிளம் குழந்தை ஒன்றின் அழுகை சத்தமும் மிதந்துக்கொண்டே  அவ்விரவை ஈரப்படுத்திக்கொண்டிருந்தது. ஆத்தா மட்டும் அவன் தலை மாட்டிலேயே அமர்ந்து கடவுள்களை எல்லாம் திட்டி தீர்த்துக்கொண்டிருந்தாள்.

எப்பொழுதோ நோவு காவு வாங்கிய தனது புருஷனை நினைத்து கொஞ்சம் திருநீறை எடுத்து, அவனது நெற்றியில் பூசிவிட்டு, அய்யய்யோ, எனது பேரனின் மீது கரிசனம் காட்ட யாருமே இல்லையா? என்று நெடிய பெருமூச்சினை வாசல் கடந்து போகச்செய்துவிட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டாள்.

ஆத்தாவின் சேலை கதகதப்பில், அப்படியே கொஞ்சம் தூங்க எத்தனித்திருக்கவேண்டுமவன். திடீரென பறவைகள் சத்தமிட்டப்படியே, அவனது கண் இமை காடுகளில் வந்தமர்ந்தது. கண்களுக்குள் தேங்கி ததும்பி நின்ற துயரம் நிறைந்த பதின்மூன்று ஆண்டுகால நினைவுகளை அவைகள் கொத்திக்கொறித்துக்கொண்டிருந்தது. அதனால் ரணமாகி கசிந்துருகிய, குருதி முழுதுமாய் படுக்கையை நனைத்து அவனை ஈரப்படுத்திக்கொண்டிருந்தது. எதனையும் விரட்ட மனமற்றவனைப்போல,  இவனையே வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்த, ஒழுகும் அந்த வீட்டுக்கூரையின் மோட்டு வளையோடு தற்காலிகமாக நட்புக்கொள்ள தொடங்கியிருந்தான்.

ஏறக்குறைய பதின்மூன்று ஆண்டுகளாய்  இப்படியேதானிருந்துக்கொண்டிருக்கிறான். அவ்வப்போது மேலெழுந்த கைகள், காற்றினில் எதையோ தேடி துலாவி சோர்வுடன் ஒடுங்கியது. சிறிது நேரத்திற்குப்பின் முனகல் சத்தம் சீராக அவனிடமிருந்து வந்துக்கொண்டிருந்தது.  பறவைகளுக்கு கொத்திப்பருக கொடுத்த நினைவுகளினூடாக, அவனுக்கு பிடித்தமான அவளுமிருந்ததை  நீண்ட வலிகளுக்குப்பிறகுதான், அவன் உணர்ந்திருக்கக்கூடும். அவனது மெல்லிய தேகத்தை இரவுப்பாம்பு முழுவதுமாய், விழுங்கிக்கொள்வதற்கு முன்பே, அவனது நேசத்துக்குறியவளை, முகாமிட்டிருந்த பறவைகள் கூட்டத்தை விரட்டத்தொடங்கியிருந்தான்.

விரட்டுவதற்காக, அடிக்கடி கைகளையும், அவ்வப்போது கால்களையும் கூட பயன்படுத்திக்கொண்டேயிருந்தான். சில சமயம் ச்சூ...ச்சூ  என்று ஒலியெழுப்பியும், அரற்றிக்கொண்டிருந்தான். அவனுடைய செயல் ஒன்றும், அவனது  ஆத்தாவிற்கு புதுமையானதாக தோன்றவில்லை. சமீபகால அவனது செயல்பாடுகளில் இதுவும் ஒன்று என நினைத்து அவனது நிலைக்கண்டு வருந்தத்தொடங்கினாள்.

குரூரங்கள் முறைவைத்து உள் நுழைந்துக்கொண்டிருந்தது. அவனது பிடரி மயிற்றைப்பற்றிக்கொண்டு  இனம் காண முடியாத பறவையொன்று, எற்றிசையிலும் பறந்துக்கொண்டிருந்தது. இப்பொழுது அப்பறவைக் கூட்டத்திற்கிடையில், அவனுக்கு பிரியமானவள்  எந்தவித அச்சமும் இன்றி வந்துக்கொண்டிருந்தாள்.

கிட்டத்தட்ட  பதின் மூன்று வருடங்களுக்கு முன்பான  அவளைப்பற்றி யோசிக்கத்தொடங்கியவனுக்கு, புட்டத்தின் மீது வந்து விழும் கரீய நிற கூந்தல், அந்த  அழகான நெற்றி, அதன் மீது மிக கச்சிதமாக  ஒட்டப்பட்டிருக்கும் கறுப்பு நிற ஸ்டிக்கர் பொட்டு, அதற்கும் கொஞ்சம் மேலே, எப்பொழுதும் பிசிறின்றி அமர்ந்திருக்கும் குங்குமம், எல்லாமுமே  ஏழுமாத குழந்தையினுடைய மென்மையை  அடையாளப்படுத்திக்கொண்டேயிருக்கும்.
தவணை முறையில் அவள் கொட்டித்தீர்க்கும் புன்னகை,

இவை எல்லாமும் மின்சார ரயிலின் வேகத்தோடு அவனுக்குள் வந்துப்போய்கொண்டேயிருந்தது. இப்பொழுது மெலிந்த தேகத்தில், பொலிவுகளற்றே, நின்றுக்கொண்டிருந்த அவளின்  ஆழ்ந்த நட்பினைப் பற்றி  நினைக்க, நினைக்க பூமியின் மறுகோடி விளிம்புப்பற்றி  அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருப்பதாய், அச்சமேற்பட்டது  அவனுக்கு.

வெடித்துச் சிதறிய அழுகையை, மிகுந்த அழுத்தம் தந்து அடக்கிக்கொண்டான். அநேகமாய், அவனை விட சில வயதுகள் மூத்தவளான  அவளுடைய முதிர்ச்சி நிறைந்த தோற்றம் தான், அவனை அவ்வாறு செய்திருக்கவேண்டும். ஒரே பள்ளியில் இவனைவிட ஒரு வகுப்பு அதிகமாக படித்துக்கொண்டிருந்தாள். அவள் மீதான  நேசம் விரிவடைய தொடங்கிய நாளிலிருந்தே, அவளைப்பற்றிய  சகல செய்திகளையும் தேடிப்படிக்கத்தொடங்கியவனுக்கு, பாடத்தில் தேர்ச்சி என்பது எளிதாக இருந்தாலும், மதிப்பெண் குறைவதை தடுக்க முடியவில்லை.

இருவரையும்  சூழ்ந்துக்கொண்டு  ரீங்காரமிட்ட  பறவைகள் , கலங்கி நின்ற  இவர்களின் விழிகளுக்குள், துயர மீன்களை  கவ்விக்கொண்டு போய்  வெளியெங்கும்  வைத்து விளையாடவும்,  சாலையோரமாய், ஆடையற்று, தூங்கும், எலும்பும் தோலுமான குழந்தைகளுக்கெல்லாம்  கதைச்சொல்லி தூங்க வைக்கவும்  முனைப்போடிருந்தன.

சரியாக, அவள் நெருங்கி  அவனிடம்  வந்து விட்டாள்.   பதின் மூன்று வருடங்களுக்கு முன், ஒரு விடுமுறை நாளின்  மாலைப்பொழுதாகதான் இருக்கக்கூடும். அவள் வீட்டு  மாமர நிழலில்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாட்டுவண்டியின், மோத்தடியின்  இருபுறமும்,  ஆளுக்கொரு பக்கமாக  உட்கார்ந்திருந்தனர். முன்னிரவு அவளது  கைகள்  அப்பிக்கொண்ட  மருதாணி     சிவந்து  மஞ்சள் வானத்தையே கர்வம்கொள்ள  வைத்துக்கொண்டிருந்தது.

திருமணத்திற்கு பிறகு  வரப்போகும்  அனைத்து மார்கழி  மாத  அதிகாலை பொழுதையும்  மகிழ்வுக்குள்ளாவதற்காக, தான் ஒரு நோட்டு புத்தகம்  முழுவதும்  போட்டு வைத்திருந்த விதவிதமான, கோலங்களையும், அதன் அழகையும் சொல்லி, அவனை மகிழ்வித்துக்கொண்டிருந்தாள். காலையில்  பக்கத்து வீட்டில்  அவளைச்சாப்பிடச்சொல்லி கொடுத்திருந்த  மைசூர்  பாகின்  பாதித்துண்டை, விரலிடுக்கில், பதுக்கி வைத்திருந்த அவள், இவன்  எதிர்பார்க்காத  ஒரு  கணபொழுதில், அவனுக்கு  ஊட்டிவிட்டு, எதுவுமே  நடக்காதது போன்ற முகபாவனைகளோடு பேச்சைத்தொடர்ந்துக்கொண்டிருந்தாள்.

அவளுடைய பிறந்த நாள் ஒன்றிற்கு, அவன் வாங்கிக்கொடுத்திருந்த  நாஞ்சில்நாடனின் மிதவை நாவல் குறித்தும் சிலாகித்து பேசிக்கொண்டிருந்தாள். அப்பொழுது நேரம் கடந்திருந்தது. கிளம்ப எத்தனித்த அவனின்  இடதுகை பிடித்து, நிறுத்திய அவள், தன் கண்களால், அவனை இமைப்பொழுது சிறைப்பிடித்துவிட்டு விடுதலை செய்தாள்.

எங்கோ தூரத்தில் , கோவில் திருவிழாவில் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. இடையிடையே வானம் வெடிக்கும் சத்தத்தைக்கேட்ட , பறவைகள்  இருவரிடமும், நெருங்கிவந்து, ஆதரவை தேடிக்கொண்டது.

அவர்களின் கடைசி  சந்திப்பிற்கு பிறகுதான், அது நடந்திருக்கிறது. வயதிற்கு வந்த பெண்ணை வீட்டிலே வைத்திருப்பது, நெருப்பை மடியில் கட்டி வைத்திருப்பதாக உணர்ந்த  அவளது  அம்மா தான் , அந்த முடிவை எடுத்திருக்கவேண்டும், அவளது வாழ்கைக்கான  ஆணை, உடனடியாக தேடிப்பிடித்து கல்யாணம் முடித்து வைத்துவிட்டார்.

அவளது   அம்மாவின்  செயலுக்கும் நியாயமான காரணம் இருந்திருக்க வேண்டும். கணவனை இழந்து, பெண் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிய கடினம், பெண் பிள்ளை  பேருந்தில் ஏறி வெளியூர் படிக்கப்போனாலே, மூக்கு, முழி வைத்து, பேரண் லவ்ளி போட்டு, பவுடரும் பூசி, அலங்கரிக்கிற இந்த  ஊர் கல்யாணம் செய்து கொடுக்காமல் வீட்டில் வைத்திருந்தால், என்னவெல்லாம் பேசும்  என்ற கவலை, அவளது  அம்மாவை  ஆக்ரமித்துக்கொண்ட பிறகுதான், இதெல்லாம்  நடந்திருக்க முடியும்.  மெத்த படித்தவர்களே  , பெண் பிள்ளை விவகாரத்தில், நிறையவே யோசிக்கிறபொழுது, பாவம்  இவர்கள்  சாதாரண மனிதர்கள் தானே, என்று நினைக்க தொடங்கிய நாள் முதலாய், அவளிடமிருந்து முழுவதுமாய்  விலகிக்கொள்ளத் தொடங்கியிருந்தான்  அவன்.

வாசலில் நெடிதுயர்ந்து நின்ற வேப்பமரக்கிளையில், ஜீவிதம் கொண்டிருக்கும்  காக்கைகளில்  இன்னும்  வந்துசேராத ஒன்றிற்காய், மற்றவைகள் கூடி சலசலப்பது, மிக சன்னமாக நடந்துக்கொண்டிருந்தது.

பிரியத்தைக் கொட்டிதரும்  கணவனும், போதுமான வசதிகளும் இருந்தாலும், இன்னும்  அதிகப்படியான  பணம் சேர்க்க நிர்பந்திக்கும், சுற்றங்களால், கல்யாணம் நடந்த நாள் முதலாய்... கணவனை விட்டே பிரிந்திருக்கும், அவள்   குதூகலத்தோடிருக்க, திண்ணையில் தவழ, பொக்கைவாய் குழந்தைகளுமில்லை. ஒவ்வொரு  திருவிழாவிலும்  வாங்கி சேர்த்த , பொம்மைக்கார்களும், மரத்தொட்டிலும், குழந்தைகளின்  நேர்மைப்படாமல்  மங்கியே கிடப்பதாய்....பெருமூச்சொறிந்தாள்.

அருகில் வந்து...அவனது  நெற்றியை தோழமையோடு  வருடிவிட்ட  அவள்... உனக்கென்னாயிற்று, நீ, ஏன்? இப்படி  வாடிப்போய் இருக்கிற, என்றாள்.

இங்க,,...பார், நாம் இருவருமே  பிடித்து  நூற்கட்டி பறக்கவிட்டு  விளையாடுவோமே! வண்ணத்துப்பூச்சி, அதுதான் என்று கூறிய, அவளது கைகளை பார்த்தான்  அவன். நன்றாக வரைந்திருக்கிறாய் என்றான். உனக்கு பிடித்த நிறங்கள் தான் என்றாள்  அவள்.

அப்படியே  , அவளின் மடி மீது தலைசாய்த்து, உறங்கத்தொடங்கியிருந்த  அவனது, தலைமுடியை கோதிவிட்டுக்கொண்டிருந்தன  அவளது விரல்கள். மெல்லமாய்  சூரியன்  உற்றுப்பார்க்க , வெகுதூரம் போய்விட்டிருந்தன பறவைகள்.

No comments: