Friday, June 11, 2010

நூல் மதிப்புரை:


நூல்
மதிப்புரை:

தமிழ்ச்
சூழலுக்கு
முன்மாதி
ஆசிரியர்:

நமது கல்வியின் உள்கட்டமைப்பு என்பது, நம் சமூகத்தில் நீடிக்கிற ஏற்றத்தாழ்வுகளை ஏற்றுக் கொள்கிற மனிதர்களை திட்டமிட்டு உற்பத்தி செய்கிற ஏற்பாடுகளோடுதான் இருக்கிறது.கீழ்மட்ட(அப்படி உருவாக்கப்பட்ட) குழந்தைகள், நசுங்கிய அலுமினிய தட்டோடும், கிழிந்த சட்டைகளோடும், ஒழுகிய மூக்கோடும், பள்ளிக்குள் நுழைகிறபோது, அங்கிருக்கக்கூடிய பாடத்திட்டங்களையும், தேர்வு முறைகளையும், இவற்றை குழந்தைகளிடம் திணிக்க பிரயத்தனப்படும், ஆசிரியர்களையும், பார்த்து பீதியடைந்து பள்ளியை விட்டு இடைநிற்கும் அவலம் நீடித்துக்கொண்டுதானிக்கிறது.

இப்படியான குழந்தைகளை இதர குழந்தைகளோடு சமமாக வைத்து கல்வி கற்பிக்க வேண்டும் என்ற பார்வை கொஞ்சம் வளர்ச்சியடைந்திருப்பது குறித்து நாம் மகிழ்ச்சிக் கொள்ளலாம். ஆனால் முதல் தலைமுறையாக பள்ளிக்குச் செல்லக்கூடிய குழந்தைகள் எல்லாவற்றையும், அடிப்படையில் இருந்தே கற்கத் தொடங்க வேண்டியிருக்கிறது.

படிப்பதற்கு புத்தகங்களோ, பத்திரிகைகளோ, கேட்பதற்கு ரேடியோவோ, பார்ப்பதற்கு தொலைக்காட்சியோ, இல்லாத சூழலிருந்தும்,( இப்பொழுது அநேக வீடுகளில் தொலைக்காட்சி இலவசமாக வந்துவிட்டது ஒருபுறம்) தங்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகளை நேர்செய்வதற்கான புரிதலும், நம்பிக்கையுமற்ற பெற்றோர்களிடமிருந்தும், எதிர்பார்க்க முடியாத அன்பினையும், ஆதரவினையும், பள்ளிக்கூடம் தருவதுதான் ஆரோக்கியமான குழந்தைகள் சமூகத்தை உருவாக்க ஏதுவானது. ஆனால் அவ்வாறு பள்ளிகள் தருவதில்லை. என்பதை தன்னம்பிக்கையற்ற, போராட்ட குணமற்ற சமூகத்தை நாம் தொடர்ந்து உற்பத்தி செய்து வருவதிலிருந்தே கண்டு கொள்ள முடியும்.

இந்தச் சூழல் தொடர்ந்து நீடிக்கிற பட்சத்தில், எந்தவிதமான அடிப்படை வசதிகளற்ற கிராமப்புற குழந்தைகள்; அறிவுத் தனத்திலும் போட்டிகளத்திலும் நகர மற்றும் தலைநகர குழந்தைகளோடு தங்களை சமப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பினை நமது பாடத்திட்டங்களும், தேர்வு முறைகளும் இதுவரை உருவாக்கத் தவறிவிட்டன.

அடிமட்டத்து குழந்தைகளை மேல்மட்டத்து குழந்தைகளோடு ஒன்றிணைப்பதற்கான கல்வி குறித்து விடுதலையடைந்த இந்த அரை நூற்றாண்டு காலம் கடந்த பின்னரும் கூட விவாதிப்பதற்கான, சூழல் இன்றும் தீவிரமடையவில்லை.

ஆனால் நீண்ட காலத்திற்கு முன்பே, சோவியத் நாட்டின் சோதரக் குடியரசுகளில் ஒன்றாகிய கீர்கிஸியாவில் கிராமப்புற குழந்தைகளை, தலைநகர குழந்தைகளின் நிலைக்கு கொண்டு செல்வதற்கான, கல்வி குறித்த திட்டமிடலும், அதனைச் செயலூக்கம் பெறச் செய்வதற்கான அக்கறையும், இருந்திருக்கிறது. அதன் வாயிலாக சோவியத் ஆட்சி அங்கு நிலைநின்றிருக்கிறது. இத்தகைய அனுபவத்தைத்தான் சிங்கிஸ் ஐத்மாத்தவ் தனது முதல் ஆசிரியர் என்ற குறுநாவலின் மூலம் பதிவு செய்திருக்கிறார்.

படிப்போ, பள்ளிக்கூடமோ எதுக்கு எங்களுக்கு என்ற அறியாமையில் மூழ்கிக் கிடந்த மக்களை கொண்ட அந்த குர்க்குரீ கிராமத்தில்தான் இந்த ஆகச்சிறந்த வேலை நடைபெறுகிறது. தனியொரு மனிதனாக நின்று, அக்கிராமத்தின் முதல் ஆசிரியராகவும், முதல் கம்யூனிஸ்டாகவும் தன்னை வடிவமைத்துக் கொண்ட துய்ஷேன் சிங்கிஸ் ஐத்மாத்தவின் படைப்பில் நிதர்சனமாகி விடுகிறார். வாசிக்கிறபோது நம்மையும் ஆட்கொண்டு விடுவது பிரமிக்கவைக்கிறது.

இதற்கெல்லாம் அவருக்கு உந்துசக்தியாக இருந்தது எதுவாக இருக்கமுடியும்? சமூக அக்கறையும், தொலைநோக்கு பார்வையும் கொண்ட இடதுசாரி நிலைபாடுதான், புரட்சிக்குப் பின்பான சோவியத் சமூகத்தில், அக்கிராமத்தின் நிலப்பிரப்புக்கள் காலிசெய்துவிட்டுப் போன குதிரைக் கொட்டடிகள் கூடப் பள்ளிக்கூடங்களாக உருமாற்றம் அடைய வேண்டிய, அவசியமும், அவசரமும் இருப்பதை தனது கட்சியினூடாக, துய்ஷேனுக்கு தெளிவாக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் அத்தகைய மண் பள்ளிக்கூடத்திலிருந்து, மாஸ்கோ வரைச் சென்று கல்வியில் அறிஞராக பரிணமித்த அல்தினாய் போன்ற சிறுமிகளை அவரால் உருவாக்க முடிந்திருக்கிறது.

இயற்கையை பராமரிப்பதும், பாதுகாப்பதும்கூட கல்வியின் ஓர் அங்கம்தான் என்ற புரிதலை, தனது குழந்தை அல்தினாயோடு, துய்ஷேன் சேர்ந்து நட்டு வளர்த்த பாப்ளர் மரங்களின் வாயிலாக உணரமுடிகிறது.

ஒரு சமூக மாற்றத்தை உருவாக்கவும், நாடு போற்றும் அல்தினாய் என்ற கல்வியியல் அறிஞரை உருவாக்கவும், துய்ஷேனுக்கு குச்சிகளோ பாடப்புத்தகங்களோ, தேர்வு முறைகளோ தேவைப்படவில்லை. ஆனால் இன்ரு இவையெல்லாம் இருந்தும்கூட கெட்டித்தட்டிப்போன சமூக அமைப்பே நீடிக்கிறது.

இவ்வாறான தருணத்தில்தான் சிங்கிஸ் ஐத்மாத்தவின் துய்ஷேன் , முதல் ஆசிரியராக தமிழில். பூ. சோமசுந்தரம் மூலம் நமக்கு தேவையாயிருக்கிறார். இவரை உள்வாங்கிக் கொள்வதன் மூலம் திடகாத்திரமான கல்விச் சூழலை ஏற்படுத்துவதற்கான மனநிலை வாய்க்கப் பெறுவது உறுதி.

தந்தை, தாய், இல்லாத அனாதைச் சிறுமியான அல்தினாய் ஆகச்சிறந்த துயரங்களோடும், துடிப்போடுமிருந்தாள். அவளுக்குள் அமிழ்ந்து கிடந்த சாத்தியங்களை, தனது அணுகுமுறையின் மூலம், அவளுக்குள் நம்பிக்கையை விதைத்து வெளிக்கொண்டு வந்ததன் மூலம் அசாத்தியமான வேலையை அவரால் எளிமையாக நிறைவேற்ற முடிந்தது.

நமது காலத்திலும், இந்த முதல் ஆசிரியர் மாதிரியான நன்பர்களும், பள்ளிக்கூடங்களும் இருப்பதை நாம் அறிந்துக்கொள்வது கூடுதல் பலத்தை நமக்களிக்கும்


 


No comments: